விளையாட்டு

55 ரன்களுக்கு 7 விக்கெட்.. பேட்டிங்கில் திணறினாலும் பௌலிங்கில் அசத்தும் இந்தியா - ஆட்டம் யார் பக்கம்?

26 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து ஆடி வருகிறது.

55 ரன்களுக்கு 7 விக்கெட்.. பேட்டிங்கில் திணறினாலும் பௌலிங்கில் அசத்தும் இந்தியா - ஆட்டம் யார் பக்கம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 272-3 என்ற நிலையில் இருந்தது. இந்திய அணியின் ஓப்பனர்களான கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பாக ஆடியிருந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 117 ரன்களை எடுத்து அசத்தியிருந்தனர். அரைசதம் அடித்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் அவுட் ஆகியிருந்தார். தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் சிறப்பான சதத்தை அடித்து நாட் அவுட்டாக இருந்தார். இடையில் ராகுலுடன் கூட்டணி போட்ட கேப்டன் கோலி 35 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். கோலியிடம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சதம் வரவில்லை. இதன்பிறகு, ராகுலுடன் ரஹானே கூட்டணி போட்டார். அவுட் ஆஃப் ஃபார்மிலிருந்த ரஹானே முதல் நாளில் நன்றாக ஆடியிருந்தார். 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களை அடித்திருந்தார். ராகுலும் ரஹானேவும் ஆடிக்கொண்டிருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டு தடைப்பட்டது. இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 272-3 என்ற நிலையிலிருந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ராகுலும் ரஹானேவும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர். அடுத்ததாக பண்ட், அஷ்வின், ஷர்துல் தாகூர் என நல்ல வீரர்கள் இருந்ததால் இந்திய அணி எப்படியும் 400 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு.

இன்றைய நாளின் தொடக்கத்திலேயே இந்திய அணி தடுமாற தொடங்கியது. சதத்தை தாண்டி நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் ரபாடா வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கீப்பரான டீகாக்கிடம் கேட்ச் ஆனார். சதமே அடித்திருந்தாலும் ராகுல் தொடக்கத்திலிருந்தே ஷார்ட் பிட்ச் டெலிவரிகளுக்கு திணறிக்கொண்டுதான் இருந்தார். இடையில் ஒன்றிரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் கொடுத்து அதிர்ஷ்டவசமாக தப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று ஒரு ஷார்ட் பாலில் சரியாக சிக்கிக் கொண்டார்.

55 ரன்களுக்கு 7 விக்கெட்.. பேட்டிங்கில் திணறினாலும் பௌலிங்கில் அசத்தும் இந்தியா - ஆட்டம் யார் பக்கம்?

123 ரன்களில் ராகுல் அவுட் ஆன நிலையில் ரஹானேவும் 48 ரன்களில் இங்கிடியின் பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே டிஃபன்ஸ் ஆட முயன்று எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். முக்கியமான இரண்டு பேட்ஸ்மேன்களும் சீக்கிரமே வெளியேறியதால் இந்திய அணி தடுமாற தொடங்கியது. அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணி 55 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் மார்கோ ஜெனேசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்பிறகு, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் தனது பேட்டிங்கை துவங்கியது. கடைசி நேரத்தில் பேட்டிங்கில் கொஞ்சம் சொதப்பினாலும் பந்துவீச்சில் இந்திய அணி அசத்தியது. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் டீன் எல்கரை எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆனார். மார்க்ரமும் பீட்டர்சனும் கொஞ்சம் நின்று பார்ட்னர்ஷிப் அமைக்க தொடங்கினர். இதையும் இந்திய பௌலர்கள் நீண்ட நேரம் நிலைக்க செய்யவில்லை.

உணவு இடைவேளை முடிந்த முதல் ஓவரிலேயே 15 ரன்களிலிருந்த பீட்டர்சனை ஷமி போல்டாக்கினார். கொஞ்ச நேரத்திலேயே மார்க்ரமையும் ஷமி போல்டாக்கினார். வாண்-டர்-டஸனை சிராஜ் எட்ஜ் ஆக்கி ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆக்கினார். 26 ஓவர்கள் முடிந்திருக்கும் நிலையில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து ஆடி வருகிறது. பவுமாவும் டீகாக்கும் பேட்டிங் ஆடி வருகின்றனர். இடையில் காயம் காரணமாக பும்ரா பெவிலியனுக்கு சென்றது மட்டுமே இந்தியாவிற்கு பின்னடைவாக இருக்கிறது. மற்றபடி ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

banner

Related Stories

Related Stories