விளையாட்டு

ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? இந்தியாவின் நம்பர் 5 பேட்ஸ்மேன் யார்? - கோலியின் திட்டம் என்ன?

நாளைய போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில், நம்பர் 5 இல் ஆடப்போகும் வீரர் யார் என்பது மட்டும் ஒரு புதிராக இருக்கிறது.

ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? இந்தியாவின் நம்பர் 5 பேட்ஸ்மேன் யார்? - கோலியின் திட்டம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்தியா ஆடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்ச்சூரியனில் பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெற இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டிக்காக பரபரப்பாக ஆயத்தமாகி வருகின்றனர். இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான அணித்தேர்வில் பெரிதாக குழப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், இருக்கிற ஒரே ஒரு குழப்பம் மிகப்பெரியதாக இருக்கிறது. அந்த குழப்பம் என்ன? இந்திய அணி அதை எவ்வாறு தீர்க்கப்போகிறது?

நாளைய போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் 11 இடங்களில் ஏறக்குறைய 10 இடங்களுக்கான வீரர்கள் இவர்கள்தான் என நம்மால் கூறிவிட முடியும். ஆனால், நம்பர் 5 இல் ஆடப்போகும் வீரர் யார் என்பது மட்டும் ஒரு புதிராக இருக்கிறது. இந்திய அணியின் வழக்கமான நம்பர் 5 வீரராக ரஹானேவே இருந்தார். அவரே இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். இதனால், எல்லா போட்டிகளிலும் நம்பர் 5 இடம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி அவருக்கானதாகவே இருந்தது.

ஆனால், சமீபமாக அவர் சரியாக ஃபார்மிலேயே இல்லை. கடைசியாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டிலேயே சதமடித்திருந்தார். அந்த பாக்ஸிங் டே சதத்திற்கு பிறகு அடுத்த பாக்ஸிங் டே டெஸ்ட் வந்தாயிற்று. இடைப்பட்ட இந்த 1 வருடத்தில் ரஹானே பெரிதாக சோபிக்கவே இல்லை. அந்த ஆஸ்திரேலியா தொடரிலும் அந்த மெல்பர்ன் சதத்திற்கு பிறகு பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. அதன்பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரிலும் பெரிதாக ஆடவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டு தொடர் இவற்றிலுமே பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. தொடர்ச்சியான சொதப்பலால் இந்த இங்கிலாந்து தொடரே ரஹானேவுக்கு கடைசி வாய்ப்பாக கூட அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியுசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரில் முக்கிய வீரர்கள் பலரும் ஆடாததால் ரஹானேவே கேப்டனாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் போட்டியிலும் ரஹானே பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இரண்டு போட்டிகள் கொண்ட அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பி கேப்டனாகிவிட்டார். அந்தப் போட்டியில் காயத்தை காரணமாக கூறி ரஹானேவை பென்ச்சில் உட்கார வைத்திருப்பார்.

ரஹானேவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா? இந்தியாவின் நம்பர் 5 பேட்ஸ்மேன் யார்? - கோலியின் திட்டம் என்ன?

இதன்பிறகு, தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் டெஸ்ட் அணியில் ரஹானேவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். துணை கேப்டனாக இருந்ததால் அவருக்கு தன்னிச்சையாகவே அணியில் இடம் கிடைத்துக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்க தொடரில் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பதால் இனியும் ரஹானே தன்னிச்சையாக அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார் என்பதை தேர்வுக்குழு மறைமுகமாக அறிவித்திருக்கிறது.

ரஹானேவின் இடத்திற்கு போட்டியாக இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் வந்திருக்கிறார். சமீபத்தில் நியுசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரில் தனது அறிமுக போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே சதத்தையும் இரண்டாவது இன்னிங்ஸிலேயே அரைசதத்தையும் அடித்திருந்தார். ஸ்ரேயாஸின் இந்த மிரட்டலான ஆட்டம் ரஹானேவின் இடத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நாளைய போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் ரஹானே அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் மட்டுமே இருக்க முடியும். இவர்கள் போக ஹனுமா விஹாரியுமே நம்பர் 5 இடத்திற்கான வீரராக பார்க்கப்படுகிறார். சமீபத்தில் இந்தியா A அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று ஆடிய டெஸ்ட் தொடரில் 3 அரைசதங்களை அடித்திருக்கிறார். ஹனுமா விஹாரியுமே கூட ரஹானேவிற்கு போட்டியாக மாறக்கூடும்.

இந்த மூவரில் யாரை கோலி-டிராவிட் கூட்டணி தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பது சர்ப்ரைஸாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமே ஆகியிருக்கிறார். இந்தியாவில் வைத்து மட்டுமே டெஸ்ட் ஆடியிருக்கிறார். அவரின் முதல் வெளிநாட்டு தொடர் இதுதான். இதனால் ரஹானேவின் அனுபவத்தையும் வெளிநாட்டு ரெக்கார்டுகளையும் மனதில் வைத்து ரஹானேவுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாம் என்றும் கூட கோலி-டிராவிட் கூட்டணி எண்ணலாம்.

அப்படி ஒரு வாய்ப்பு ரஹானேவிற்கு கிடைக்கும்பட்சத்தில் கடந்த ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட்டில் மெல்பர்னில் எதை செய்தாரோ அதை நாளை சென்ச்சூரியனில் செய்தாக வேண்டும். இல்லையேல், ரஹானேவின் டெஸ்ட் கரியர் எதிர்காலம் மங்கத் தொடங்கும். ரஹானே என்ன செய்யப்போகிறார்?

banner

Related Stories

Related Stories