விளையாட்டு

#SMAT : கர்நாடகாவை பழி தீர்த்த தமிழ்நாடு... கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியனாக்கிய ஷாரூக்கான்!

அணிக்கு தேவையான சிக்சரை ஷாரூக்கான் அடித்துக் கொடுத்தார். ஆட்டம் முடிந்தது. தமிழ்நாடு சாம்பியன் ஆனது. 2019 தோல்விக்கு சரியான பதிலடியை கர்நாடகாவுக்கு தமிழ்நாடு கொடுத்திருக்கிறது.

#SMAT : கர்நாடகாவை பழி தீர்த்த தமிழ்நாடு... கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியனாக்கிய ஷாரூக்கான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய உள்ளூர் தொடரான சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. ஃபினிஷராக நின்று சிக்சர்களை பறக்கவிட்டு ஷாரூக்கான் ஒற்றை ஆளாக தமிழ்நாட்டை காப்பாற்றியிருக்கிறார்.

தமிழ்நாடு - கர்நாடகா இரண்டு அணிகளும் ஆடும் போட்டிகள் என்றாலே எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இரண்டு அணிகளும் இதற்கு முன் 2019 சீசனில் இறுதிப்போட்டியில் மோதியிருந்தன. அந்த போட்டியில் தமிழ்நாடு அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை தவறவிட்டிருக்கும்.

சையத் முஷ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் இதற்கு முன் 6 முறை கர்நாடகா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த 6 போட்டிகளிலும் வென்று சாம்பியன் ஆகியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 7 முறை மட்டுமே வென்றிருக்கிறது. இந்த ரெக்கார்டுகளுடனேயே இந்த இறுதிப்போட்டியும் தொடங்கியது. எதிர்பார்த்ததை போலவே இந்த போட்டியும் பரபர விருந்தாகவே அமைந்தது.

தமிழ்நாடு கேப்டனான விஜய் சங்கரே டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்திருந்தார். கர்நாடகா முதலில் பேட் செய்திருந்தது. தொடக்கத்தில் அந்த அணி வேகமாக விக்கெட்டுகளை விட்டு தடுமாறியது. முதல் 6 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இந்த பவர்ப்ளேயில் இடக்கை ஸ்பின்னரான சாய் கிஷோர் 3 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து கடம் மற்றும் மனீஷ் பாண்டேவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். சஞ்சய் யாதவ் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். சரத்- அபினவ் மனோகர் கூட்டணி கர்நாடகாவை கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டது.

இருவரும் சேர்ந்து 55 ரன்களை அடித்துக் கொடுத்தனர். இந்த கூட்டணியையும் சாய் கிஷொரே வீழ்த்திக் கொடுத்தார். சரத் சாய் கிஷோரின் பந்தில் சாய் சுதர்சனிடம் கேட்ச் ஆகியிருந்தார். இறுதியில் அபினவ் மனோகர்-ப்ரவீன் துபே ஆகியோர் அதிரடி காட்ட கர்நாடகாவின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கூடியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 151 ரன்களை எடுத்தது.

தமிழ்நாடுக்கு டார்கெட் 152. தமிழ்நாடும் அவ்வளவு எளிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை பயங்கரமாக தடுமாறினர். முதலில் நன்றாக பவுண்டரி சிக்சர்களை அடித்து தொடங்கிய ஹரி நிஷாந்த் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சாய் சுதர்சனும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இதன்பிறகு, விஜய் சங்கரும் ஜெகதீசனும் கூட்டணி போட்டனர். இருவரும் ரொம்பவே திணறினர். பந்தை சரியாக கனெக்ட் செய்து பெரிய ஷாட் அடிக்க முடியாமல் தடுமாறினர். தட்டிவிட்டு சிங்கிள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனால் தேவைப்பட்ட ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் எகிறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் கரியப்பாவின் ஓவரில் 46 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்த ஜெகதீசனும், 22 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்த விஜய் சங்கரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இப்போது அழுத்தம் இன்னும் கூடியது.

ஷாரூக்கான் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தார். 12 பந்துகளில் 24 ரன்களை எடுத்த ஷாரூக்கான் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார். சாய் கிஷோரின் பவுண்டரி பௌலரின் ப்ரதொ ஜெயின் எக்ஸ்ட்ராக்கள் இவற்றின் உபயத்தால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டி வந்தது. சிக்சர் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம். ப்ரதீக் ஓடி வருகிறார்.

லெக் ஸ்டம்பில் யார்க்கருக்கு முயன்று ஸ்லாட்டில் வீசுகிறார் அடுத்த நொடியே காற்றை கிழித்துக் கொண்டு லெக் சைடில் பந்து பறந்தது. அணிக்கு தேவையான சிக்சரை ஷாரூக்கான் அடித்துக் கொடுத்தார். ஆட்டம் முடிந்தது. தமிழ்நாடு சாம்பியன் ஆனது. 2019 தோல்விக்கு சரியான பதிலடியை கர்நாடகாவுக்கு தமிழ்நாடு கொடுத்திருக்கிறது. மூன்றாவது முறையாக தமிழ்நாடு சாம்பியன் ஆகியிருக்கிறது. கடந்த சீசனிலும் தமிழ்நாடே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. ஆக, தொடர்ச்சியாக தமிழ்நாடு வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

banner

Related Stories

Related Stories