விளையாட்டு

மீண்டும் ஒரு அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்.. தொடரை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

மீண்டும் ஒரு அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்.. தொடரை வென்றது இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இந்த போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியை வென்றிருக்கும் நிலையில் 2-0 என இந்த தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. ரோஹித் - ட்ராவிட் கூட்டணியின் முதல் வெற்றி இது.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாசை வென்றிருந்தார். வழக்கம்போல சேஸிங்கையே தேர்வு செய்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. காயமுற்றிருக்கும் சிராஜிற்கு பதில் ஐ.பி.எல் இல் ஊதா தொப்பியை வென்ற ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டிருந்தார்.

கடந்த போட்டியில் மிகவும் மெதுவாக ஸ்கோர் செய்ய தொடங்கிய நியுசிலாந்து அணி இந்த போட்டியில் தங்கள் அணுகுமுறையை மாற்றியிருந்தனர். தொடக்கத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹார் வீசிய தொடக்க ஓவர்களில் கப்தில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து வெளுத்தார். ஆனால், இவர் நீண்ட நேரம் நிற்கவில்லை. தீபக் சஹாரின் ஓவரில் ஒரு சிக்சரை அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார். 15 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். பவர்ப்ளே முடிவில் நியுசிலாந்து அணி 64 ரன்களை அடித்து ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால், பவர்ப்ளேக்கு பிறகு ரன்ரேட் மெதுமெதுவாக இறங்கி சொதப்பியது.

மீண்டும் ஒரு அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்.. தொடரை வென்றது இந்தியா!

7-13 அஷ்வின் மற்றும் அக்சர் படேல் வீசிய இந்த மிடில் ஓவர்களில் மூன்றே மூன்று பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர். நிறைய டாட்கள் ஆடினர். டேரில் மிட்செல் 28 பந்துகளில் 31 ரன்களையும் சாப்மன் 17 பந்துகளில் 21 ரன்களையும் அடித்து ஹர்ஷல் படேல் மற்றும் அக்சர் படேலின் பந்துகளில் அவுட் ஆகியிருந்தனர்.

கடைசி 5 ஓவர்கள் நியுசிலாந்து இன்னும் மோசமாக ஆடியது. 16-20 ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். 16 வது ஓவரில் அஷ்வின் டிம் சீஃபெர்ட்டை வீழ்த்தியிருப்பார். 17 மற்றும் 19 வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் மொத்தமே 16 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். மொத்தமாக 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முதல் போட்டியிலேயே ஹர்ஷல் படேல் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டார்.

நியுசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்திருந்தது. பவர்ப்ளேயில் அதிரடியாக வெளுத்திருந்த நியுசிலாந்தை இந்திய பௌலர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தனர். 154 டார்கெட்டை இந்திய அணி சுலபமாகவே சேஸ் செய்து முடித்தது. ரோஹித் & ராகுல் ஓப்பனிங் கூட்டணியே 117 ரன்களை அடித்துவிட்டனர்.

மீண்டும் ஒரு அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்.. தொடரை வென்றது இந்தியா!

மெதுவாக ஆரம்பித்து நிலைத்து நின்று இருவரும் சிறப்பாக அடித்திருந்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா சிக்சர்களாக அடித்து வெளுத்திருந்தார். இருவருமே அரைசதம் கடந்தனர். ராகுல் 65 ரன்களிலும் ரோஹித் 55 ரன்களிலும் டிம் சவுத்தியின் பந்தில் அவுட் ஆனார். சூரியகுமார் யாதவும் வந்த வேகத்திலேயே அவுட் ஆனார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் கடந்த போட்டியை போலவே கடைசி நேரத்தில் கொஞ்சம் அழுத்தம் கூடுவது போல தெரிந்தது. ஆனால், ரிஷப் பண்ட் அழகாக ஒரு சிக்சரை அடித்து வெற்றிகரமாக மேட்ச்சை முடித்துவைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரையும் இந்தியா வென்றிருக்கிறது. ரோஹித் - ராகுல் ட்ராவிட் கூட்டணியின் முதல் வெற்றி இது. தொடரை வென்றுவிட்டதால் அடுத்த போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான் போன்ற பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

banner

Related Stories

Related Stories