விளையாட்டு

தோனியின் கோட்டையில் 2 வது டி20 போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 வது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

தோனியின் கோட்டையில் 2 வது டி20 போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 வது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியை வென்று முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியையும் வெல்லும்பட்சத்தில் இந்திய அணி இந்த தொடரை வெல்லும்.

இந்த போட்டி ஜார்கண்ட்டின் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சொந்த ஊராகும். அதனால் இந்த போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 2020 ஆகஸ்ட் 15 இல் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவருக்கு ஒரு பிரிவு உபச்சார போட்டியை ராஞ்சியில் வைத்து நடத்த வேண்டும் என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் என பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், பிசிசிஐயும் தோனியும் அதைப்பற்றி இன்னமும் ஒரு முடிவை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் போட்டியை காண தோனி நேரில் வரக்கூடும் எனும் தகவலும் பரவி வருகிறது. தோனி நேரில் வரும்பட்சத்தில் ரசிகர்கள் பயங்கர உற்சாகமடைவார்கள்.

இந்திய அணி கடந்த போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. ஆனால், இந்த வெற்றியை ஒரு முழுமையான சௌகரியமான வெற்றியாக பார்க்க முடியாது. ஏனெனில், எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை கடைசி வரை இழுத்து சென்று வென்றிருந்தனர். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே சில குழப்பங்கள் வெளிப்பட்டிருந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரோஹித் சர்மாவும் ராகுலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் மிகச்சிறப்பாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டிருந்தனர். நம்பர் 3 இல் சூர்ய்குமார் யாதவ் இறங்கியிருந்தார். அவருமே சிறப்பாகவே ஆடியிருந்தார். கடந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையே அவர்தான் வென்றிருந்தார். இதன்பிறகுதான் பிரச்சனையே.

அதாவது, உள்ளூர் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் கலக்கிய வெங்கடேஷ் ஐயரை ப்ளேயிங் லெவனுக்குள் சேர்த்திருக்கின்றனர். அவர் ஒரு அக்மார்க் ஓப்பனர். ஆனால், அவரை ஃபினிஷர் ரோலில் ஆட வைக்கின்றனர். இதில் கூட பிரச்சனையில்லை. பரிச்சார்த்த முயற்சியாக செய்து பார்க்கிறார்கள். ஆனால், அவருக்கு ஃபினிஷர் ரோல் கொடுத்தால் அந்த ரோலில் அவரை முழுமையாக ஆட வைக்க வேண்டும் அல்லவா? அதை இந்திய அணி செய்திருக்கவில்லை. கடந்த போட்டியில் 17 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனார். உடனே வெங்கடேஷ் ஐயர் இறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இறக்கப்பட்டார். இது பின்னடைவாக அமைந்தது. அவர் 8 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே அடித்து ரன்ரேட் அழுத்தத்தை ஏற்படுத்தி பரபரப்பை கிளப்பிவிட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 3-4 இல் இறங்குபவர். அவரை கொண்டு வந்து டெத் ஓவரில் ஃபினிஷராக இறக்கியது சொதப்பலான விஷயமாக அமைந்தது. வெங்கடேஷ் ஐயர்தான் ஃபினிஷர் எனில் 15 வது ஓவரை தாண்டிவிட்டாலே அவர் தான் இறங்க வேண்டும்.

அதேமாதிரி வெங்கடேஷ் ஐயர் ஒரு ஆல்ரவுண்டர். ஆனால், கடந்த போட்டியில் அவர் ஒரு ஓவரை கூட வீசியிருக்கவில்லை. சாப்மன்-கப்தில் கூட்டணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட போது மற்ற பௌலர்கள் திணறிய நிலையில் வெங்கடேஷ் ஐயரை முயன்றிருக்கலாம். மிடில் & டெத்தில் தடுமாறிய தீபக் சஹார் அல்லது சிராஜிடம் ஒரு ஓவரை கட் செய்து வெங்கடேஷுக்கு கொடுத்திருக்கலாம். நடந்து கொண்டிருக்கும் சையத் முஷ்தாக் அலி ட்ராஃபியில் வெங்கடேஷ் மிகச்சிறப்பாக பந்தும் வீசியிருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், சிராஜ், தீபக் சஹார் என மூவர் இருக்கிறார்கள். மூவருமே பவர்ப்ளேயில் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஆனால், டெத் ஓவர்களில் கொஞ்சம் சுமாராகவே வீசுவர். இந்த மூவரில் ஒருவரை பென்ச்சில் வைத்துவிட்டு ஹர்ஷல் படேல் அல்லது ஆவேஷ் கானே லைன் அப்பில் சேர்த்தில் டெத் ஓவர் பௌலிங்கும் மெருகேறும்.

நியுசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் இந்திய அணியின் டாப் ஆர்டரை சீக்கிரம் வீழ்த்திவிட்டால் போட்டி அவர்களின் கைக்கு சென்றுவிட அதிக வாய்ப்பிருக்கிறது. அதற்கு, உலகக்கோப்பையில் வீசியதை போன்ற ஸ்பெல்லை ட்ரெண்ட் போல்ட் வீச வேண்டும்.

பேட்டிங்கில் முதல் 10 ஓவர்களை முழுக்க முழுக்க பொறுமையாக ஆடி விட்டு கடைசி 10 ஓவர்களை வெளுப்பதே நியுசிலாந்தின் வழக்கமாக இருக்கிறது. முதல் 10 ஓவர்களில் ரன்ரேட் விழாமல் இன்னும் கொஞ்சம் சிறப்பாக ஆடும்பட்சத்தில் ஒட்டுமொத்த ஸ்கோரை இன்னும் பெரிதாக்க முடியும் அதன் மூலம் பௌலர்களுக்கும் இந்தியாவை கட்டுப்படுத்த கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

போட்டியை வென்று இந்தியா தொடரை வெல்லுமா அல்லது நியுசிலாந்து தொடரை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories