விளையாட்டு

ஏற்ற இறக்கங்களுடன் பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டி.. சென்னையுடன் இறுதிப்போட்டியில் மோதும் கொல்கத்தா!

கொல்கத்தா அணி சென்னைக்கெதிரான இறுதிப்போட்டியில் மோத தகுதிப்பெற்றிருக்கிறது

ஏற்ற இறக்கங்களுடன் பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டி.. சென்னையுடன் இறுதிப்போட்டியில் மோதும் கொல்கத்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியை கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ஆட கொல்கத்தா அணி தகுதிப்பெற்றிருக்கிறது.

கொல்கத்தா அணியின் கேப்டனான இயான் மோர்கனே டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்தார். இந்த போட்டிக்கு முன்பாக இரண்டு போட்டிகளை இதே ஷார்ஜா மைதானத்தில் ஆடி வென்றிருந்ததால் கொல்கத்தா அணி கொஞ்சம் பாசிட்டிவ்வான மனநிலையுடனே இருந்தது.

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. தொடக்கம் டெல்லி அணிக்கு கொஞ்சம் நன்றாகவே அமைந்திருந்தது. பிரித்திவி ஷா, தவான் இருவருமே பவுண்டரிக்களையும் சிக்சரகளையும் அடித்து அதிரடியாக தொடங்கியிருந்தனர். குறிப்பாக, தவான் சுனில் நரைனின் பந்தில் இரண்டு சிக்சர்களை தொடர்ந்து அடித்து மிரட்டியிருந்தார். ஆனால், இதெல்லாம் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி அறிமுகமாகும் வரைதான். 5 வது ஓவரில் வருணின் கையில் மோர்கன் பந்தை கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஒரு கூக்ளியில் பிரித்திவி ஷாவின் விக்கெட்டை வருண் வீழ்த்தினார். பிரித்திவி ஷா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டெல்லி அணிக்கு முழுவதும் வீழ்ச்சிதான். நம்பர் 3 இல் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டாய்னிஸ் வந்திருந்தார். அவர் அதிரடியாக ஆடி ரன் ரேட்டை உயர்த்துவார் என எதிர்பார்க்கையில் ஷார்ஜாவின் மந்தமான பிட்ச்சில் ஆடுவதற்கு ரொம்பவே தடுமாறினார். 23 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்தார். தவானும் அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறினார். ரன்ரேட் பயங்கரமாக கீழே விழுந்தது. கடைசியில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஹெட்மயரும் கொஞ்சம் அதிரடி காட்ட டெல்லி அணியின் ஸ்கோர் 134 ரன்களாக உயர்ந்தது.

ஷார்ஜா மைதானத்தில் ஆவரேஜ் ஸ்கோர் 137. அதற்கும் குறைவாகவே டெல்லி அணி எடுத்திருந்தது. கொல்கத்தா அணி எளிமையாக வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரியே மிகச்சிறப்பாக சேஸ் செய்தனர். வெங்கடேஷ் ஐயரும் சுப்மன் கில்லும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்திருந்தனர். வெங்கடேஷ் ஐயர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடிக்க, சுப்மன் கில் அவருக்கு சப்போர்ட் செய்து பொறுமையாக ஆடினார். இந்த கூட்டணியே போட்டியை முடித்துவிட்டது என்றே தோன்றியது. ஆனால், கடைசி 4 ஓவர்களில் போட்டி தலைகீழாக மாறியது.

17 வது ஓவரில் ஆவேஷ் கான் 2 ரன்களை மட்டுமே கொடுத்து சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். 18 வது ஓவரில் ரபாடா ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். 19 வது ஓவரில் நோர்கியா 3 ரன்களை மட்டுமே கொடுத்து மோர்கனின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி பரபரப்பின் உச்சத்தை தொட்டது. அஷ்வின் கைக்கு பந்து சென்றது. முதல் பந்தில் ஒரு ரன். இரண்டாவது பந்து டாட். மூன்று மற்றும் நான்காவது பந்தில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தது. 2 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ராகுல் திரிபாதி சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். எளிமையாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசி வரை இழுத்து பரபரப்பை கூட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி சென்னைக்கெதிரான இறுதிப்போட்டியில் மோத தகுதிப்பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணி சென்னைக்கு கடுமையான போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories