விளையாட்டு

பஞ்சாப் அதிரடி வெற்றி.. தோல்வியில் துவளும் சென்னை சூப்பர் கிங்ஸ் - தடைகளை தாண்டி சாதிக்குமா சென்னை?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நேற்றை போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது.

பஞ்சாப் அதிரடி வெற்றி.. தோல்வியில் துவளும் சென்னை சூப்பர் கிங்ஸ் -  தடைகளை தாண்டி சாதிக்குமா சென்னை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியிருந்தன. இதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸுக்கு ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்ட சென்னை அணி லீக் போட்டியில் கடைசியாக ஆடிய 3 போட்டியிலும் தோற்றிருக்கிறது.

பஞ்சாபுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணியே முதலில் பேட்டிங் செய்தது. நல்ல ஃபார்மில் இருந்த ருத்ராஜ் கெய்க்வாட் நேற்று சீக்கிரமே அவுட் ஆனார். 12 ரன்களில் அர்ஷ்தீப்பின் பந்துவீச்சில் ஷாரூக்கானிடம் கேட்ச் ஆகி வெளியேறியிருந்தார். இதன்பிறகு, சென்னை அணி கடுமையாக தடுமாறியது. மொயீன் அலி டக் அவுட் ஆக, உத்தப்பா 2 ரன்னிலும் அம்பத்தி ராயுடு 4 ரன்னிலும் வெளியேறியிருந்தனர். அர்ஷ்தீப் சிங்கும் க்றிஸ் ஜோர்டனும் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதன்பிறகு, ஃபாப் டூ ப்ளெஸ்சிஸுடன் சென்னை அணியின் கேப்டன் தோனி கைக்கோர்த்தார். தோனி இப்போது பழைய தோனி இல்லை. எல்லாவிதமான பந்துகளுக்கும் திணறுகிறார். குறிப்பாக, லெக் ஸ்பின்னர்கள் வீசும் கூக்ளிக்கு கடுமையாக திணறுகிறார். தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி மூன்று முறை தோனிக்கு பந்து வீசி மூன்று முறையும் அவரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். மூன்றுமே கூக்ளிகள். நேற்றும் ரவி பிஷ்னோயின் கூக்ளியில்தான் ஸ்ட்ம்பை பறிகொடுத்து 15 பந்துகளில் 12 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகியிருந்தார்.

பஞ்சாப் அதிரடி வெற்றி.. தோல்வியில் துவளும் சென்னை சூப்பர் கிங்ஸ் -  தடைகளை தாண்டி சாதிக்குமா சென்னை?

சென்னை அணியின் மிடில் ஆர்டர் மொத்தமாக சொதப்பியது. ஆனாலும் டூப்ளெஸ்சிஸ் ஒரு எண்ட்டில் நிலைத்து நின்று நம்பிக்கையளித்து கொண்டிருந்தார். அவரின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. 55 பந்துகளில் 76 ரன்களை அடித்து கடைசி ஓவரில் டூ ப்ளெஸ்சிஸ் அவுட் ஆகியிருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 134-6 ஆக இருந்தது. பஞ்சாப் அணிக்கு டார்கெட் 135.

பஞ்சாப் அணி இந்த போட்டியை எப்படி வென்றாலும் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற முடியாது என்பதால், எந்த அழுத்தத்தையுன் ஏற்றிக்கொள்ளாமல் ரொம்பவே இலகுவாக அதிரடி காட்டினார். குறிப்பாக, இத்தனை நாட்களாக கைகள் கட்டப்பட்டதை போல ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று ஒவ்வொரு பந்தையும் சிக்சர் அடிக்கும் முனைப்போடு ஆடினார்.

சென்னை அணியின் அத்தனை பௌலர்களையும் சிதறடித்தார். 42 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். 7 பவுண்டரிகள் 8 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 233. 13 வது ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டார். பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பஞ்சாப் அதிரடி வெற்றி.. தோல்வியில் துவளும் சென்னை சூப்பர் கிங்ஸ் -  தடைகளை தாண்டி சாதிக்குமா சென்னை?

ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றுவிட்ட பிறகு சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றிருக்கிறது. இது புள்ளிப்பட்டியலில் சென்னை அணிக்கு பெரிய பாதிப்புகளை கொடுக்காவிடிலும் கவலைக்குரிய விஷயம்தான். ப்ளே ஆஃப்ஸுக்குள் செல்லும்போது வெற்றியோடு பாசிட்டிவ்வாக சென்றிருக்க வேண்டும். ஆனால், தொடர் தோல்விகளோடு வருத்தமாக ப்ளே ஆஃப்ஸுக்குள் சென்னை நுழைந்திருக்கிறது. தங்களுடைய மொமண்டத்தை மொத்தமாக இழந்திருக்கிறது.

கடந்த சீசனில் பெங்களூர் அணி இப்படித்தான் சிறப்பாக ஆடி ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்ற பிறகு, 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. ப்ளே ஆஃப்ஸுக்குள் தோல்வியோடு நுழைந்து ப்ளே ஆஃப்ஸிலும் தோற்றது. அந்த மாதிரியான சூழலில்தான் சென்னை அணி இப்போது இருக்கிறது. ஆனால், முதல் இரண்டு இடங்களுக்குள் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு செல்ல சென்னை அணிக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். இது ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. தடைகளை தாண்டி சாதிக்குமா சென்னை?

banner

Related Stories

Related Stories