விளையாட்டு

#IPL2021 : வெற்றிக் கணக்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்.. பஞ்சாப் கோட்டைவிட்டது எங்கே?

பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் சேஸ் செய்த மும்பை அணி 19 ஓவர்களிலேயே ஆட்டத்தை வென்றது.

#IPL2021 : வெற்றிக் கணக்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ்.. பஞ்சாப் கோட்டைவிட்டது எங்கே?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 135-6 என்ற ஸ்கோரை எட்டியிருந்தது. சேஸ் செய்த மும்பை அணி 19 ஓவர்களிலேயே ஆட்டத்தை வென்றிருந்தது. இரண்டு அணிகளின் வெற்றி தோல்விக்கும் காரணமாக இருந்த சில தருணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

பஞ்சாபின் பவர்ப்ளே பேட்டிங்:

எப்போதும் பஞ்சாப் அணி சார்பில் ஓப்பனர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலுமே களமிறங்குவார்கள். இது ஒரு வெற்றிக்கூட்டணி. ஆனால், நேற்றைய போட்டியில் மயங்க் அகர்வால் இல்லை. அவருக்கு பதிலாக மந்தீப் சிங் ப்ளேயிங் லெவனில் இருந்தார். மந்தீப் சிங் எந்த ஆர்டரிலும் ஆடக்கூடியவர். அதனால் அவரை கீழே இறக்கிவிட்டு ராகுலுடன் கெய்ல் ஓப்பனராக இறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படி செய்திருக்கவில்லை. இதனால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி கடுமையாக சொதப்பியிருந்தது. 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மந்தீப் சிங் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார். இது ஒரு ரன்ரேட் அழுத்தத்தை கொடுத்தது. இதன் விளைவு பவர்ப்ளேக்கு பிறகு தெரிய வந்தது.

பொல்லார்டின் ஒரு ஓவர்:

பவர்ப்ளே 6 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே வந்திருந்ததால் உருவாகியிருந்த ரன்ரேட் அழுத்தத்தால் பொல்லார்ட் வீசிய 7 வது ஓவரில் அடுத்தடுத்து கெய்லும் ராகுலும் அவுட் ஆகியிருந்தனர். பொல்லார்ட் ஆறாவது பௌலர் என்பதாலும் குறைந்திருக்கும் ரன்ரேட்டை மேலேற்ற வேண்டும் என்பதாலும் இந்த ஓவரை ராகுலும் கெய்லும் டார்கெட் செய்திருந்தனர். ஆனால், பொல்லார்ட் ஸ்லோ ஷார்ட் டெலிவரிக்களாக வீசி கெய்லை 1 ரன்னிலும் ராகுலை 21 ரன்னிலும் கேட்ச்சாக வைத்தார். ஒருவேளை பவர்ப்ளேயில் கூடுதலாக 10 ரன்கள் வந்திருந்தால் இருவரும் இப்படி அவசரப்பட்டு அவுட் ஆகியிருக்க மாட்டனர்.

ரவி பிஷ்னோய் ஓவர்:

மும்பைக்கு எப்படி பொல்லார்ட் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தாரோ அதேமாதிரி பஞ்சாப் அணிக்கு ரவி பிஷ்னோய் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். பவர்ப்ளேயின் நான்காவது ஓவரை வீசிய பிஷ்னோய் இரண்டு அடுத்தடுத்த கூக்ளிக்களில் ரோஹித்தின் விக்கெட்டையும் சூரியக்குமாரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இரண்டுமே பெரிய விக்கெட்டுகள். இந்த சமயத்தில் மும்பை அணி 16-2 என இருந்தது. ஆனால், இந்த நல்ல வாய்ப்பை பஞ்சாப் அணி தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சவுரப் திவாரியின் பொறுப்பான ஆட்டம்:

மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்புவதால் இஷன் கிஷனை வெளியே வைத்துவிட்டு சவுரப் திவாரியை மும்பை அணி உள்ளே கொண்டு வந்திருந்தது. தன்னுடைய தேர்வை நியாயப்படுத்தும் வகையில் சவுரப் திவாரி சிறப்பாக செயல்பட்டிருந்தார். 136 தான் டார்கெட் என்பதால் மும்பை அணிக்கு ரன்ரேட் அழுத்தம் கிடையாது. விக்கெட் அழுத்தமே இருந்தது. அதை புரிந்துக்கொண்டு பொறுப்பாக நின்று ஆடினார். மும்பையின் மற்ற பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னுக்கு திணறிய போது சவுரப் திவாரி மட்டும் சிறப்பாக ஸ்பின்னை எதிர்க்கொண்டார். 37 பந்துகளில் 45 ரன்களை அடித்து அவுட் ஆகியிருந்தார். இவர் அமைத்து கொடுத்த அடித்தளத்தை ஹர்திக் பாண்ட்யாவும் பொல்லார்டும் சிறப்பாகச பயன்படுத்தி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர்.

கேட்ச் ட்ராப்கள்:

பேட்டிங், பௌலிங் எப்படியிருந்தாலும் ஒரு அணியின் ஃபீல்டிங்கும் கேட்ச் பிடிக்கும் திறனும் சிறப்பாக இருந்தாலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும். இந்த விஷயத்திலும் பஞ்சாப் சறுக்கியிருந்தது. டீகாக், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்ட்யா என முக்கிய பேட்ஸ்மேன்கள் கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டிருந்தனர். அவற்றை சரியாக பிடித்திருந்தாலே போட்டியை வென்றிருக்கலாம்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு முடிவுரை எழுதி வெற்றிப்பாதையை நோக்கி மும்பை அணி பயணிக்க தொடங்கியிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு இன்னமும் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் மும்பை அணி இன்னும் சிறப்பாக ஆடி சௌகரியமாக வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

banner

Related Stories

Related Stories