விளையாட்டு

அடித்து வெளுத்திருக்க வேண்டிய ஓவரில் கோட்டை விட்ட சென்னை; நடத்திக்காட்டாத ஜடேஜா.. திரில் வெற்றியில் CSK!

கிட்டத்தட்ட போட்டி கொல்கத்தா பக்கமாகவே சென்றுவிட்டது போல தோன்றியது. ஆனாக், ஜடேஜா அதை நடக்கவிடவில்லை.

அடித்து வெளுத்திருக்க வேண்டிய ஓவரில் கோட்டை விட்ட சென்னை; நடத்திக்காட்டாத ஜடேஜா.. திரில் வெற்றியில் CSK!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று மாலை நடைபெற்றிருந்தது. கடைசி பந்து வரை சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. சென்னை அணியில் ப்ராவோவுக்கு பதில் சாம் கரன் சேர்க்கப்பட்டிருந்தார்.

கொல்கத்தா அணியின் அதிரடி ஓப்பனர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவருமே இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுப்மன் கில் 9 ரன்களில் ரன் அவுட் ஆகியிருந்தார். வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களில் ஷர்துல் தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆகியிருந்தார். ஓப்பனர்கள் இருவரும் சொதப்பினாலும் நம்பர் 3 பேட்ஸ்மேனான ராகுல் திரிபாதி நின்று கொஞ்சம் அதிரடியாகவே ஆடியிருந்தார். இன்னொரு முனையில் கேப்டன் இயான் மோர்கன் 8 ரன்களில் பவுண்டரி லைனில் டூப்ளெஸ்சிஸால் அட்டகாசமாக கேட்ச் செய்யப்பட்டிருந்தார்.

இடையில் பேட்டி கொடுத்த கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த டேவிட் ஹஸ்ஸி 'எங்கள் இலக்கு 170 தான். அதைநோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறோம்' என பேசியிருந்தார்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதியும் 43 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். இந்த சமயத்தில் கொல்கத்தா கொஞ்சம் சறுக்குவது போல தோன்றியது. கொல்கத்தாவின் இலக்கான 170 ஐ எட்டமாட்டார்கள் என்ற சூழலே நிலவியது. ஆனால், கடைசியில் நிதிஷ் ராணா, ரஸல், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கணிசமான அதிரடியால் கொல்கத்தா அணி 171 ரன்களை எட்டியது.

சென்னை அணிக்கு டார்கெட் 172. கொல்கத்தாவை விட சென்னை அணி சிறப்பாகவே பேட்டிங்கை தொடங்கியது. ருத்ராஜ் கெய்க்வாட் 40, டூ ப்ளெஸ்சிஸ் 43, மொயீன் அலி 32 என டாப் 3 பேட்ஸ்மேன்களும் வழக்கம்போல சிறப்பாகவே ஆடியிருந்தனர். ஆனால், இவர்கள் அவுட் ஆன பிறகு சென்னை அணிக்கு அழுத்தம் கூடியது. கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், சென்னை அணி தடுமாறியிருந்தது.

அடித்து வெளுத்திருக்க வேண்டிய பார்ட் டைமரான வெங்கடேஷ் ஐயரின் ஓவரில் 5 ரன்களை மட்டுமே எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி வீசிய 18 வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே எடுத்து தோனி, ரெய்னா இருவருமே அவுட் ஆகியிருந்தனர். கிட்டத்தட்ட போட்டி கொல்கத்தா பக்கமாகவே சென்றுவிட்டது போல தோன்றியது. ஆனாக், ஜடேஜா அதை நடக்கவிடவில்லை.

பிரஷித் கிருஷ்ணா வீசிய 19 ஓவரில் மட்டும் 2 பவுண்டரி 2 சிக்சர்களை வெளுத்தெடுத்தார். இதன்மூலம் அந்த ஓவரில் 22 ரன்கள் வந்து சேர்ந்தது. இப்போது கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவை. ஆனாலும், கொல்கத்தா கொஞ்சம் விளையாட்டு காட்டியது. சுனில் நரைன் அந்த ஓவரை சிறப்பாக வீச ஜடேஜா அவுட் ஆனார். கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி அல்லது சூப்பர் ஓவர் என்ற நிலை. தீபக் சஹார் அந்த பந்தை அழகாக மடக்கி அடித்து ரன் ஓடி சிறப்பாக முடித்து வைத்தார்.

இந்த போட்டியை சென்னை அணி வென்றதற்கு மிக முக்கிய காரணம் ஜடேஜாவே. பேட்டிங்கில் அவர் அடித்த 22 ரன்கள் மட்டுமில்லை, பௌலிங்கில் மிடில் ஓவரில் 4 ஓவர்களை வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்து 1 முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். மற்றவர்களும் சிறப்பாக ஆடியிருந்தாலும் ஜடேஜாவின் பெர்ஃபார்மென்ஸே மேட்ச் வின்னிங் பெர்ஃபார்மென்ஸாக அமைந்திருந்தது

banner

Related Stories

Related Stories