விளையாட்டு

சாம்சனின் போராட்டம் வீண்... எளிதில் வென்று ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

இந்த வெற்றியின் மூலம் 8 வெற்றிகளை பெற்று முதல் அணியாக டெல்லி அணி ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

சாம்சனின் போராட்டம் வீண்... எளிதில் வென்று ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று மாலை நடைபெற்றிருந்தது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 8 வெற்றிகளை பெற்று முதல் அணியாக டெல்லி அணி ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

டெல்லி அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. அந்த அணியின் சார்பில் தவானும் பிரித்திவி ஷாவும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். இருவருமே நல்ல ஃபார்மில் இருந்தனர். ஆனால், நேற்றைய போட்டியில் அவ்வளவு சிறப்பாக இருவரும் ஆடியிருக்கவில்லை. பவர்ப்ளேக்குள்ளாகவே இருவரும் அவுட் ஆகியிருந்தனர். பிரித்திவி ஷா 10 ரன்களிலும் தவான் 8 ரன்களிலும் சேத்தன் சக்காரியா மற்றும் கார்த்திக் தியாகியின் பந்துவீச்சில் அவுட் ஆகியிருந்தனர்.

ஃபார்மிலிருந்த இரண்டு வீரர்கள் சீக்கிரமே அவுட் ஆனதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொஞ்சம் தடுமாறியே போனது. ஆனால், அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் கேப்டன் ரிஷப் பண்ட்டும் ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அவசரமேப்படாமல் செட் ஆகி நின்றுவிட்டே அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஸ்பின்னர்கள் அறிமுகமானவுடனேயே தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். தப்ரேஸ் ஷம்சி. டி20 கிரிக்கெட் உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர். சைனா மேன் வகை பந்துவீச்சாளர். நேற்றுதான் தனது முதல் ஐ.பி.எல் போட்டியை ஆடியிருந்தார். அபாயகரமான பௌலர் என்பதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் ஸ்ரேயாஸ் ஐயரும் பண்டும் இவர் ஓவரை குறிவைத்து அடித்தனர்.

சாம்சனின் போராட்டம் வீண்... எளிதில் வென்று ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கையில் 43 ரன்களில் ராகுல் திவேதியாவின் பந்துவீச்சில் இறங்கி வந்து ஸ்டம்பிங் ஆனார். இடையில் முஷ்டபிஷுர் ரஹ்மான் பந்தில் ரிஷப் பண்ட்டும் 24 ரன்களில் போல்டாகியிருந்தார்.

இதன்பிறகு, ஹெட்மயர் மிகச்சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சேத்தன் சக்காரியா மற்றும் கார்த்திக் தியாகி வீசிய 15, 16 இந்த இரண்டு ஓவரில் மட்டும் 5 பவுண்டரிகளை அடித்திருந்தார். ஹெட்மயரின் அதிரடி மற்றும் லலித், அக்சர் இருவரின் பங்களிப்பால் டெல்லி அணி 154 ரன்களை எட்டியது.

ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் டார்கெட். ஆரம்பத்திலிருந்தே ராஜஸ்தான் அணி தடுமாற தொடங்கியது. முதல் ஓவர் தொடங்கி பவர்ப்ளேயில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தனர். லிவிங்ஸ்டன், ஜெய்ஸ்வால், மில்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆவேஷ் கான், ஆண்ட்ரிச் நோர்கியா ஆகிய மூவரும் வீழ்த்தியிருந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடியிருந்த எவின் லீவிஸுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்திருந்தது.

இந்த ஆரம்பகட்ட வீழ்ச்சியிலிருந்து ராஜஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை. ஒரு முனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட் விடாமல் நின்று கொண்டிருக்க, இன்னொரு முனையில் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கடைசி வரை நாட் அவுட்டாக இருந்த சஞ்சு சாம்சனால் ஆறுதல் இன்னிங்ஸ் மட்டுமே ஆட முடிந்தது.

53 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தார். அணியின் வெற்றிக்கு சாம்சனின் போராட்டம் மட்டும் போதுமானதாக இல்லை. இதனால், ராஜஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் முன்னேறியிருக்கிறது. மேலும், ப்ளே ஆஃப்ஸ்க்கும் தகுதிப்பெற்றுவிட்டது.

banner

Related Stories

Related Stories