விளையாட்டு

பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா: நம்பிக்கை ஒளி பாய்ச்சும் இந்திய வீரர், வீராங்கனைகள் !

1960 லிருந்து 2016 வரை இந்தியா வென்றிருந்த மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையே 12 தான். ஆனால், இந்த ஒரே பாராலிம்பிக்கிலட்டும் இதுவரை இந்தியா 12 பதக்கங்களை வென்றிருக்கிறது.

பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா: நம்பிக்கை ஒளி பாய்ச்சும் இந்திய வீரர், வீராங்கனைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இந்த முறை இந்திய வீரர்/வீராங்கனைகள் மிகச்சிறப்பாக ஆடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று வரை இந்தியா 10 பதக்கங்களை வென்றிருந்தது. இன்று மேலும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற T64 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் பங்கேற்றிருந்தார். இதில் மிகச்சிறப்பாக ஆடிய பிரவீன் குமார் வெள்ளி வென்றார். இந்த போட்டியில் 6 வீரர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். 1.88 மீட்டர் உயரத்திலிருந்து பிரவீன் குமார் தாண்ட தொடங்கினார். 1.88 மீட்டரை முதல் வாய்ப்பிலேயே வெற்றிகரமாக தாண்டியிருந்தார். இதன்பிறகு, 1.93 மீட்டரை விடுத்து நேராக 1.97 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார். இதையும் வெற்றிகரமாக முதல் வாய்ப்பிலேயே தாண்டியிருந்தார். அப்போதே பதக்கத்தை உறுதி செய்துவிட்டார்.

கடைசியில் தங்கப்பதக்கத்திற்கு மட்டுமே பிரவீன் குமாருக்கும் பிரிட்டன் வீரருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 2.07 மீட்டர் வரை இருவரும் சமமாகவே தாண்டியிருந்தனர். 2.10 மீட்டர் உயரத்தை பிரிட்டன் வீரர் வெற்றிகரமாக தாண்டிவிட, பிரவீனால் அதை தாண்ட முடியவில்லை. அதனால் வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது. பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இளம் இந்திய வீரர் பிரவீனே. அவருக்கு வயது 18 மட்டுமே ஆகிறது.

50 மீ ஏர் ரைஃபிள் 3P துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா பங்கேற்றிருந்தார். இவர் ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலின் இன்னொரு பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில் இன்றைக்கு தகுதிச்சுற்றில் மூன்றாம் இடத்தை பிடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் உக்ரைன் வீராங்கனைக்கு அவனிக்கும் கடும்போட்டி நிலவியது. இறுதியில் அவனி சிறப்பாக செயல்பட்டு வெண்கல பதக்கத்தை வென்றார்.

பாராலிம்பிக் வரலாற்றில் ஒரே ஆண்டில் இரண்டு பாராலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கும் ஒரே இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார் அவனி.

இந்த பதக்கங்கள் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. 1960 லிருந்து 2016 வரை இந்தியா வென்றிருந்த மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையே 12 தான். ஆனால், இந்த ஒரே பாராலிம்பிக்கிலட்டும் இதுவரை இந்தியா 12 பதக்கங்களை வென்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories