விளையாட்டு

சென்னைக்கு சிரமம் கொடுக்காத ஐதராபாத்; ஒரே நாளில் மீண்டும் டேபிள் டாப்புக்கு வந்த சி.எஸ்.கே! IPL 2021

சிரமம் இல்லாமல் சன்ரைசர்ஸை வீழ்த்திய சென்னை அணி. 24 மணி நேரத்துக்குள் மீண்டும் முதலிடத்துக்கு வந்ததால் ரசிகர்கள் உற்சாகம்.

சென்னைக்கு சிரமம் கொடுக்காத ஐதராபாத்; ஒரே நாளில் மீண்டும் டேபிள் டாப்புக்கு வந்த சி.எஸ்.கே! IPL 2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததை போலவே சென்னை அணி இந்த போட்டியை சுலபமாக வென்றுள்ளது.

டெல்லியில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னரே டாஸ் வென்றார். சொதப்பலான மிடில் ஆர்டரை வைத்துக்கொண்டு இனிமேல் சேஸிங்கெல்லாம் சரிபட்டு வராது. நம்முடைய பழைய பாணிக்கே திரும்பிவிடுவோம் என பேட்டிங்கே தேர்வு செய்தார்.

கௌரவமான ஒரு ஸ்கோரை எட்டிவிட்டு பந்துவீச்சு பலத்தால் சென்னயை வீழ்த்த வேண்டும் என்பதே வார்னரின் திட்டம். இதற்கு 'நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துதான் வீசியிருப்போம்' என செம கூலாக பதில் கொடுத்தார் கேப்டன் தோனி. மொயீன் அலி மற்றும் லுங்கி இங்கிடியை மீண்டும் ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் தோனி.

வார்னரும் பேர்ஸ்ட்டோவும் சன்ரைசர்ஸின் இன்னிங்ஸை தொடங்கினர். மிடில் ஆர்டர் பிரச்சனை இருப்பதால், கூடுதல் பொறுப்போடு ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இந்த கூட்டணி இருந்தது. அதனால் பெரிய ஷாட்டுகளுக்கு பேட்டை விடாமல் கொஞ்சம் தட்டியே ஆடிக்கொண்டிருதனர்.

தீபக் சஹார் வீசிய மூன்றாவது ஓவரில்தான் முதல் பவுண்டரி வந்தது. இவர்கள் பெரிய ஷாட்டுக்கு செல்ல யோசித்ததால் சாம் கரன் ஒரு ஐடியா செய்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட்டாக வீச, அந்த பந்தில் பெரிய ஷாட் ஆட தூண்டப்பட்ட பேர்ஸ்ட்டோ புல் ஷாட் ஆட முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். சாம் கரன் ரிஸ்க் எடுத்து வீசிய ஷார்ட் பாலுக்கு பலன் கிடைத்தது.

சென்னைக்கு சிரமம் கொடுக்காத ஐதராபாத்; ஒரே நாளில் மீண்டும் டேபிள் டாப்புக்கு வந்த சி.எஸ்.கே! IPL 2021

கடந்த போட்டியில் பென்ச்சில் வைக்கப்பட்டிருந்த மனீஷ் பாண்டே நம்பர் 3 இல் இறங்கினார். வார்னர்-மனீஷ் பாண்டே கூட்டணி நிலைத்து. நின்று ஆடியது. மனீஷ் பாண்டே மட்டுமே அவ்வபோது பவுண்டரிகளை அடித்தார். வார்னர் கடைசி ஓவர் வரை நின்று ஆட வேண்டும் என்கிற உறுதியோடு இருந்தார். அதனால் பெரிய ஷாட்டுகளுக்கு முயற்சிக்காமல் விக்கெட்டை காப்பாற்றி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தார்.

இங்கிடி மற்றும் ஜடேஜா வீசிய 15,16 வது ஓவரில் தலா ஒரு சிக்சரை பறக்கவிட்டு அரை சதத்தை கடந்தார். கடைசி மூன்று ஓவர்கள் முழுவதும் அதிரடிதான் என முடிவோடு இருந்த வார்னரை இங்கிடி ஒரு வைட் பந்தை வீசி பெரிய ஷாட் ஆட வைத்து வெளியேற்றினார். 55 பந்துகளை எதிர்கொண்டிருந்த வார்னர் 57 ரன்களை மட்டுமே எடுத்தார்.

வார்னர் கடைசியில் நின்று சிக்சர்களை பறக்கவிட்டிருந்தால் இந்த இன்னிங்ஸ் சிறப்பாக மாறியிருக்கும். ஆனால், வார்னருக்கு பதில் வில்லியம்சன் அதிரடி காட்டினார். ஷர்துல் தாகூர் வீசிய 19 வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடித்த வில்லியம்சன் 20 ரன்களை சேர்த்தார். சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கேதார் ஜாதவ், கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்து தனது வெறியை தீர்த்துக்கொண்டார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை சேர்த்தது. மனீஷ் பாண்டே அடித்த 61 ரன்கள் சன்ரைசர்ஸுக்கு பேருதவியாக இருந்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. எதிர்பார்த்ததை விட ஒரு 20 ரன்களை சன்ரைசர்ஸ் அதிகம் எடுத்திருந்ததால் பலமான பந்துவீச்சை வைத்து சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சென்னை அணிக்கு சன்ரைசர்ஸால் எந்தவித சிரமத்தையும் கொடுக்க முடியவில்லை. ஓப்பனர்களான ருத்ராஜ் கெய்க்வாட்டும் டூப்ளெஸ்சிஸுமே ஏறக்குறைய ஆட்டத்தை முடித்துவிட்டனர். பவர் ப்ளேயில் அதிரடிக்கான பொறுப்பை டூப்ளெஸ்சிஸ் பார்த்துக் கொண்டார். முதல் 6 ஓவர்களில் மட்டும் 5 பவுண்டரிகளை அடித்தார் டூப்ளெஸ்சிஸ்.

ருத்ராஜ் கெய்க்வாட் இரண்டு பவுண்டரிகளை மட்டும் அடித்து நிதானமாக ஆடினார். ஆனால், பவர்ப்ளே முடிந்த பிறகு இந்த கூட்டணி இன்னும் வேகத்தை கூட்டியது. இருவரும் ஸ்பின்னர்களை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இடக்கை ஸ்பின்னரான சுஜித்தை குறிவைத்து அடித்தனர். சுஜித்தின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து அரைசதத்தை கடந்தார் ருத்ராஜ்.

அரைசதம் கடந்த பிறகு வெறித்தனமாக ஆடினார் ருத்ராஜ். எல்லா பேட்ஸ்மேன்களும் ரிஸ்க் எடுக்க பயப்படும் ரஷீத் கானின் ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு லெக் ப்ரேக்கில் போல்டை பறிகொடுத்தார். 75 ரன்களில் ருத்ராஜ் வெளியேறினார். அரைசதம் கடந்திருந்த டூப்ளெஸ்சிஸையும் மொயீன் அலியையும் அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தினார் ரஷீத் கான்.

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்தாலும் சன்ரைசர்ஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரெய்னாவும் ஜடேஜாவும் சில பவுண்டரிகளை அடித்து 19 வது ஓவரில் இலக்கை எட்ட வைத்தனர். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. முந்தைய போட்டியின் முடிவில் சென்னையை கீழிறக்கி முதல் இடத்துக்கு முன்னேறியிருந்தது பெங்களூரு. 24 மணி நேரத்துக்குள் இன்னொரு வெற்றியை பெற்று சென்னை அணி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறிவிட்டது.

banner

Related Stories

Related Stories