விளையாட்டு

UEFA Champions League: வெளியேற்றப்பட்ட யுவன்டஸ்; கலைகிறது ரொனால்டோவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் கனவு?

மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக அவே கோல் அடித்திருந்தது. அதனால், 1-0 என வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

UEFA Champions League: வெளியேற்றப்பட்ட யுவன்டஸ்;  கலைகிறது ரொனால்டோவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் கனவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றோடு வெளியேறியிருக்கிறது யுவன்டஸ். போர்டோ அணிக்கெதிரான இரண்டாவது சுற்றில் 3-2 என வென்றிருந்தாலும், இரண்டு சுற்றுகள் முடிவில் 4-4 என ஆட்டம் சமநிலை அடைந்திருந்தாலும், 'அவே கோல்கள்' அடிப்படையில் யுவன்டஸ் வெளியேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம், 3 கிளப்களோடு சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற சாதனை படைக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவு கலைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது!

2018 உலகக் கோப்பைக்குப் பிறகு ரியல் மாட்ரிட்டிலிருந்து யுவன்டஸ் அணிக்கு மாறினார் ரொனால்டோ. தொடர்ந்து 3 சாம்பியன்ஸ் லீக் வென்றுவிட்டு, அவர் அணி மாறியபோது இத்தாலியிலும் தன் ஆதிக்கத்தை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. யுவன்டஸ் அணியும் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் வெல்ல முடியாமல் தவித்து வந்ததால், ரொனால்டோ தான் அவர்களுக்கான தீர்வு என்றும் கருதப்பட்டது. ஆனால், சாம்பியன்ஸ் லீக் அவர்களுக்கு வசப்படவேயில்லை.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அரையிறுதிக்கே நுழையாமல் வெளியேறிக்கொண்டிருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்லாமல், நாக் அவுட் சுற்றில் ஒரேயொரு முறை மட்டுமே வென்றிருக்கிறது. 2018-19 சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட்டை எதிர்கொண்டது யுவன்டஸ். முதல் சுற்றில் 2-0 என தோற்றிருந்தாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அசத்தல் ஹாட்ரிக்கால் 3-0 என இரண்டாவது சுற்றில் வென்று கம்பேக் கொடுத்தது. இருந்தாலும் காலிறுதியில் இளம் அயாக்ஸ் அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளியேறியது அந்த அணி.

UEFA Champions League: வெளியேற்றப்பட்ட யுவன்டஸ்;  கலைகிறது ரொனால்டோவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் கனவு?

அடுத்த சீசனும் கிட்டத்தட்ட அதே நிலை. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இம்முறை லயான் அணியோடு. முதல் லெக் போட்டியில் 1-0 என தோல்வியடைந்தது யுவன்டஸ். இம்முறை இன்னொரு கம்பேக் தேவை. இன்னொரு ரொனால்டோ பெர்ஃபாமன்ஸ் தேவை. ரொனால்டோவும் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். ஆனால், டீபே ஒரு கோல் அடிக்க, 2-2 என சமநிலை அடைந்தது அந்தப் போட்டி. டீபேவின் கோல் 'அவே கோல்' அடிப்படையில் லயானை அடுத்து சுற்றுக்கு எடுத்துச் செல்ல, யுவன்டஸ் வெளியேறியது.

சரி, இந்த வருடமாவது எல்லாம் மாறும் என்று எதிர்பார்த்த நிலையில், அதே சோகம் மீண்டும் தொடர்ந்திருக்கிறது. முதல் சுற்றில் இம்முறையும் தோற்றது யுவன்டஸ். ஆனால், மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக அவே கோல் அடித்திருந்தது. அதனால், 1-0 என வென்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 19-வது நிமிடத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போர்டோ ஸ்டிரைக்கர் டரேமியை டிஃபண்டர் டெமைரல் ஃபௌல் செய்ய, போர்டோவுக்கு பெனால்டி கிடைத்தது. அதை செர்ஜியோ ஒலிவியேரா கோலாக்கினார்.

அவே கோல் கிடைத்தவிட்டதால், போர்டோவுக்கு அது மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. குறைந்தபட்சம் 2 கோல்கள் அடித்தால்தான் டிரா செய்ய முடியும். ரொனால்டோவின் கம்பேக் பெர்ஃபாமஸ் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலையில் விஸ்வரூபம் எடுக்கும் ரொனால்டோ, இந்தப் போட்டியில் ஒரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை. ஃபெடரிகோ சீஸா, மொராடோ இருவரும் ஓரளவு போரடினார்கள். சீஸாவின் அட்டகாச ஆட்டத்தால் 90 நிமிட முடிவில் 2 கோல்கள் அடித்தது அந்த அணி. ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

நியாயப்படி யுவன்டஸ் இந்தப் போட்டியை எளிதாக வென்றிருக்கவேண்டும். ஹோம் ஸ்டேடியத்தில் ஆடுகிறது. அதுமட்டுமல்லாமல், டரேமி ரெட் கார்ட் வாங்கியதால், 54-வது நிமிடத்தில் இருந்தே 10 வீரர்களுடன் ஆடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது போர்டோ. இருந்தாலும், கூடுதல் நேரத்தில் சிறப்பாக டிஃபண்ட் செய்தது அந்த அணி. அதனால், யுவன்டஸால் கோலடிக்க முடியாமல் இருந்தது.

UEFA Champions League: வெளியேற்றப்பட்ட யுவன்டஸ்;  கலைகிறது ரொனால்டோவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் கனவு?

போட்டி பெனால்டிக்குச் சென்றுவிடும் என்று நினைக்கையில் 115-வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தது போர்டோ. பாக்ஸுக்கு வெளியே கிடைத்த ஃப்ரீ கிக் மூலம் ஒலிவியேரா கோலடிக்க, அவே கோல் கணக்கிலும் முன்னிலை பெற்றது. அடுத்த இரண்டு நிமிடங்களில் ரேபியோ கோலடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். இருந்தாலும், இரண்டு அவே கோல்கள் அடித்த போர்டோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மூன்று சீசனிலும் ஹோம் கேம்களில் கோல் விட்டே வெளியேறியிருக்கிறது யுவன்டஸ். டிஃபன்ஸுக்கு பெயர்பெற்றிருந்த அந்த அணியின் தடுப்பாட்டம் இப்போது நம்பிக்கை தருவதில்லை. மூன்று சீசனில் இது மூன்றாவது மேனேஜர். ஆனால், அவர்களின் சாம்பியன்ஸ் லீக் தலையெழுத்தை மாற்ற முடியவில்லை. ரொனால்டோ, கோல்கள் அடித்துக்கொண்டிருந்தாலும், முன்பைப் போல் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.

அடுத்த ஆண்டு ரொனால்டோ யுவன்டஸ் அணியில் நீடிப்பாரா தெரியவில்லை. நீடித்தாலும் பழைய தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவருக்கு 37 வயது ஆகியிருக்கும். அதேபோல், யுவன்டஸ் அணியிலும் மாற்றங்கள் ஏற்படுமா தெரியவில்லை. இவை அனைத்தும் நடந்தால் மட்டுமே ரொனால்டோ இன்னொரு சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்வது சாத்தியம். அந்தக் கனவு கனவாகவே கலைந்துபோகும் நிலையில்தான் இருக்கிறது!

banner

Related Stories

Related Stories