விளையாட்டு

உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சச்சின் வேட்டையாடிய நாள் இன்று.. உலக கோப்பை 2003 நினைவுகள் !

உலகின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக் என்று பெயர் பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சை "சின்ன பசங்க...யாருகிட்ட" என்று வேட்டையாடு விளையாடு கமல் பாணியில் சச்சின் வேட்டையாடிய தினம் இன்று.

உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சச்சின் வேட்டையாடிய நாள் இன்று.. உலக கோப்பை 2003 நினைவுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்திய அணி ஒரு மிகப்பெரிய போட்டியை எதிர்நோக்கி இருந்தது. அணியின் சீனியர் வீரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு பரபரப்பு காணப்பட்டது. ஜென்டில்மேன், பொறுமையின் சிகரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் கூட ஆட்டத்திற்கு முந்தைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, "இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்.. 22 பேருக்கிடையே 22 யார்டுகளுக்குள் நடக்கும் சாதாரண கிரிக்கெட் போட்டி தானே" என்று தன் அமைதியை இழந்து கூறினார். அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது அந்த ஆட்டம்!

இந்திய அணியின் மீது அத்தனை மக்களும் தங்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். பத்திரிகைகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் இந்திய அணியின் மீது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காரணம், கிரிக்கெட், அரசியல் என அத்தனை இடங்களிலும் இந்திய அணியின் எதிரி என கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தான் அணியுடன் அதுவும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா விளையாட தயாராகி வந்தது.

அத்தனை வீரர்களின் முகத்திலும் ஒரு அழுத்தம் நன்றாக தெரிந்தது. இளம் வீரர்களான யுவராஜ், சேவாக் போன்றோர் கவலையில்லாமல் ஜோக் அடித்துக் கொண்டிருந்த போது கேப்டன் கங்குலி வந்து, "அசாருதீன் காலத்தில் நாங்கள் எல்லாம் இவ்வளவு பேச மாட்டோம்" என்று செல்லமாக கடிந்து கொண்டார். பயிற்சியாளர் ஜான் ரைட்டோ இந்திய வீரர்களிடம் வந்து "ஒழுக்கமாக விளையாடுங்கள்... பாகிஸ்தான் வீரர்கள் தானாகவே தோற்று விடுவார்கள்" என்று நம்பிக்கை அளித்துச் சென்றார்.

ஆட்ட நாள். எப்போதும் செல்வதை விட சிறிது நேரம் முன்னரே உணவருந்தச் சென்றுவிட்டனர் அத்தனை வீரர்களும். மைதானத்திற்கு எப்போதும் செல்லும் வழியைத் தவிர்த்து மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக வேறு வழியில் சென்றனர். இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் இது ஒன்றும் சாதாரண போட்டி அல்ல என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சச்சின் வேட்டையாடிய நாள் இன்று.. உலக கோப்பை 2003 நினைவுகள் !

இந்திய அணியின் பேட்டிங் மொத்தமும் சச்சின் டெண்டுல்கரை மையப்படுத்தியே இருந்தது. அந்த உலகக்கோப்பை தொடரில் அதற்கு முந்தைய நான்கு ஆட்டங்களில் மூன்று அரை சதம், ஒரு சதம் என அடித்திருந்தாலும் அந்த ஆட்டங்கள் ஆட்டங்கள் வலு குறைந்த நமீபியா, நெதர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக வந்தவை. "சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டாலே போதும். வெற்றி நமதாகி விடும்" என்று பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியிருந்தார். இத்தனை அழுத்தங்கள் இந்திய அணியின் மீதும் சச்சின் மீதும் இருக்க, சச்சின் அதிகமாக நெட் ப்ராக்டீஸ் செய்யாமல் மிகவும் அமைதியாக ஆட்டத்தை எதிர் நோக்கி காத்திருந்தார்.

பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய, சயீத் அன்வரின் அற்புத சதத்தால் நல்ல ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. கூடவே ரஷீத் லதீஃப், யூனிஸ் கான் போன்றோரும் கை கொடுக்க 277 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். 250 ரன்களுக்கு மேல் சென்று விட்டாலே கிட்டத்தட்ட ஆட்டத்தை வென்று விட்டோம் என்று முதலில் பேட் செய்த அணிகள் நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த ஆட்டத்தைக் காண இந்தியா சார்பில் அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரின் முகத்திலும் சோக ரேகை படர்ந்து காணப்பட்டது. அதிலும் முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்திய ராஜ் சிங் என்னும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஒருவர் நேரடியாக பயிற்சியாளர் ஜான் ரைட்டிடம் சென்று தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு வந்து விட்டார்.

முதல் இன்னிங்ஸ் முடிவில் பாதி ரசிகர்கள் இந்தியா தோற்றுவிட்டதாகவே கருதினர். ஆனால், சிவாஜி செத்துட்டாருப்பா என தியேட்டரை விட்டு கிளம்ப போனவர்களை எப்படி மொட்ட பாஸ் ஆக வந்து ரஜினி ரசிக்க வைத்தாரோ அது போன்ற ஒரு மெர்சல் சம்பவம் செய்ய வந்தார் சச்சின்.

முதல் ஓவரை கேப்டன் வாசிம் அக்ரம் வீசினார். மூன்றாவது பந்தில் அழகாக டீப் கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் சச்சின். சோயப் அக்தரை சச்சின் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தான் அப்போதைய மிகப்பெரிய பேசும் பொருள். எப்படி இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் சச்சினை சுற்றிச் சுழன்றதோ அதேபோல பாகிஸ்தான் பவுலிங் அக்தரை நோக்கிச் சுழன்றது.

வாசிம், வக்கார் என்று ஏனைய சில பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருந்தனர். ஆனால் அக்தர் கதையே வேறு. 27 வயது இள ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் வீரர். ஒவ்வொரு பந்தையும் அரை மைலுக்கு அப்பால் இருந்து ஓடி வந்து எறி கல் வேகத்தில் பேட்ஸ்மேனை நோக்கி எறியும் வித்தை தெரிந்தவர் அக்தர். அந்த அக்தரை சமாளிப்பது தான் அன்றைய பேட்ஸ்மேன்களின் மிகப்பெரிய டாஸ்க். அந்த டாஸ்க் தான் இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் சச்சினின் முன்பு வந்து நின்றது.

உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கை சச்சின் வேட்டையாடிய நாள் இன்று.. உலக கோப்பை 2003 நினைவுகள் !

அக்தரிடம் இருந்து வந்த முதல் பந்து மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சச்சினின் நெஞ்சு நோக்கி வந்தது. அதை லாவகமாக தட்டி விட்டு அந்தப் பக்கம் சென்று விட்டார் சச்சின். இதை மிகப்பெரிய வெற்றியாகக் தான் கருதியிருப்பார் அக்தர். ஆனால் அவருக்குத் தெரியவில்லை இது வெறும் ஆரம்பம் தான் என்று. சேவாக் எப்படியோ மற்றொரு சிங்கிள் எடுத்து இந்தப் பக்கம் வர மீண்டும் கடைசி மூன்று பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை சச்சினுக்கு வந்தது. ஓவரின் நான்காவது பந்தை வீச ஓடி வந்தார் அக்தர். நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் ஆப் சைடு பக்கம் சற்று வைடாக வீசப்பட்ட பந்து. சச்சின் அதை விட்டு இருக்கலாம். ஆனால் அன்று பொறுமை என்ற வார்த்தையையே தனது மனதிலிருந்து அளித்து விட்டு வந்திருந்தார் மாஸ்டர் பிளாஸ்டர். மணிக்கு சுமார் 151 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பந்தை ராக்கெட் வேகத்தில் தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறக்க விட்டார் சச்சின்.

இன்னமும் சண்டை முடியவில்லை. அடுத்த பந்து 152 kmph வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் பக்கம் பவுண்டரிக்கு சென்றது. வெறுத்துப் போன அக்தர் மறுபடியும் ஓடி வந்து 154 kmph வேகத்தில் கடைசி பந்தை வீசினார். சச்சின் அதை லாவகமாக தட்டி விட அதுவும் மிட் ஆன் பக்கம் பவுண்டரியாக மாறியது. அக்தரை மனரீதியாக வலுவிழக்கச் செய்ய சச்சினுக்கு மூன்றே பந்துகள் தான் தேவைப்பட்டது. எந்தளவு அக்தர் மனதளவில் பாதிக்கப்பட்டார் என்றால், வெறும் ஒரு ஓவர் வீசிய பிறகு அவருக்கு மீண்டும் ஓவர் வழங்கப்படவில்லை. வாசிமும் வக்கார் யூனிஸ் மட்டுமே பந்து வீசினர். சச்சின் அவர்களையும் எளிதாக சமாளித்து வெளுத்து வாங்கினார்.

சேவாக், கங்குலி என அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் போனாலும் கடைசி வரை சச்சினின் அதிரடி மட்டும் குறையவே இல்லை. ஒரு பக்கம் முகமது கைஃப் பொறுமையாக ஆட மறுபக்கம் சச்சின் காட்டாற்று வெள்ளம் போல கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தார். எப்படியோ ஒரு வழியாக அக்தர் சச்சினை அவுட் ஆக்கினாலும் அதற்குள் 98 ரன்களைக் குவித்து விட்டார் லிட்டில் மாஸ்டர். அதுவும், வெறும் 75 பந்துகளில். சச்சின் அவுட் ஆன பிறகு டிராவிட் மற்றும் யுவராஜ் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

உலகின் மிகச்சிறந்த பவுலிங் அட்டாக் என்று பெயர் பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சை "சின்ன பசங்க...யாருகிட்ட" என்று வேட்டையாடு விளையாடு கமல் பாணியில் சச்சின் வேட்டையாடிய தினம் இன்று.

banner

Related Stories

Related Stories