விளையாட்டு

“விழும்போதெல்லாம் மீண்டு(ம்) எழுவேன்” - மற்றுமொருமுறை உரக்கச் சொன்ன தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக்குக்கு இது மிக மோசமான காலமாகத்தான் அமைந்திருந்தது. தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் டிகே.

“விழும்போதெல்லாம் மீண்டு(ம்) எழுவேன்” - மற்றுமொருமுறை உரக்கச் சொன்ன தினேஷ் கார்த்திக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

லாக்டவுணுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் தமிழ்நாடு அணி சாம்பியனாகியுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளது.

2007–ல் சையத் முஷ்டக் அலி ட்ராஃபியின் அறிமுக சீசனிலேயே தமிழக அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அப்போதும் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்தான். 22 வயது இளைஞராக தமிழக அணியை துடிப்போடு வழிநடத்தி கோப்பையை வெல்ல வைத்தார். கேப்டன், கீப்பர், பேட்ஸ்மேன் என பல்திறன் மிக்கவராக இருந்தும் இந்திய அணியில் இவருக்கான தொடர் வாய்ப்புகள் கிடைத்ததே இல்லை. நீண்ட காலத்துக்கு பிறகு 2017 ல் நிதாஷ் ட்ராஃபியில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அடித்த அடி அவரை மீண்டும் பிரபலமாக்கியது. அதன்மூலம் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தது.

“விழும்போதெல்லாம் மீண்டு(ம்) எழுவேன்” - மற்றுமொருமுறை உரக்கச் சொன்ன தினேஷ் கார்த்திக்!

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கான கேப்டன் பதவி கிடைத்தது. ஆனால், மீண்டும் சறுக்கல்கள் தொடர, இந்திய அணியில் இடமில்லாமல் போனது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை உண்டானது. சமீபத்தில்தான் ஐ.பி.எல் அணிகள் தாங்கள் விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதற்கு சில நாட்களுக்கு முன்பாக, கொல்கத்தா அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படலாம் என்கிற செய்திகள் வெளியானது. தினேஷ் கார்த்திக்குக்கு இது மிக மோசமான காலமாகத்தான் அமைந்திருந்தது. தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் டிகே.

இந்நேரத்தில்தான் முஷ்டக் அலி ட்ராஃபி தொடங்கியது. தமிழ்நாடுக்கும் ஜார்க்கண்ட்டுக்கும் இடையிலான முதல் போட்டியிலே டெத் ஓவர்களில் களமிறங்கி 17 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 270 க்கும் மேல். இந்த ஒரு இன்னிங்ஸ் நிறைய மாற்றங்களை செய்தது. கொல்கத்தா அணியின் விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது. ஆனால், அதில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இல்லை. காரணம், ஜார்கண்ட்டுக்கு எதிராக அவர் ஆடிய அந்த ஒரு இன்னிங்ஸ்.

ஜார்கண்ட்டுக்கு எதிராக மட்டுமில்லை. இந்த சீசன் முழுவதுமே மிடில் ஆர்டரில் பல்வேறு விதங்களில் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். ஹைதராபாத்துக்கு எதிராக 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ், பெங்காலுக்கு எதிராக 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் என அணிக்கு எப்போதெல்லாம் எந்த வகையில் அவரின் பெர்ஃபார்மென்ஸ் தேவைப்பட்டதோ அதை முழுமையாக கொடுத்திருக்கிறார். அரையிறுதியில் 17 பந்துகளில் 26 ரன்னும், இறுதிப்போட்டியில் 16 பந்துகளில் 22 ரன்னும் அடித்திருப்பார் தினேஷ் கார்த்திக்.

ஜார்க்கண்ட்டுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸோடு இவற்றை ஒப்பிடும்போது இவை சுமாரான பெர்ஃபார்மென்ஸ்களாகத்தான் தெரியும். ஆனால், அந்த ஜார்கண்ட் இன்னிங்ஸ் ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த இன்னிங்ஸ்கள் ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அரையிறுதியில் ராஜஸ்தானுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகிவிட்ட நிலையில் களமிறங்கி அருண் கார்த்திக்குடன் அழகாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, விக்கெட்டை விடாமல் அருண் கார்த்திக் மீது ப்ரஷர் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு, ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடிப்பதற்கு உதவியிருப்பார் டிகே.

“விழும்போதெல்லாம் மீண்டு(ம்) எழுவேன்” - மற்றுமொருமுறை உரக்கச் சொன்ன தினேஷ் கார்த்திக்!

இறுதிப்போட்டி லோ ஸ்கோரிங் கேமாக இருந்தாலும் சேஸிங்கின் போது 8 ஓவர்களில் 54 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹரி நிஷாந்த் அவுட் ஆகியிருப்பார். இந்த இடத்தில் உடனே இன்னொரு விக்கெட் விழுந்திருந்தாலோ அல்லது ரன்ரேட் குறைந்திருந்தாலோ அது பரோடாவுக்கு வசதியாக போயிருக்கும். அருண் கார்த்திக் வர வேண்டிய ஆர்டரில் தினேஷ் கார்த்திக் வந்து, இந்த இரண்டையுமே நிகழவிடாமல் செய்தார். 3 பவுண்டரிகளுடன் அவர் அடித்த 22 ரன்கள்தான் தமிழக அணியின் மீது ப்ரஷர் ஏற்படாமல் இருந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஒரு கேப்டனாகவும் தனது நீண்ட அனுபவம் மூலம் வீரர்களை சிறப்பாக தினேஷ் கார்த்திக் கையாண்டார். எந்த போட்டியிலும் இறக்காமல் வைத்திருந்த மணி மாறன் சித்தார்தை இறுதிப்போட்டியில் இறக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பரோடாவின் கதையை முடித்திருந்தார். டி20 போட்டிகளில் 4 ஸ்பின்னர்களை வைத்து ஆடுவது புதிய பாணியாக இருக்கிறது. மேலும், முதல் 13 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வைத்தே வீச வைத்திருந்தார். டாஸ் வென்றால் பௌலிங்தான் என்பதில் தினேஷ் கார்த்திக் எப்போதும் உறுதியாகவே இருந்தார். அந்தளவுக்கு தன் அணியின் பௌலர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். பௌலர்களும் தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கையை முழுவதுமாக காப்பாற்றியிருக்கின்றனர். ஒரு தொடரில் ஒரு அணியை தோல்வியே இல்லாமல் கோப்பையை வெல்ல வைப்பது என்பது அசாதாரணமான விஷயம். அதை தினேஷ் கார்த்திக் செய்து காண்பித்திருக்கிறார்.

ஒரு கேப்டனாக... ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய நெருக்கடியான விளிம்புநிலையில் இருந்த தினேஷ் கார்த்திக்கிடமிருந்து, இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸ் யாருமே எதிர்பாராதது. விழும்போதெல்லாம் மீண்டு(ம்) எழுவேன் என்பதை மற்றுமொருமுறை உரக்க சொல்லியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

வாழ்த்துகள் DK!

banner

Related Stories

Related Stories