விளையாட்டு

IND vs AUS: இந்திய அணியின் வரலாற்று வெற்றியில் ரவி சாஸ்திரியின் பங்கு என்ன? சுவாரஸ்ய தகவல்கள்!

ரஹானேவோடு இவ்வளவு இணக்கமாக ஒரு தொடரில் பயணித்து, எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லாமல் தொடரை எப்படி வெல்ல முடிந்தது? அதுதான் இங்கே அதிசயம். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொண்டாடப்பட வேண்டிய இடமும் இதுதான்.

IND vs AUS: இந்திய அணியின் வரலாற்று வெற்றியில் ரவி சாஸ்திரியின் பங்கு என்ன? சுவாரஸ்ய தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இதற்கு முன் எந்த அணியும் செய்யாத சாதனைகளை செய்து நாடு திரும்பியிருக்கிறது. ரஹானே, நடராஜன், வாஷி, அஸ்வின், சிராஜ், விஹாரி என வீரர்கள் அனைவரும் சூப்பர் ஹீரோக்களாக கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குறித்து பெரிதாக எதுவும் பேசப்பட்டதாக தெரியவில்லை. இந்த வரலாற்று வெற்றியில் ரவிசாஸ்திரியின் பங்கு இல்லவே இல்லையா? என்ன செய்திருக்கிறார் ரவி சாஸ்திரி?

இந்திய கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றியவர் விராட் கோலி. ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியை பல எல்லைகளை உடைத்து முன்னேற்றியவர் கோலிதான். இந்த பயணத்தில் கோலிக்கு உறுதுணையாக இருந்தவர் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி. இருவரும் சேர்ந்து இந்திய அணியை கிரிக்கெட் உலகில் வல்லாதிக்கம் மிக்கதாக உயர்த்தினர். ஆனாலும், இன்றைக்கும் கிரிக்கெட்டில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டும் விமர்சிக்கப்படும் இரண்டு நபர்களும் இவர்கள்தான். இந்த மிகப்பெரிய முரணுக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஒரு அணி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற வேண்டுமாயின் களத்தில் இறங்கி விளையாடும் 11 வீரர்கள் மட்டும் முறையாக ஆடினால் போதாது. அவர்களுக்குள் மட்டும் நல்ல உறவு இருந்தால் போதாது. மாறாக, ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் பயிற்சியாளருக்கும் வீரர்களுக்குமே முதலில் நல்ல உறவும் இணக்கமும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் அணிகள்தான் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்தி பெரிய வெற்றிகளைப்பெற முடியும். இதற்கு இந்திய கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல.

2000–களின் ஆரம்பத்தில் நியுசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட் பயிற்சியாளராக இருக்கும்போது அணிக்குள் கேப்டன் கங்குலிக்கு அதிக சுதந்திரம் இருந்தது. நிறைய இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி ஒரு புதிய அணியை கட்டமைத்தார். இதற்கு ஜான் ரைட்டும் உறுதுணையாக இருந்தார். இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் இணக்கமும் இருந்தது. அதனால்தான், 15 வருடம் கழித்தும் கடந்த உலகக்கோப்பையின் போது ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசும்போது 'எனக்கு மிகவும் பிடித்த பயிற்சியாளர், ஜான் ரைட்' என கங்குலி குறிப்பிட்டிருந்தார். கேப்டனுக்கும் கோச்சுக்கும் இப்படி ஒரு நல்ல உறவு இருந்ததான் விளைவாகத்தான் நெட்வெஸ்ட் சீரிஸ் வெற்றி, 2003 உலகக்கோப்பை ஃபைனல் என பெரிய இடங்களுக்கு அணி முன்னேறியது. டெஸ்ட்டிலும் முன்னிருந்ததை விட சிறப்பாக ஆட தொடங்கியது.

ஜான் ரைட்டுக்கு பிறகு க்ரேக் சேப்பல் இந்தியாவின் கோச் ஆனார். அந்த நாட்கள் எல்லாம் இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்கள். கேப்டன் கங்குலிக்கு மட்டுமில்லை பல வீரர்களுக்கும் சேப்பலுடன் நல்ல உறவு இருந்ததில்லை. தனக்கென ஒரு வீரர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டு மற்றவர்களை வெளியேற்ற நினைத்தார். தாதா கங்குலியே சேப்பலிடம் வீழ்ந்ததுதான் பெரும் சோகம். இந்திய அணியும் அந்த சமயத்தில் அதிமோசமான தோல்விகளை பெற்றது. 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி 2007 உலகக்கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக அவமானகரமாக தோற்று வெளியேறியது.

சேப்பலுக்கு பிறகு கேப்டன் தோனி காலத்தில் கேரி க்ரிஸ்டன் கோச் ஆனார். இவருக்கும் தோனிக்கும் நல்ல நெருக்கம் இருந்தது. இருவரின் முடிவுகளும் ஒரே பாதையில் பயணிக்கக்கூடியதாக இருந்தது. விளைவு, இந்திய அணி 2011 உலகக்கோப்பையை வென்றது. டெஸ்ட்டில் நம்பர் 1 அணி ஆனது. க்ரிஸ்டனின் பதவிக்காலம் முடிந்த பிறகு, டங்கன் ஃப்ளெட்சர் இந்தியாவின் கோச் ஆனார். தோனிக்கும் இவருக்கும் எந்த நெருடல்களும் இல்லாவிடிலும் பெரிய நெருக்கமும் இருந்தது போல் தெரியவில்லை.

இந்திய அணியும் இந்த காலக்கட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. க்ரிஸ்டனுக்கு பிறகான பயிற்சியாளர் தேர்வின் போது ஸ்டீபன் ஃப்ளெம்மிங்கும் நேர்காணலுக்கு சென்றிருந்தார். ஒருவேளை, அவர் தேர்வாகியிருந்தால் தோனி இன்னுமே கூட சௌகரியமாக உணர்ந்திருப்பார். அதற்கு தகுந்தாற் போல அணியின் செயல்பாடுமே கூட மாறியிருக்கக்கூடும். ஃப்ளெட்சருக்கு பிறகு கொஞ்ச நாள் கழித்து அனில் கும்ப்ளே கோச் ஆக, ஒரு வருடத்திலேயே கோலிக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் முட்டிக்கொண்டதால், அனில் கும்ப்ளே அதற்கு மேல் தொடர முடியவில்லை.

சரி, அப்படியே நிகழ்காலத்துக்கு வருவோம். ஐ.சி.சி கோப்பைகளை வெல்லாவிடிலும் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்-கோச் இணை கோலியும் ரவிசாஸ்திரியும்தான். இருவரின் குணாதிசயங்களுமே பெரிதாக ஒத்துப்போவதால் இருவருக்குமே நல்ல இணக்கம் உண்டானது. அதன் விளைவாக இந்திய அணி ஒரு வீழ்த்த முடியாத அணியாக உருவானது.

IND vs AUS: இந்திய அணியின் வரலாற்று வெற்றியில் ரவி சாஸ்திரியின் பங்கு என்ன? சுவாரஸ்ய தகவல்கள்!

இந்தக் கூட்டணியின் மீது ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விமர்சனங்களும் உண்டு. பெரிதாக யோசித்து எதையும் செய்யமாட்டார்கள். இருவரும் சரியான நேரத்தில் மிகத்தவறான முடிவு எடுப்பவர்கள். அக்ரஷன் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அவரவர்களுக்கே உரித்தான தனிப்பட்ட குறை நிறைகள் எப்போதும் இருக்கக்கூடியதுதான். இதைத்தாண்டிதான் இந்திய அணி பல நல்ல வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது.

ஆனால், இங்கே இந்த ஆஸ்திரேலிய சீரிஸை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் ரவி சாஸ்திரி முழுமையாக ஆச்சர்யங்களை மட்டுமே நிகழ்த்தியிருக்கிறார். ரவிசாஸ்திரியோடு முழுமையாக ஒத்துப்போகக்கூடிய கோலியோடு அவர் இணக்கமாக இருந்ததில் பெரிய ஆச்சர்யமே இல்லை. ஆனால், அவருக்கு நேர் எதிர் குணாதிசயங்கள் கொண்ட ரஹானேவோடு இவ்வளவு இணக்கமாக ஒரு தொடரில் பயணித்து, எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லாமல் தொடரை எப்படி வெல்ல முடிந்தது? அதுதான் இங்கே அதிசயம். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொண்டாடப்பட வேண்டிய இடமும் இதுதான்.

ஆஸி தொடர் உறுதியாவதற்கு முன்பே லாக்டவுணிலேயே இந்த தொடருக்கான முன் திட்டமிடல்களை தொடங்கியிருக்கார் ரவி சாஸ்திரி. தொடர் நடக்குமா? நடக்காதா? நடந்தால் இந்த வருடமா? அடுத்த வருடமா? என எதுவுமே தெரியாத நிலையில் ஜுலையிலேயே ஸ்மித்தின் விக்கெட்டுக்கும் லபுஷேனின் விக்கெட்டுக்கும் லெக் சைட் திட்டத்தை தீட்டியிருக்கிறார் ரவி சாஸ்திரி. இந்திய அணி 5 பௌலர்களோடு ஆட வேண்டும் என்பது அப்போதே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கோலியின் அக்ரஸிவ் அணுகுமுறையை மனதில் வைத்து ரவிசாஸ்திரியின் அக்ரஸிவ் மனநிலையிலிருந்து உதித்த ஐடியாக்கள் இவை.

கோலியின் தனிபட்ட காரணங்களுக்கான விடுமுறையெல்லாம் இதன்பிறகுதான் தெரியவந்தது. கோலியின் அக்ரஸ்விவ் அணுகுமுறைக்கும் ரஹானேவின் கூலான அணுகுமுறைக்கும் இடையே ஒரு இணைப்பாக இருந்து, தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டதில்தான் ரவிசாஸ்திரி மிளிர்கிறார்.

லெக் சைடு ப்ளான், 5 பௌலர்கள் என ரவி சாஸ்திரியின் திட்டங்கள் அனைத்தையும் ரஹானே தன்னுடைய பாணியில் களத்தில் வெளிக்காட்டினார். மெல்பர்னில் அஸ்வினை 10 வது ஓவருக்குள் வீச வைக்கவேண்டும் என திட்டம் போட்டதும் ரவிசாஸ்திரிதான். அதையும் ரஹானே களத்தில் சிறப்பாக செய்து முடித்தார். கேப்டன் என்பதால் தேவையில்லாமல் தேவையில்லாததை யோசித்து ரஹானே எதுவும் சொதப்பாமல் பயிற்சியாளர் குழு கொடுத்த ப்ளானை சரியாக செயல்படுத்தியதற்கே அவரை பாராட்டலாம்.

அதேநேரத்தில், ரஹானேவுக்காக ரவிசாஸ்திரியுமே கூட தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். குல்தீப் யாதவ், ரவிசாஸ்திரி-கோலி கூட்டணியின் விருப்பமான வீரர். அஸ்வினுக்கு பதில் குல்தீப்தான் இனி எல்லாம் என இவர்கள் கூறியதும் கூட உண்டு. ஆனால், இந்த சீரிஸில் அத்தனை வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதும் குல்தீபின் தேர்வு குறித்து ரவிசாஸ்திரி ரஹானேவுக்கு அழுத்தம் கொடுத்தது போலவே தெரியவில்லை. நடராஜன் மீதுதான் ரஹானே ஆரம்பத்திலிருந்து விருப்பமாக இருந்தார். கடைசி டெஸ்ட்டிலும் கூட அவருக்குத்தான் ரஹானே வாய்ப்பைக் கொடுத்தார். தற்காலிக கேப்டனாக இருந்தாலும் கூட அவருக்கான முழு சுதந்திரத்தை ரவி சாஸ்திரி கொடுத்தார். அதுதான் இந்த தொடரின் வெற்றிக்கான மிகமுக்கிய காரணமாக இருந்தது.

எல்லாருமே இளம் வீரர்களாக இருக்கும்போது அதுவும் அணி 36க்கு ஆல் அவுட் ஆன பிறகு அதை வழிநடத்தி கோப்பையை வெல்ல செய்வதெல்லாம் அசாத்தியமான விஷயம். ஒரு அனுபமிக்கவராக மூத்தவராக அணிக்கு ரவிசாஸ்திரி மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், அது வழக்கமான அக்ரஸிவ் வழியில் இல்லாமல் இந்த முறை ரஹானே பாணியில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த மாற்றமே கொண்டாடப்பட வேண்டியதுதான்.

வாழ்த்துகள் ரவிசாஸ்திரி!

banner

Related Stories

Related Stories