விளையாட்டு

ஆஸியின் டெரர் பேட்டிங் லைன்-அப் - மீண்டும் மேஜிக் செய்வாரா ரஹானே?!

ரஹானேவுக்கு கடந்த போட்டியை விட இந்த போட்டிதான் அதிக சவால்மிக்கதாக அமையப்போகிறது.

ஆஸியின் டெரர் பேட்டிங் லைன்-அப் - மீண்டும் மேஜிக் செய்வாரா ரஹானே?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்கவிருக்கிறது. அடிலெய்டு டெஸ்ட்டில் மோசமாக தோற்றதிலிருந்து மீண்டு வந்து, மெல்பர்ன் டெஸ்ட்டில் ரஹானே தலைமையில் சிறப்பாக ஆடி போட்டியை வென்றிருந்தது இந்திய அணி. 1-1 என இந்த தொடர் இப்போது சமநிலையில் இருக்கிறது. தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்குமே இந்த சிட்னி டெஸ்ட் ரொம்பவே முக்கியம். சவால்மிகுந்த இந்த டெஸ்ட் எந்தப்பக்கம் சாயப்போகிறது? ரஹானே தலைமையிலான இந்திய அணி எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது?

அடிலெய்டு, மெல்பர்ன் போல் இல்லாமல் சிட்னி எப்போதும் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் பிட்ச்சாகவே இருந்திருக்கிறது. இதை இந்தியா ஆடிய முந்தைய தொடர்கள் மூலமே அறிந்துகொள்ள முடியும். 2011-12 சீரிஸில் சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸி- 659, இந்தியா 191 & 400 ரன்களை எடுத்திருக்கும். 2014-15 சீரிஸில் ஆஸி 572 & 251, இந்தியா 475 & 252 ரன்களை எடுத்திருக்கும். 2018-19 சீரிஸில் ஆஸி 300 & 6, இந்தியா 622 ரன்களயும் எடுத்திருக்கும். எனவே, நாளைய போட்டியும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சில் டாஸ் வென்றால் எந்த அணியும் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை செட் செய்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பர். ரஹானேவும் அப்படியே செய்ய வேண்டும். டாஸ் வென்றால் யோசிக்காமல் பேட்டிங்தான்.

இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் வெளியாகிவிட்டது. ரோஹித் ஷர்மா ஆஸிக்கு சென்றுவிட்டதால், எதிர்பார்த்தது போலவே மயாங்க் அகர்வாலே பெஞ்ச்சில் வைத்துவிட்டு ரோஹித்தை சேர்த்துவிட்டார்கள். இதன்மூலம் ரோஹித்தும் சுப்மன் கில்லும்தான் ஓப்பனிங் இறங்கப்போகிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் ஓப்பனர்கள் பெரிதாக எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. சுப்மன் கில் மட்டும் கவுன்ட்டர் அட்டாக் செய்து கொஞ்சம் நம்பிக்கை அளித்துள்ளார். கில்-ரோஹித் என்கிற இந்த கூட்டணியும் புதிதுதான். மேலும், ரோஹித் ஷர்மாவும் எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஐ.பி.எல் போட்டிளில் ஓரளவுக்கு சிறப்பாக ஆடியிருந்தாலும் அதன்பிறகு காயம் அடைந்து, அதிலிருந்து மீண்டு இப்போதுதான் ஆஸிக்கு சென்றிருக்கிறார் என்பதால், அவரை கணிப்பது சிரமம்.

கில்லை பொருத்தவரை ஆஸியின் பௌலிங் அட்டாக்கிற்கு நல்ல கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கிறார். ஆனால், அதை விட முக்கியமானது நிலைத்து நின்று ஆடுவது. அதை இந்தப் போட்டியில் சுப்மன் கில் செய்து காட்ட வேண்டும். புஜாராவும் கடந்த ஆஸி சீரிஸில் காட்டிய ஃபார்மை இந்த சீரிஸில் காட்டவில்லை. இவர்கள் மூவரும் இந்த சிட்னியின் பேட்டிங் பிட்ச்சை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரஹானே, ஜடேஜா ஆகியோர் கடந்த போட்டியிலேயே சிறப்பாக ஆடியிருந்தனர். அவர்கள் அதே ஃபார்மை தொடர்ந்தாலே போதும்.

இந்தியாவைப் போலவே ஆஸியின் டாப் ஆர்டரும் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸியின் டாப்-6 பேட்ஸ்மேன்கள் யாரும் சதம் அடிக்கவே இல்லை. காரணம், வார்னர்-ஸ்மித் இருவரும் இல்லை. இந்தப் போட்டியில் வார்னர் களத்திற்கு திரும்பியிருப்பது ஆஸிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். வார்னர் சிட்னியில் மட்டும் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களோடு 732 ரன்களை எடுத்திருக்கிறார். வார்னரை இந்திய அணி சீக்கிரமே வெளியேற்றினாலே பாதி வேலை முடிந்துவிடும். ரஹானே, வார்னருக்கு என்ன திட்டத்தோடு வரப்போகிறார் என்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. வார்னர், புக்கோவ்ஸ்கி, லபுஷேன்,ஸ்மித் இந்த டாப் ஆர்டரின் பெயரை கேட்டாலே டெரர் ஆக இருக்கிறது. லபுஷேன், ஸ்மித் இருவரும் கடந்த போட்டிகளில் சொதப்பியிருந்தாலும் கம்பேக் கொடுப்பதற்கென்றே அளவெடுத்து செய்தது போல, சிட்னி இருப்பதால் இந்திய அணி கூடுதல் ஜாக்கிரதையுடன்தான் இவர்களை அணுக வேண்டும்.

பௌலிங்கை பொருத்தவரை உமேஷுக்குப் பதிலாக தேர்ந்தெடுப்பதற்கு ரஹானேவுக்கு சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் என மூன்று ஆப்சன்கள் இருந்தன. அதில் சைனியை டிக் அடித்திருக்கிறார் ரஹானே. இது ஒரு சர்ப்ரைஸான தேர்வு. ஷர்துல் தாகூருக்கும் நடராஜனுக்கும்தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சைனி தேர்வாகியிருக்கிறார். சைனி கொஞ்சம் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அதனால்தான் அவர் ப்ளேயிங் லெவனில் இருக்க வாய்ப்புகள் இல்லை என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது சைனி உள்ளே வந்திருப்பதன் மூலம் அவர் 100% உடல்தகுதியோடு இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். நடராஜனை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக ரசிகர்கள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

ஆனால், ரஹானேவின் இந்த முடிவுதான் மிகச்சரியானது மற்றும் நியாயமானது. சைனி முதலிலேயே டெஸ்ட் அணியில் இருக்கிறார். மேலும், அவருக்கு ரெட் பால் கிரிக்கெட்டுக்கு தேவையான வேகமும் ஸ்விங்கும் இருக்கிறது. நடராஜன் இப்போதுதான் அணிக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும், அவர் ஒரு ரெட் பால் ஸ்பெஷலிஸ்ட்டும் கிடையாது. சைனியை காக்க வைத்துவிட்டு நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது அவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மேலும், சிட்னிக்கு பதில் அடுத்த டெஸ்ட் போட்டியில் நல்ல பௌலிங்குக்கு ஒத்துழைக்கும் ப்ரிஸ்பேனில் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தால், அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. பும்ரா, சிராஜ், அஸ்வின் எல்லாருமே கடந்த போட்டியை போலவே சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி இந்த டெஸ்ட்டிலும் ஆதிக்கம் செலுத்தலாம்.

ரஹானேவுக்கு கடந்த போட்டியை விட இந்த போட்டிதான் அதிக சவால்மிக்கதாக அமையப்போகிறது. வார்னர், புக்கோவ்ஸ்கி, லபுஷேன், ஸ்மித் இந்த பேட்டிங் ஆர்டரை அவர் எப்படி திட்டமிட்டு வீழ்த்தப்போகிறார் என்பதில்தான் இந்த டெஸ்ட்டின் முடிவு அடங்கியிருக்கிறது. ரஹானே மீண்டும் மேஜிக் செய்வாரா? 2021–ல் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories