விளையாட்டு

“அலட்டல் இல்லாத அதிரடி” - நியுசிலாந்து கிரிக்கெட்டின் முகமாக மாறும் கேன் வில்லியம்சன்!

'Only Williamson can do Williamson' என்கிற மாதிரி கொரோனாவுக்கு பிறகு உலகக் கிரிக்கெட்டில் அவருடன் ஒப்பிட்டுப் பேசும் வகையில் யாரும் இல்லாத அளவுக்கு மிரட்டி வருகிறார்.

“அலட்டல் இல்லாத அதிரடி” - நியுசிலாந்து கிரிக்கெட்டின் முகமாக மாறும் கேன் வில்லியம்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு சொல்லவே வேண்டாம் அவர்கள் லெஜண்டுகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் மெஷின். ஆனால், நியுசிலாந்துக்கு அப்படி காலம் கடந்தும் நிற்கக்கூடிய வகையில் ஒரு வீரர் இருந்திருக்கிறாரா?

ரிச்சர்ட் ஹாட்லி, மார்டின் க்ரோ, க்றிஸ் கேர்னஸ் என ஒரு சில வீரர்கள் இருந்தாலும், இன்றைக்கு இவர்களெல்லாம் கூகுள் செய்து தெரிந்துகொள்ளும் அளவில்தான் இருக்கிறார்கள். நியுசிலாந்து என்றவுடன் இவர்களின் பெயர்கள் எல்லாம் நமக்கு நியாபகம் வருவதில்லையே! ஃப்ளெம்மிங், வெட்டோரி, மெக்கெல்லம் என பிரபலமான வீரர்கள் சிலர் இருந்தாலும் 'தி பெஸ்ட்' ஆக நியுசிலாந்து என்றால் இவர்தான் என்று சொல்லுமளவுக்கு ஒரு வீரர் அந்த அணிக்கு கிடைக்காமல்தான் இருந்தார். அதாவது, காலம் கடந்து நிற்கக்கூடிய ஒரு வீரர் நியுசிக்கு இல்லவே இல்லை. அந்த குறையைப் போக்க, காலமே கொடுத்திருக்கும் பதில்தான் 'கேன் வில்லியம்சன்'.

இன்னும் 50-100 வருடங்கள் கழித்தும் கூட 'நியுசிலாந்து' என்று சொன்னால் முதலில் வில்லியம்சனின் முகமே முன் வந்து நிற்கும் அளவுக்கு தரமான சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் 'கேன் வில்லியம்சன்'.

பாகிஸ்தானுக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 238 ரன்களை குவித்து அவுட் ஆகியிருக்கிறார் நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன். கடந்த ஒரு மாதத்தில் அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இது. நியுசிலாந்தின் இந்த சம்மரில் மட்டும் வில்லியம்சன் ஆடியிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்திருக்கிறார். 3 போட்டிகளில் மட்டும் 639 ரன்கள். ஆவரேஜ் 200 க்கும் மேல். மேலும், அதிக ரன் குவித்த நியுசிலாந்து வீரர்களின் பட்டியலில் ஃப்ளெம்மிங், ராஸ் டெய்லர் ஆகியோருக்கு அடுத்த இடத்தையும் வில்லியம்சன் பெற்றிருக்கிறார். இந்த பெர்ஃபார்மென்ஸ்களின் மூலம் நியுசிலாந்து அணியை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வேகமாக முன்நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

'Only Williamson can do Williamson' என்கிற மாதிரி கொரோனாவுக்கு பிறகு உலகக் கிரிக்கெட்டில் அவருடன் ஒப்பிட்டுப் பேசும் வகையில் யாரும் இல்லாத அளவுக்கு மிரட்டி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் 'வெண்முரசு' நாவலின் ஒரு பகுதியில் பீஷ்மரின் குணாதிசயங்கள் குறித்து 'மலையுச்சியின் ஒற்றை மரத்தில் கூடும் தனிமை அவனிடம் எப்போதுமிருந்தது. ஒவ்வொரு பார்வையிலும் தான் இங்கிருப்பவனல்ல என்று சொல்வது போல, ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அத்தனையையும் கொண்டு வந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான்' என்று எழுதியிருப்பார். வில்லியம்சனையும் இதே சொற்களால் அலங்கரிக்க விரும்புகிறேன்.

'ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கிலும் ஒவ்வொரு லீவிலும், தான் அதுவரை அறிந்த அத்தனை கிரிக்கெட் அறிவையும் பேட்டுக்கு கொண்டு வந்துவிடுகிறார்'.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 200 அடிப்பதற்கும் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடிப்பதற்கும் அவ்வளவு துல்லியமாக அவர் அடித்த கவர் ட்ரைவ் போதும் அவரின் temperament எப்படிப்பட்டது என்பதை விவரிப்பதற்கு. இதே டெஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தவுடன் Wagon wheel ஒன்றை போட்டிருந்தார்கள். எந்தப் பக்கமும் வஞ்சகம் வைக்காமல் அத்தனை திசையிலும் புகுந்து விளையாடி பவுண்டரி அடித்திருந்தார். அதுதான் வில்லியம்சன்.

வில்லியம்சனை ஏன் 'தி பெஸ்ட்' என சொல்கிறோம் என்பதற்கும் காரணம் அதுதான். இந்த ஆங்கிளில் இந்த லெந்தில் வீசினால் விக்கெட்டை தூக்கிவிடலாம் என்கிற வகையில் எந்த சமிக்ஞையும் அவரின் ஆட்டத்தில் வெளிப்படவே செய்யாது. இந்தப் போட்டியில் கூட அவரை எப்படி வீழ்த்துவது என தெரியாமல், ஒரு லென்த்தை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பௌலர்கள் திணறிக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் காலிலேயே வீசி எப்படியாவது வெறுப்பேற்றி விடலாம் என அப்படி ஒரு லைன் & லெந்தை பிடித்து வீசிக்கொண்டிருந்தனர் பாகிஸ்தான் பௌலர்கள். ஆனால், வில்லியம்சன் 8 முறை லெக் பைஸ் வாங்கினாரே தவிர விக்கெட்டை மட்டும் கொடுக்கவே இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை மனத்திடம்தான் எல்லாமே. ஷார்ட்டர் ஃபார்மட்களில் பெரிதாக இல்லாத ஸ்லெட்ஜிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் காரணம் இதுதான். ஆனால், வில்லியம்சன் ஆடும் போட்டிகளில் இதை ஒரு ஆயுதமாக கையாளவே முடியாது. கோலியை வெறுப்பேற்றி கவர் ட்ரைவ்க்கு பேட்டை விட வைத்து விட முடியும். ஸ்மித்தை வெறுப்பேற்றி பந்தை மீட் செய்ய வைத்து முடியும். ஆனால், வில்லியம்சனை எந்த பௌலரும் வெறுப்பேற்றவே முடியாது.

'நாம் எதற்காக கிரிக்கெட் ஆட வந்திருக்கிறோமோ அதற்காகத்தான் எதிரணியும் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறது. நமக்கு இருக்கும் அதே சுயமரியாதை அவர்களுக்கும் இருக்கிறது' என்கிற தன்புரிதலும் 'Thinking on the others shoes' என்கிற எதிராளியின் இடத்தில் தன்னை வைத்து பார்க்கிற குணமும் வில்லியம்சனுக்கு எப்போதுமே உண்டு.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விதிமுறைகள் என்ற பெயரில் நியுசிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கொடிபிடித்து களேபரம் செய்து இங்கிலாந்து அணியின் கொண்டாட்ட மனநிலையை குலைத்திருக்க முடியும். ஆனால், வில்லியம்சன் அவ்வாறு செய்யவில்லை. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வில்லியம்சன் இரட்டை சதம் அடித்த டெஸ்ட் போட்டியில் கிமார் ரோச் ஆடும்போது அவரின் தந்தை உயிரிழந்திருந்தார். ரோச்சுக்கு தனிப்பட்ட முறையில் கட்டியணைத்து ஆறுதல் சொல்லியிருப்பார் வில்லியம்சன். அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நியுசிலாந்து அணியுமே ரோச்சின் தந்தைக்காக ஜெர்சியில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடி நெகிழ்ச்சியடைய செய்தது.

'Spirit of the Game' என்பதை பறைசாற்றுவதில் நியுசிலாந்து கேப்டன்கள் அனைவருமே மற்ற நாட்டவர்களை விட எப்போதும் ஒரு படி மேல்தான். ஃப்ளெம்மிங், வெட்டோரி, மெக்கல்லம் என நீண்ட ஜெண்டில்மேன்களின் வரிசையில் அந்தக் கண்ணி அறுபடாமல் நியுசிலாந்து அணியை பொத்தி பாதுகாத்ததே கேப்டனாக வில்லியம்சன் செய்த மிகப்பெரிய காரியம். இந்த விஷயம்தான் முன்னாள் நியுசி கேப்டன் மெக்கலம்மை 'நான் ஏன் வில்லியம்சனை சிறந்த வீரர் என்கிறேன் என்றால், அவர், தான் மட்டும் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரையும் தன்னுடன் சேர்ந்து நன்றாக விளையாட வைக்கிறார். சக வீரர்களின் செயல்பாடும் மேம்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் சிறந்த வீரர் மட்டுமல்ல; சிறந்த தலைவர் என்கிறேன்' என சொல்ல வைத்திருக்கிறது.

ஒரு பேட்ஸ்மேனாக ஒரு கேப்டனாக நியுசிலாந்து அணியை எந்தெந்த உச்சங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அங்கேயெல்லாம் கூட்டிச் சென்றுக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல், சென்னையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட நாட்டிலிருந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத கிரிக்கெட்டிலிருந்து முதல் சகாப்தமாக உருவெடுத்து நிற்கிறார். இனி காலத்துக்கும் நியுசிலாந்து என்றால் கேன் வில்லியம்சன் தான் முதலில் தோன்றுவார். அது ஒரு பெயர் மட்டுமல்ல நியுசிலாந்து கிரிக்கெட்டுக்கான வரலாற்று அடையாளம்!

banner

Related Stories

Related Stories