விளையாட்டு

இரவு முழுவதும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்த தோனி... டெஸ்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் இன்று!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன.

இரவு முழுவதும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்த தோனி... டெஸ்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. கும்ளேவின் ஓய்வுக்குப் பிறகு கேப்டன் ஆன தோனி, மற்றொரு மகத்தான வீரர் அணியை வழிநடத்த வந்துவிட்டார் என்பதை அறிந்து, ஓய்வை அறிவித்த தினம் இன்று. தோனி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்களை ஷேர் மார்க்கெட் கூட கண்டிருக்காது.

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குள் வருகிறார் தோனி. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நீண்ட தலைமுடியுடன் களத்திற்குள் வந்து ஜெர்ஸியின் ஸ்லீவை சிறிது அட்ஜஸ்ட் செய்யும் தனக்கே உரித்தான ஸ்டைலுடன் பேட்டிங் செய்ய ஆரம்பித்தார் தோனி. முதல் ஆட்டத்திலேயே 117/6 என அணி தத்தளிக்க, வந்த வேகத்தில் பளார் பளாரென பவுண்டரிகளாக அடித்து 30 ரன்கள் எடுத்தார். அந்த 30 ரன்களில் ஆறு பவுண்டரிகள் வந்து விட்டது. 118-7 என்று ஸ்கோரில் இருந்து 167 என்ற ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது தோனியின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ். இன்னமும் இதுபோல பல ஆட்டம் வர இருக்கிறது என்பதற்கான ட்ரெய்லரை தனது முதல் போட்டியிலேயே வெளியிட்டார் தோனி.

நன்றாக டிஃபென்ஸிவ் டெக்னிக்குடன் ஆடுகிறாரே என்று நினைப்பதற்குள் தன்னுடைய இரண்டாவது தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் தோனி. இந்த முறை டிஃபென்ஸிவ் எல்லாம் கிடையாது. சிறு வயதில் ரப்பர் பந்தை ஓங்கி ஓங்கி அடிக்கும்போது கிழிந்து விடுமே... அப்படி பந்து கிழியும் அளவுக்கு இருந்தது தோனியின் அன்றைய ஆட்டம். அக்தர், ஆசிஃப், ரசாக் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து 153 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார் தோனி. அதிரடி, டிஃபென்ஸிவ் என ஆட்டத்திற்கு தகுந்தாற்போல் தன்னை தகவமைக்கும் தன்மையோடு விக்கெட் கீப்பிங்கும் இருந்ததால் இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக மாறிப் போனார் தோனி.

2008ம் ஆண்டு கும்ளேவின் ஓய்வைத் தொடர்ந்து டெஸ்ட் அணித் தலைவராக பொறுப்பேற்றார் தோனி. தனக்கு முதன்முதலில் வாய்ப்பளித்த கங்குலிக்கு அது கடைசிப் போட்டியாக அமைய கங்குலியையும் சிறிது நேரம் கேப்டன் ஆக்கி அழகு பார்த்தார் தோனி. நல்ல பண்பட்ட வீரராக தனது கேப்டன்சி பயணத்தை ஆரம்பித்தார். ஆடுவதற்கு மிகவும் கடினமான நியூசிலாந்து நாட்டில் சென்று தொடரை வென்று வந்தது தோனி தலைமையிலான இந்திய அணி. நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் கடந்து வெளிநாட்டு மைதானங்களிலும் தன்னை நிரூபித்தார் தோனி. இந்த காலகட்டத்தில்தான் இந்திய அணி முதன்முதலாக ICC தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றது. 2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான ICC டெஸ்ட் கனவு அணிகளின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார் தோனி.

அது வரை பெரிதாக ஆசிய மைதானங்களைத் தாண்டாத இந்திய அணி 2010–ம் ஆண்டு இறுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல ஆரம்பித்தது. முதலில் சென்று ஆடிய தென் ஆப்ரிக்க தொடரை சமன் செய்தது. சச்சின், லட்சுமண், தோனி என அனைவரும் சிறப்பாக ஆடினர். அடுத்ததாக சிறிது வலு குறைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு ஆட்டங்களை சமன் செய்து தொடரை வென்றது தோனியின் அணி. இத்தனைக்கும் நடுவில் இரண்டு IPL கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் லீக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை என பல வெற்றிகளைப் பெற்று அசைக்க முடியாத கேப்டனாக வலம் வந்தார் தோனி.

இதன் பின்பு தான் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இங்கிலாந்து சென்று ஆடிய தொடரில் வொய்ட்-வாஷ் ஆனது இந்திய அணி. அதன் பின்பு சிறிது நாட்களில் ஆஸ்திரேலியா சென்று அங்கும் வரிசையாக நான்கு ஆட்டங்களில் தோற்று வைட்வாஷ் ஆனது இந்தியா. சரி வெளிநாட்டில் வைத்து தானே தோற்றோம் என்று ஆறுதல் அடைவதற்குள் நம் நாட்டிலே வந்து நம் அணியை சாய்த்து விட்டு சென்றது இங்கிலாந்து. 2-1 என சொந்த நாட்டிலேயே இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது தோனி தலைமையிலான இந்திய அணி. ஆனால் ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்த போது ஆஸ்திரேலியாவை நம் நாட்டில் வைத்து வைட்வாஷ் செய்து அனுப்பினோம். தோனி இரட்டை சதம் எல்லாம் அடித்தார். இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கிடைத்த 4-0 என்ற வெற்றி தான் தோனியின் டெஸ்ட் வாழ்வில் கடைசியாக சாதித்த விஷயம்.

இரவு முழுவதும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்த தோனி... டெஸ்ட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள் இன்று!

அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சச்சினும் ஓய்வு பெற, தனது இரண்டாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் தோனி. தென் ஆப்ரிக்காவில் தோல்வி, நியூசிலாந்தில் தோல்வி, இங்கிலாந்தில் தோல்வி என அடுக்கடுக்காக இந்திய அணி தோல்விகளையே சந்தித்தது. அணிக்கு தோனி பாய்ச்சிய இளம் வீரர்களான அஸ்வின், தவான் போன்றோர் மீதெல்லாம் விமர்சனங்கள் வரத் தொடங்கின. தோனி வேண்டுமென்றே சீனியர் வீரர்களை புறக்கணிக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. சேவாக், ஹர்பஜன், ஜாகீர் போன்ற வீரர்களை தோனி ஒதுக்கிவிட்டார் என்று வெளிப்படையாகவே விவாதங்களில் பேசத் தொடங்கினர்.

தோனியும் அந்த நேரத்தில் மிகவும் பிசியான கிரிக்கெட்டர். மூன்று ஃபார்மட்டுகளிலும் இந்திய அணியை வழிநடத்திச் கொண்டிருந்தார். அதுபோக IPL தொடரில் சென்னை அணி வேறு. வேலைப் பளு அவரை பாதிக்க ஆரம்பித்தது. அவரின் பேட்டிங்கும் சரிவைக் காண ஆரம்பித்தது. பேட்டிங்கில் விட்டாலும் கீப்பிங்கில் கில்லி மாதிரி இருக்கும் தோனி அதிலும் சற்று வீக் ஆக ஆரம்பித்தார். 90 ஓவர்களுக்கு கீப்பிங் செய்வது கடினமானது அவருக்கு. 2014 ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு தோனியின் கையில் ஏற்பட்ட காயத்தால் ஐந்து ஒரு நாள் ஆட்டங்களில் ஆடாமல் இருந்தார். இதே காயம் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் பங்கேற்க விடாமல் செய்தது. அந்த நேரத்தில் தான் இதற்கு மேலும் மூன்று ஃபார்மட்டுகளிலும் ஆட முடியாது என்பதை உணர்ந்து ஓய்வை அறிவித்தார் தோனி.

மூன்று ஃபார்மட்டுகளிலும் ஆடும் அழுத்தம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தது BCCI. தான் கடைசியாக விளையாடிய இந்திய அணியின் ஜெர்சியை இரவு முழுவதும் அணிந்திருந்தார். 4,876 ரன்கள், 6 சதம், 33 அரை சதம், 256 கேட்ச்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்குகளுடன் ஓய்வு பெற்றார் தோனி.

தோனியின் ஒரு நாள் கேரியர் பேசப்படும் அளவுக்கு டெஸ்ட் கேரியர் பேசப்படுவது கிடையாது. தோனி மிகப்பெரிய பேட்ஸ்மேன் கிடையாது தான். இருந்தாலும் அவரது ஆட்டங்கள் பல முறை இந்திய அணியைக் கரை சேர்த்துள்ளன. 2014ம் ஆண்டு மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் எட்டு ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்று இருந்தபோது உள்ளே வந்து 71 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அதே இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில் 2007ம் ஆண்டு 76 ரன்கள் எடுத்து லாவகமாக தோல்வியைத் தவிர்க்க உதவினார் தோனி. 2010ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் அடித்த 90 ரன்கள் மற்றும் 2011ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த 74 ரன்கள் எல்லாம் மிக முக்கியமான நேரத்தில் அணிக்கு கை கொடுத்த இன்னிங்ஸுகள்.

SENA என்று அழைக்கப்படும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தோனியின் சராசரி 29 தான். ஆனால் அது தான் ஒரு ஆசிய விக்கெட் கீப்பருக்கு அந்த நாடுகளில் இரண்டாவது அதிகபட்ச சராசரி. மிகப்பெரிய பேட்ஸ்மேனான சங்ககரா கூட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அந்த நாடுகளில் தோனியை விட குறைவான சராசரியையே வைத்திருக்கிறார்.

"முற்றுப்புள்ளி வைக்கப்படும் முன்பு எந்த வாக்கியமும் முற்றுப் பெறாது" என தோனி கூறுவார். நானே முடியாது என்று சொல்லும் வரை எனக்கு முடிவு கிடையாது எனும் கொள்கையில் உறுதியாக இருந்த தோனி, தனது டெஸ்ட் கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்த தினம் இன்று.

banner

Related Stories

Related Stories