விளையாட்டு

“வேற மாதிரி விக்கெட் கீப்பர்” - இந்திய கிரிக்கெட்டின் புதிய சரித்திரம் தொடங்கிய நாள் இன்று!

கீப்பிங் செய்வதுடன் தங்கள் பணி முடிந்து விட்டது என்று இருந்த இந்திய விக்கெட் கீப்பர்கள் மத்தியில், தோனியின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.

“வேற மாதிரி விக்கெட் கீப்பர்” - இந்திய கிரிக்கெட்டின் புதிய சரித்திரம் தொடங்கிய நாள் இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

"நான் பீகார் அணியின் கேப்டனாக இருந்தபோது அணியிலிருக்கும் அத்தனை வீரர்களையும் கோபமாக திட்டியது உண்டு. ஆனால், அவரை மட்டும் திட்டியது கிடையாது. ஒரு முறை கூட நான் திட்டும் சூழ்நிலையை அவர் உருவாக்கியதே இல்லை" - 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய அணியில் இடம் பிடித்த சாதனை நாயகன் தோனி குறித்து அவருடைய பீகார் அணி கேப்டன் அடில் ஹுசைன் கூறிய வார்த்தைகள் இது.

CCL (Central Coal Limited) அணிக்காக தோனி ஆடிய காலத்தில் எல்லாரும் 2,000 ரூபாய் சம்பளம் வாங்கியபோது தோனிக்கு மட்டும் 200 ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது. காரணம் தோனி இப்போது மட்டுமல்ல... அப்போதிருந்தே கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏற்கனவே இந்திய அணியில் விளையாடிய திருக்குமரன், தேபாஷிஸ் மொஹந்தி போன்ற வீரர்களின் பந்துவீச்சை எல்லாம் விளாசித்தள்ளி, இந்திய கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துக் கொண்டிருந்தார் தோனி.

எந்த அளவு உழைக்கிறோமோ நமக்கு அவ்வளவு அருகில் அதிர்ஷ்டம் வரும். தோனி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிக் கொண்டே தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தார். 2000 முதல் 2004 வரை தோனி உழைத்த உழைப்பை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. CCL, பீகார், கிழக்கு மண்டலம், துர்கா ஸ்போர்ட்டிங் என்று எங்கு எங்கெல்லாம் கிரிக்கெட் நடக்கிறதோ அங்கு எல்லாம் தோனி தனது பங்களிப்பை வழங்க ஆரம்பித்தார். காலையில் தன்னுடைய ரயில்வே வேலை, மாலையில் கிரிக்கெட் என்று தனது வெற்றி இலக்குக்காக களைப்பு பாராமல் உழைப்பை மட்டும் மூலதனமாகப் போட்டு முன்னேற ஆரம்பித்தார் தோனி.

“வேற மாதிரி விக்கெட் கீப்பர்” - இந்திய கிரிக்கெட்டின் புதிய சரித்திரம் தொடங்கிய நாள் இன்று!

தோனியின் வாழ்க்கை மேல்நோக்கி ஏறிக் கொண்டிருந்த காலத்தில்தான், இந்திய கிரிக்கெட்டினுடைய விக்கெட் கீப்பிங் கீழ்நோக்கிச் சரிந்து கொண்டிருந்தது. நயன் மோங்கியாவிற்கு பிறகு ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை கண்டுபிடிக்கும் பணி கங்குலி தலைக்கு வர, அவரும் எத்தனையோ ஆட்களை முயற்சி செய்து பார்த்தார். சமிர் திஃகே, அஜய் ரத்ரா, தீப் தாஸ் குப்தா, விஜய் தஹியா, பார்த்திவ் படேல், சபா கரீம், தினேஷ் கார்த்திக் என்று எத்தனையோ கீப்பர்களை முயற்சித்து பார்த்தது இந்திய அணி. அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனரே தவிர யாரும் அணியில் நிலைக்கவில்லை. சில காலம் டிராவிட் கூட விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இந்நிலையில்தான் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகிறார். கால்பந்து அணியின் கோல் கீப்பராக பள்ளி காலங்களில் இருந்த தோனியை, அவரது ஆசிரியர் கிரிக்கெட் விக்கெட் கீப்பராக மாற்றினார். அந்த மாற்றம்தான் இந்திய அணியையே ஒருநாள் மாற்றும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். களத்திற்கு வெளியே தோனி மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் என்று அவரது பீகார் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார். ஆனால், களத்திற்குள் தோனியின் ஆட்டம் அப்படி இருக்கவில்லை. வானுயர சிக்சர்கள், பளார் பளாரென வரும் பவுண்டரிகள் என்று இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங்கில் ஒரு மாற்றத்தை உருவாக்கினார் தோனி.

பேட்டிங்கில் மட்டுமல்ல... கீப்பிங்கிலும் தனக்கென தனி முத்திரை பதிக்க ஆரம்பித்தார் தோனி. கண் இமைக்கும் நொடியில் நிகழும் ஸ்டம்ப்பிங் வித்தையை எல்லாம் இந்திய அணியில் தோனிதான் அறிமுகப்படுத்தினார். கீப்பிங் செய்வதுடன் தங்கள் பணி முடிந்து விட்டது என்று இருந்த இந்திய விக்கெட் கீப்பர்கள் மத்தியில், தோனியின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ரன்களை உயர்த்த அதிரடியான ஆட்டம், விக்கெட் விழாமல் காக்க பொறுமையான ஆட்டம் என்று இதற்கு முன் இந்திய அணி கண்டிராத பல்வேறு உத்திகளை செயல்படுத்திக் காட்டினார் தோனி.

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் தலையெழுத்தை மாற்றிய தோனியின் கைகளில் மூன்றே ஆண்டுகளுக்குள் மொத்த இந்திய அணியும் தரப்பட்டது. தனது முதல் தொடரிலேயே இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி கோப்பையை வென்று வந்தார். 2008–ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை கிரிக்கெட் ஜர்னலிஸ்ட் பரத் சுந்தரேசன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க காமன்வெல்த் தொடரை வெல்ல இன்னமும் 10 ரன்கள் தான் தேவை. ஆனால் தோனி அந்த நேரத்தில் வேறு கிளவுஸ் கொண்டு வாருங்கள் என்று ட்ரெஸிங் ரூம் நோக்கிச் சொல்கிறார். கிளவுஸ் கொண்டு வந்த வீரரிடம் "பொதுவில் இந்த வெற்றியை பெரிதாக கொண்டாட வேண்டாம்" என்று சொல்லி அனுப்புகிறார். அதிகமாக கொண்டாடினால் நாம் ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்று விட்டோம் என்று நினைப்பார்கள். ஆனால் இனி இது தொடரத்தான் போகிறது என்று நம்பிக்கையாகச் சொல்லி அனுப்பினார். அவர் சொன்னதுபோலவே பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கே சென்று ஆஸ்திரேலியாவை white wash செய்யும் அளவுக்கு தோனியும் அவரது அணியும் சாதித்துக் காட்டியது.

“வேற மாதிரி விக்கெட் கீப்பர்” - இந்திய கிரிக்கெட்டின் புதிய சரித்திரம் தொடங்கிய நாள் இன்று!

தோனியிடம் முக்கியமாக குறிப்பிட வேண்டிய மற்றொரு குணாதிசயம் அவரின் அமைதி. கங்குலி நெருப்பாக கேப்டன்சி செய்த இடத்தில் பனிப்பாறை போல வந்தவர் தோனி. எந்த சூழ்நிலையிலும் பதறாது காரியத்தை முடிக்கும் கெட்டிக்காரர் அவர். எத்தனையோ ஆட்டங்களில் பிறர் சொதப்பிய நேரத்தில் எல்லாம் இவர் சற்றும் பதறாது ஆட்டத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இந்த உலகத்திலேயே நாம் தான் கடைசி மனிதன் என்று வைத்துக்கொள்வோம். நம்மைத் தவிர யாரும் உயிருடன் இல்லை. இந்த நேரத்தில் நம் வீட்டின் காலிங் பெல் அடிக்கிறது என வைத்துக் கொள்வோம். யாராக இருந்தாலும் செய்யும் வேலையை விட்டுவிட்டு பதறி அடித்துக் கொண்டு ஓடி விடுவோம். ஆனால் தோனி அப்படி அல்ல. மெதுவாக சாப்பிட்டு முடித்து விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுத்தான் கதவைத் திறப்பார். காரணம் அவருக்கு தெரியும்... இங்கு நம்மைத் தவிர யாருமில்லை. காலிங் பெல்லில் ஏதாவது பிரச்சனை இருக்கும்... அதை பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று கூலாக இருக்கும் நபர் தோனி.

கவுதம் என்கிற தோனியின் சிறு வயது நண்பர் கூறுகையில் 'தோனியின் வீட்டில் ஒரு மிகப்பெரிய சச்சினின் புகைப்படம் ஒன்று இருக்கும். சச்சினுடன் இணைந்து ஆடுவதுதான் தோனியின் கனவு' என்று கூறியுள்ளார். ஆனால், தோனி தன்னுடைய கனவை நிறைவேற்றியதுடன் நில்லாமல் ஒரு படி மேலே ஏறிப்போய் சச்சினின் உலகக்கோப்பை கனவையும் நிறைவேற்றித் தந்தார்.

14,000 ரன்கள், 800க்கும் அதிகமான டிஸ்மிஸல்கள், மூன்று பெரிய ICC ட்ராபிகளை வென்று தந்த கேப்டன்... இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான தோனி சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்த தினம் இன்று!

banner

Related Stories

Related Stories