விளையாட்டு

“இந்திய அணியின் மிடில் ஆர்டரை கட்டிக்காத்த போராளி யுவராஜ் சிங்” - பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

அதிவேகமாக நீந்தும் வீரர்கள் பலர் இப்போது இந்திய அணியில் இருந்தாலும் அணி மூழ்கும்போது காப்பாற்றும் யுவராஜ்களைத் தான் இந்திய அணி இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது.

“இந்திய அணியின் மிடில் ஆர்டரை கட்டிக்காத்த போராளி யுவராஜ் சிங்” - பிறந்த தின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆண்டு 2000 - கென்யா நைரோபி நகரம். வாட்ச்மெனின் கதவு தட்டப்பட்டது. கேப்டன் கங்குலி அவசரமாக உள்ளே நுழைந்து, "நான் ஒரு சிறுவன் மீது கண் வைத்து பார்த்துக்கொள்ள சொன்னேனே... எங்கு அவன்?" என்று கேட்கிறார். காவலாளியோ பதில் ஏதும் இல்லாமல், 'எல்லாரிடமும் சொல்லி தேடிப் பார்க்கலாமா' என்று கேட்கிறார். "இல்லை.. அவன் எங்கு இருப்பான் என்று எனக்கு தெரியும். வண்டியை எடு" என்று உத்தரவு பிறப்பிக்கிறார் தாதா.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாட இந்தியா அப்போதுதான் கென்யா நாட்டுக்கு வந்திருந்தது. 19 வயதிற்குட்பட்டோர் தொடரில் சிறப்பாக விளையாடிய இளைஞன், அப்போதுதான் புதிதாக அணிக்கு வந்திருந்தார். அதை விட முக்கியமாக இந்திய அணியின் இரண்டு முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூதாட்ட பிரச்சனையில் சிக்கி தடையில் இருந்தனர். ஆக இந்த சிறுவன் எந்தக் கவனச் சிதறலும் இன்றி ஆடியாக வேண்டும் என்ற எண்ணம் கங்குலிக்கு அதிகமாக இருந்தது. அதனால்தான் அவனை எங்கும் வெளியே விடாது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று காவலாளிக்கு உத்தரவு போட்டிருந்தார் கங்குலி.

'இந்த ஊரில் எத்தனை நைட் க்ளப்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் வண்டியை விடுங்கள்... கண்டிப்பாக அவன் அங்கேதான் இருப்பான்' என்றார் கங்குலி. எதிர்பார்த்த மாதிரியே ஒரு நைட் க்ளபில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்த இளைஞன். சாப்பிட்டு முடித்ததும் கங்குலி பத்திரமாக அவனை ஹோட்டலுக்கு அழைத்து வந்து, "உனக்கு பதினெட்டு வயதுதான். வாழ்க்கையை அனுபவிக்க இன்னும் வயது இருக்கிறது. க்ளப்கள், பார்ட்டிகள் என்று பல உன் முன் இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் விட இந்த வாழ்க்கை மிகவும் பெரியது. உன் லட்சியத்தை அடைய இதுதான் வழி என்பதை நினைவில் வைத்துக்கொள்" என அட்வைஸ் செய்தார் சவுரவ். இருந்தாலும், அவனுக்கு பொறுப்பு வந்துவிட்டதா என்று கங்குலிக்கு இன்னமும் சந்தேகம். 10.30 மணிக்கு மறுபடியும் அவனது அறைக்கு வந்து பார்த்தார்... அவன் அறையில்தான் இருந்தான். ஆம், பொறுப்பு வந்துவிட்டது. சாதாரண பொறுப்பா அது? பத்து வருடத்திற்கும் மேலாக இந்திய அணியின் மிடில் ஆர்டரை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு அது.

அடுத்த ஐந்து நாட்களில் அந்த சிறுவன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்ததுமே கங்குலிக்கு நிம்மதி பெருமூச்சு வந்திருக்கும். அந்தக் காலத்தில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு வழியனுப்பி வைத்து தன் ஆட்டத்தை சர்வதேச அரங்கில் ஆரம்பித்தான் அந்த 18 வயது பாலகன். யுவராஜ் என்னும் இந்த யுகத்திற்கான ஆல் ரவுண்டர்.

அவசரத்தில் சரித்திரத்தை உருவாக்க முடியாது என்பது போல, ஆரம்பத்தில் யுவராஜின் ஆட்டம் ஒன்றும் அப்படி அழகாக இருக்கவில்லை. ஒரு பெரிய இன்னிங்ஸ்... அதைத் தொடர்ந்து சில மோசமான இன்னிங்ஸ்கள் என்று போய்க்கொண்டு இருந்தது யுவராஜின் வாழ்க்கை. அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்த அரைசதத்துக்கு பிறகு மற்றொரு அரைசதம் அடிக்கவே 15 போட்டிகள் தேவைப்பட்டன. கங்குலி நட்டு வைத்த விதை பட்டுப்போய் விட்டதோ என்று பலர் அஞ்சினர். செடி மேலே எழும்பி வர தடுமாறும்போது உரமிட்டு காக்கும் தோட்டக்காரன் போல உள்ளே வந்து யுவராஜை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தார் கங்குலி. 'யுவராஜ் ஒரு மிகப்பெரிய திறமைசாலி. அவரை தட்டிக் கொடுத்தால் அசாத்திய நிகழ்வுகள் இந்திய அணிக்கு நிகழும்!' என்று கங்குலி அன்று கூறியதாக கூறினார் இர்ஃபான் பதான்.

“இந்திய அணியின் மிடில் ஆர்டரை கட்டிக்காத்த போராளி யுவராஜ் சிங்” - பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

கங்குலி கூறியது போல அசாத்திய நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறத் துவங்கின. அப்படி முதலாவதாக நமக்கு நடந்த அதிசயம்தான் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடர். எப்படியும் ஜெயிக்க மாட்டார்கள் என்று தூங்கச் சென்ற எத்தனையோ ரசிகர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்தது அன்று யுவராஜ் ஆடிய இன்னிங்ஸ். கங்குலி சட்டையைக் கழற்றி சுற்றிய அந்த கண்கொள்ளாத் தருணத்திற்கு காரணமாக அமைந்தார் யுவராஜ்.

ஒரே சீராக போய்க்கொண்டு இருந்த நேரத்தில்தான் இந்திய அணிக்கு தோனி என்ற பெரும் புயல் ஒன்று வந்து சேர்ந்தது. 2005 முதல் 2011 வரை தோனியும் யுவராஜும் சேர்ந்துகொண்டு எதிரணிக்கு காட்டிய மாய ஜாலங்கள் எல்லாம் காலத்திற்கும் மறக்காது. இந்த 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் 154 இன்னிங்ஸ் ஆடிய யுவராஜ் 5,453 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். 11 சதங்களும் 32 அரைசதங்களும் இதில் அடங்கும். 18 முறை ஆட்ட நாயகன் விருது, ஏழு முறை தொடர் நாயகன் விருது என்று அந்த ஏழு ஆண்டு காலத்தை தன் கைகளில் வைத்திருந்தார் யுவி. இதே காலகட்டத்தில் யுவராஜுக்கு அடுத்து அதிக ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வாங்கியவர் தோனி. இந்த இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் பல்வேறு வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுத் தர ஆரம்பித்தது.

இங்கிலாந்து அணி என்றாலே சாக்லெட்டை பார்த்த சிறுவன் போல மகிழ்ச்சியாக ஆடுவார் யுவராஜ். இன்று வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை ஒரு நாள் போட்டிகளில் எடுத்த வீரர் யுவராஜ் தான். யுவராஜ் என்று சொன்னதுமே பலருக்கு கண் முன் வந்து நிற்கிற ஆட்டம் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்த ஆட்டம். அதுவும் இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான். அது மட்டுமா? முதுகில் காயத்தோடு இங்கிலாந்திற்கு எதிராக அடித்த சதம்... தனது கடைசி ஒரு நாள் சதம் என்று பல சாதனைகளை இங்கிலாந்து அணிக்கு எதிராக நிகழ்த்தியவர் யுவராஜ்.

ICC தொடர்கள் என்றாலே ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணியை இடது கையில் டீல் செய்தவர் நமது யுவி. 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக்கோப்பை என்று மூன்று தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை வெளியேற்றியதில் யுவராஜின் பங்கு அலாதியானது. அதுவும் டி20 உலகக் கோப்பையில் ப்ரெட் லீ பந்தில் அடித்த flock shot சிக்சர் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் ஆனந்தக் கண்ணீர் வரும்.

2011ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது யுவராஜுக்கு 29 வயது தான். அப்போதே கிட்டத்தட்ட 8,500 ரன்கள் அடித்திருந்தார். பல்வேறு சாதனைகளை தகர்ப்பார் என்று காத்திருந்த போது அவர் வாழ்வில் இடியாக வந்து விழுந்தது புற்றுநோய் என்னும் பெரும் வியாதி. உலகக்கோப்பையின் போதே அறிகுறிகள் தென்பட்டாலும், 'நான் செத்தாலும் சாகிறேன்' என்று இறுதி வரை ஆடிக் கொடுத்துவிட்டு சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சைக்கு செல்லும் முன்பு தனது குருநாதர் சச்சினிடம், "நான் திரும்பி வருவேனா என்று தெரியாது. அப்படி வந்தால் கண்டிப்பாக இந்திய அணிக்கு ஆடுவேன்" என்று கூறிச் சென்றார். உயிருடன் போராடும் தருவாயில் கூட கிரிக்கெட்டைக் காதலித்த காதலன் அவன்.

கூறியது போலவே திரும்ப வந்தாலும் அந்த கேன்சர் அவரிடம் இருந்து 70% கிரிக்கெட்டை தின்றுவிட்டது. நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற அவருடைய அர்ப்பணிப்புதான் மீதி 30% சதவீதத்தை விட்டு வைத்திருந்தது. ஃபார்ம் அவுட், ஃபிட்னஸ் பிரச்சனை, நிராகரிப்புகள், புறக்கணிப்புகள் மத்தியில் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார் யுவராஜ். ஏதோ வேற்று நாட்டு வீரர் போல எவ்வித ஃபேர்வெல் போட்டியும் வைக்காமல் வழியனுப்பியது BCCI.

இப்போது எல்லாம் சராசரி 50 இருந்தால்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறுகிறோம். ஆனால் யுவராஜ் உடைய சராசரி 40க்கும் கீழ் தான். பந்து வீச்சு ரெக்கார்டுகளும் அப்படி ஒன்றும் பிரமாதம் கிடையாது. இருந்தாலும் யுவராஜின் இடம் இன்னும் நிரப்பப்படாமல்தான் இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் கடலில் மூழ்குபவர்களைக் காப்பாற்ற ஒரு rescue team இருக்கும். ஒரு ஒலிம்பிக் நீச்சல் வீரனின் யுக்திகள் எல்லாம் அந்த ரெஸ்க்யூ வீரர்களுக்கு தெரியாது. ஆனால், மூழ்குபவர்களைக் காப்பாற்றத் தெரியும் அவர்களுக்கு. அதுபோலத்தான் யுவராஜ் பல முறை இந்திய அணியைக் காப்பாற்றி உள்ளார்.

அதிவேகமாக நீந்தும் வீரர்கள் பலர் இப்போது இந்திய அணியில் இருந்தாலும் அணி மூழ்கும்போது காப்பாற்றும் யுவராஜ்களைத் தான் இந்திய அணி இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது.

போராளி யுவிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

banner

Related Stories

Related Stories