விளையாட்டு

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!

“நீ இந்த விளையாட்டுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும்பட்சத்தில், அது உன்னைப் பார்த்துக் கொள்ளும்!'” என சூர்யகுமாருக்கு சச்சின் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய  மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

"நீ இந்த விளையாட்டுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும்பட்சத்தில், அது உன்னைப் பார்த்துக் கொள்ளும்!'' இது, சச்சின் டெண்டுல்கரின் பால்யத்தில் அவரது ஆசான் ராம்காந்த் அச்ரேக்கர் சொன்னது. ஐ.பி.எல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக ஜொலித்தும், ஆஸ்திரேலியாவுக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தபோது, சூர்யகுமாருக்கு சச்சின் இந்த மெசேஜை அனுப்பினார்.

2020 மட்டுமல்ல, கடந்த சில ஐ.பி.எல் சீசன்களாகவே சூர்யகுமார் யாதவ், தொடர்ச்சியாக பெர்ஃபார்ம் செய்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த சீனில், RCB-க்கு எதிராக 43 பந்துகளில் 79 ரன்கள், குவாலிஃபையர் 1–ல் டெல்லிக்கு எதிராக அரைசதம் அடித்ததும், பலரது கவனம் அவர் மீது விழுந்தது. ரன்கள் குவித்ததை விட அவரது ஷாட் செலக்ஷன், ஸ்பின்னர்களை அநாயசமாக எதிர்கொண்ட விதம், பேட்டிங் ஸ்டைல் பலருக்கும் பிடித்துப்போனது.

கெளதம் கம்பீர் கூட, "கொல்கத்தாவில் இருந்தபோது நாங்கள் சூர்யாவை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவரை கொல்கத்தா மிஸ் செய்துவிட்டது" என வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியில், தேர்வாளர்கள் சூர்யகுமார் பெயரை டிக் செய்யவில்லை.

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய  மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!

சூர்யகுமாரை தேர்வு செய்யாதது குறித்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல், கடைக்கோடி ரசிகன் வரை பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மும்பை லாபியைத் தாண்டி பல மட்டத்திலும் சூர்யகுமாருக்கு ஆதரவு குவிந்தது. அதேநேரத்தில், அவரை யாருக்குப் பதிலாக எந்த இடத்தில் இறக்குவது என்ற கேள்வியும் எழுந்தது.

தொடர்ந்து டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரன்கள் குவித்தும், இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சூர்யகுமார், இரண்டு நாட்கள் பயிற்சிக்கும் செல்லவில்லை. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் அவர் போக்கில் விட்டுவிட்டது. அந்தமாதிரியான நேரத்தில்தான்தான் சச்சின், இந்த மெசேஜை அனுப்பினார்.

"இதுதான் உனக்கு கடைசி தடை. நீ இந்திய அணியில் இடம்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. கிரிக்கெட்டிடம் சரணடைந்து விடு. வேறு எதிலும் கவனத்தைச் சிதறவிடாதே. எனக்குத் தெரியும், நீ எளிதில் மனம் தளர்ந்துவிடும் ஆள் இல்லை என்று. தொடர்ந்து இதே மாதிரி பல இன்னிங்ஸ் விளையாடி, எங்களை மகிழ்விக்க வேண்டும்!"

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய  மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!

சச்சினின் இந்த மெசேஜைப் படித்தபின் உற்சாகமாகி விட்டார் சூர்யகுமார். "ஒரு மெசேஜில் அவர் எனக்கு எல்லா விஷயத்தையும் புரியவைத்துவிட்டார். நான் கிரிக்கெட்டுக்கு நியாயமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் என்னைப் பார்த்துக்கொள்ளும். அவர் 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்கு நியாயமாக இருந்ததால்தான், இந்த உலகம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் அவர் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். அவர் இப்படியொரு மெசேஜை அனுப்பியிருக்கிறார். இதை விட வேறு என்ன வேண்டும்" என்ற சூர்யா, இந்திய அணியின் தேர்வு தன் மனதில் குடைச்சல் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

"என்ன முயன்றாலும் சில விஷயங்கள் மனதில் இருந்து மறையாது அல்லவா? இந்திய அணியின் தேர்வு இருக்கிறது. அதனால் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டேதான் இருந்தது. இந்திய அணி அறிவிப்பு வெளியாகி, நான் தேர்வுசெய்யப்படவில்லை எனத் தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். ஏமாற்றமாக இருக்கிறதா? என கோச் ஜெயவர்த்தனே, ஜாகீர் கான் கேட்டார்கள். 'இன்னும் எவ்வளவு நாள்?' என விரக்தியாகத்தான் பதில் சொன்னேன். அடுத்த இரண்டு நாட்கள் பயிற்சிக்குச் செல்லவில்லை. மும்பை அணி நிர்வாகமும் பிரேக் எடுக்க அனுமதித்தது." என்றவர், இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆஃப் சீசனில் மெனக்கிட்ட சில விஷயங்களைப் பகிர்ந்தார்.

"கடந்த இரண்டு சீசன்கள், 30 பந்துகள் விளையாடியதும் சோர்வடைந்துவிடுவேன். அதனால், சோர்வடைவதற்குள் 40–50 பந்துகளை சந்தித்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். லாக் டவுனில் ஃபிட்னஸுக்காக ரொம்பவே மெனக்கெட்டேன். டி20 ஃபார்மட்டுக்கு ஏற்ப உடல்வாகு இருக்க வேண்டும் என்பதற்காக, 14 கிலோ வரை எடையைக் குறைத்தேன். இதற்கு முன் பல நல்ல இன்னிங்ஸ் ஆடியிருந்தாலும், மக்கள் நினைவில் நிற்கும்படி ஆடியதில்லை. இந்தமுறை அப்படியொரு இன்னிங்ஸும் ஆடி விட்டேன். விரைவில் இந்திய அணியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என புத்துணர்ச்சியுடன் முடித்தார் சூர்யா.

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய  மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!

பொதுவாக, ஐ.பி.எல் தருணங்களில் வீரர்கள் ஒவ்வொருவரும், "நாங்கள் ஒரு குடும்பம்" என அடிக்கடி சொல்வார்கள். மும்பை இந்தியன்ஸ் அதை எப்படி சாத்தியப்படுத்தியது என விவரிக்கிறார் சூர்யகுமார். "ஐ.பி.எல் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, மும்பையில் ரிலையன்ஸ் மைதானத்தில் நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். மும்பையில் அப்போது செம மழை. எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆனால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு, மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. வெளியில் மழை பெய்தாலும், நாங்கள் பயிற்சி செய்தோம். அந்த கிரவுண்டில் களிமண் தரை, செம்மண் தரை, பேட்டிங் செய்ய ஏற்ற தரை என மூன்று விதமான பிட்ச் இருந்தது. அதனால்தான், அமீரகம் செல்லும்போது நாங்கள் மனதளவில் தயாராகிவிட்டோம்.

குவாரன்டைனில் இருந்தபோது ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. வீட்டில் கிடைப்பது போன்ற உணவு கிடைத்தது. அதற்காகவே சமையல்காரர் நியமிக்கப்பட்டிருந்தார். நினைத்த உணவு கிடைத்தது. யாருக்காவது பிறந்தநாள் என்றால், வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர் என ஒட்டுமொத்தமாக கொண்டாடினோம்.

“சூர்யகுமாருக்கு சச்சின் அனுப்பிய  மெசேஜ்?” : மும்பை லாபியை தாண்டி குவியும் ஆதரவு!

பல அணிகள், வீரர்களின் குடும்பத்தினரை அனுமதிக்காது. ஆனால், குடும்பம் முக்கியம், கேம் முடிந்தபின் வீரர்களுக்கு மனரீதியாக ஒரு சப்போர்ட் தேவை. அதை குடும்ப உறுப்பினர்கள்தான் தர முடியும் என்பதை மும்பை நிர்வாகம் அறிந்துவைத்திருந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் ஒட்டுமொத்தமாக சந்திக்கும்போது, ஒரு திருவிழா போல இருக்கும். இப்போது இந்தியா திரும்பியபின்பும் அனைவரும் தொடர்பில் இருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படி இல்லை. இதற்கு முன், போட்டி முடிந்த பின் எங்கள் அறையில் இருப்போம். யாரிடமும் பேச முடியாது. இதற்கு முன்பும் குடும்பத்தினரை அனுமதித்திருந்தனர் என்றாலும், அது குறுகிய நேரம்தான். ஆனால், இப்போது நாங்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்ததால், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடிந்தது. அது களத்திலும் எதிரொலித்தது.

நாங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருந்தோம். ஒருவர் வெற்றியை எல்லோரும் கொண்டாடினோம். முதல் ஏழு போட்டிகளில் வெவ்வேறு வீரர்கள், ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டனர். அப்போது மற்ற வீரர்களின் குடும்பத்தினரும், அதைக் கொண்டாடினர். ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும், எல்லோரும் ஒன்றுகூடுவோம். மற்ற ஐ.பி.எல் போட்டிகள் அல்லது சினிமாவை சேர்ந்து பார்ப்போம். அமீரகத்தில் இருந்தபோது, சில நேரம் வீட்டை மிஸ் செய்வது போல இருந்தது. இப்போது வீட்டுக்கு வந்தபின், அமீரகத்தில் நாங்கள் ஒன்றாக இருந்ததை மிஸ் செய்வது போல் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories