விளையாட்டு

T20WorldCup : இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி - இந்தியர்களின் 11 ஆண்டுகால ஏக்கம் தீருமா?

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

T20WorldCup : இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி - இந்தியர்களின் 11 ஆண்டுகால ஏக்கம் தீருமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதவிருந்தன. சிட்னி மைதானத்தில் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால், சிட்னி வானிலை நிலவரப்படி காலை முதலே அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், கள நடுவர்கள் டாஸ் போட காத்திருந்தனர்.

T20WorldCup : இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி - இந்தியர்களின் 11 ஆண்டுகால ஏக்கம் தீருமா?

மழை தொடர்ந்ததையடுத்து, டாஸ் சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அரையிறுதி ஆட்டம் என்பதால், ஐ.சி.சி விதிப்படி அதிக புள்ளிகளை பெற்ற அணி நேரடியாக தகுதி பெறும். அதன் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்றதால், புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, 3 முறை அரையிறுதிக்கு முன்னேறிய போதும், தோல்வியே கண்டிருந்தது.

2009ம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டு வரும் சூழலில், கோப்பை வெல்லாத 11 ஆண்டு கால ஏக்கத்தை இந்த முறை இந்திய வீராங்கனைகள் தணிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories