விளையாட்டு

IPL 2019 : இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? சென்னை டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL 2019 : இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? சென்னை டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தகுதிச்சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்து தகுதி பெற்றன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் ‘லீக்‘ முடிவில் வெளியேற்றப்பட்டன.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லியை 2 முறை ‘லீக்‘ ஆட்டத்தில் வீழ்த்தி இருப்பததால் இந்த போட்டியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

டெல்லி அணி இன்று வெற்றி பெற்றால் முதல் முறையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும். சென்னை அணி இன்று வெற்றி பெற்றால் ஐ.பி.எல்.லில் 100 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாகும். இதற்கு முன் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

banner

Related Stories

Related Stories