விளையாட்டு

IPL 2019 : பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

IPL 2019 : பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.மும்பை அணியில் காயம் அடைந்த அல்ஜாரி ஜோசப்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும்,பார்த்தீவ் பட்டேலும் களமிறங்கினார்கள். முதல் ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய விராட்கோலி (8 ரன்) 3-வது ஓவரில் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. அடித்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 49 ரன்னாக இருந்தது.

மொயீன் அலி, டிவில்லியர்ஸ்
மொயீன் அலி, டிவில்லியர்ஸ்

இதனை அடுத்து மொயீன் அலி, டிவில்லியர்சுடன் இணைந்தார். இருவரும் பந்தை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டியடித்து வேகமாக ரன் சேர்த்தனர். 13.2 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்களை கடந்தது. டிவில்லியர்ஸ் 41 பந்துகளிலும், மொயீன் அலி 31 பந்துகளிலும் அரைசதத்தை கடந்து அசத்தினார்கள்.

அரைசதத்தை எட்டிய அடுத்த ஓவரிலேயே மொயீன் அலி மலிங்கா பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 17.1 ஓவர்களில் 144 ரன்னாக இருந்தது. அடுத்து களம் கண்ட மார்கஸ் ஸ்டோனிஸ் அதே ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

மலிங்கா
மலிங்கா

அடுத்து அக்‌ஷ்தீப் நாத் களம் இறங்கினார். கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் , பொல்லார்ட்டால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதே ஓவரில் அக்‌ஷ்தீப் நாத் , பவான் நெகி ஆகியோர் மலிங்கா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார்கள்.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டும், பெரேன்டோர்ப், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

டி காக் மற்றும்  ரோஹித் சர்மா
டி காக் மற்றும் ரோஹித் சர்மா

இதை அடுத்து விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடினர். டி காக் சிக்ஸர் மழை பொழிந்தார்.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் இவர்களின் விக்கெட்களை வீழ்த்த சுழல் பந்து வீச்சாளர் மொயின் அலி தனது முதல் ஓவரிலேயே இருவரையும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க செய்தார். டி காக் 40 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்த ஜோடியின் விக்கெட்களை சஹால் அடுத்தடுத்து வீழ்த்தினார்.சூரியகுமார் யாதவ் 29 ரன்னிலும், இஷான் கிஷன் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். அதன் பின்னர் வந்த பாண்டியா பிரதர்ஸ் நிலைத்து விளையாடினர்.

IPL 2019 : பெங்களூரு அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது மும்பை அணி

19வது ஓவரில் ஹர்டிக் பாண்டியா 6,4,4,6 வீளாசி மும்பை அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். மும்பை இன்டியன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 7-வது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories