அரசியல்

தொகுதி மறுவரையறையில் இதுதான் திமுக நிலைப்பாடு .. சமரசத்திற்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் திமுக-வின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான் அதில் மாற்றம் இல்லை என்றும், நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறையில் இதுதான் திமுக நிலைப்பாடு .. சமரசத்திற்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி கூட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த மசோதா தாக்கலாக உள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக தனது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக பொய்ச்செய்தியை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையில் திமுக-வின் நிலைப்பாடு குறித்து திட்டவட்டமான விளக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!

நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!

ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.

பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது, எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories