
’’மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும் போட்டியையும் உருவாக்குவது எந்த வகையில் நியாயம்?’’ இதுதான் விஜய் நடத்திய கல்வி விருது விழாவின் முக்கியமானக் கேள்வி!
மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை மட்டும் மேடையேற்றி, ஊடக வெளிச்சத்தில் கொண்டாடுவதால் மற்ற மாணவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விரும்புகிறது த.வெ.க ?
அதிக மதிப்பெண் பெறாதவர்கள் திறமையற்றவர்களா? சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் சாதிக்கத் தகுதியற்றவர்களா? கல்வி என்பது மதிப்பெண் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பது மட்டும்தானா?
மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்ததையும் தாழ்வு மனப்பான்மையையும், தற்கொலை எண்ணங்களையும் உருவாக்குகிறது என்பதால்தான் 2017 ஆம் ஆண்டு, 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறைக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைத்தது.
அந்த முடிவை எடுத்த அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இப்போது த.வெ.க-வில் தான் இருக்கிறார். அதுவும் அமைச்சர் ஆகவும் இருக்கிறார். தனது கட்சியின் தலைவருக்கு அந்த முடிவின் பின்னணியை எடுத்துச் சொல்லி இருக்க வேண்டாமா?
’’கட்சித் தலைவராக இருந்த போது, அரசியல் காரணங்களுக்கக அவர் நடத்திய விழா, அவரது விருப்பமாக இருக்கலாம். ஆனால், இப்போது அவர் வகிக்கும் பொறுப்புக்கு இந்த விழா, ஏற்புடையது அல்ல’’ என்று கல்வியாளர்களும் மனநல ஆலோசகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதுவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே மேடையில், மாணவர்களை முதலிடம் என்று அறிவித்து பிரித்துக் காட்டுவது வேதனையானது; அறிவீனம் அல்லவா? மாணவர்களின் தன்நம்பிக்கையை சிதைக்கும் செயல் அல்லவா?
மாணவர்களின் திறமை மதிப்பெண்களால் மட்டும் அளவிடப்படுவது இல்லை. மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களிடையே போட்டியைத் தூண்டுவது சாதனை அல்ல; ஒவ்வொரு மாணவருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிக்கொணர்வதுதான் சாதனை! மாணவர்களின் மனநிலையோடு பந்தாடலாமா ?
தமிழக அரசு 2017 ஆம் ஆண்டு, மாணவர்களின் மன நலத்தையும் சமத்துவத்தையும் கருத்தில் கொண்டு கைவிட்ட, தடை விதித்த ரேங்க் கலாச்சாரத்தை மீண்டும் ஊக்குவிப்பது ஏன்? கல்வி என்பது சிலரை மட்டும் கொண்டாடுவற்கான மேடை அல்ல; அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கும் களமாக இருக்க வேண்டும்.
இதை உணர்வீர்களா..? மாறுவீர்களா..?






