
இந்தியா என்பது ‘மதச்சார்பற்ற நாடு’ என அரசியலமைப்பு உறுதிப்படுத்தினாலும், தேசிய அளவில் ஒன்றிய பா.ஜ.க அரசின் காவித் திணிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே காவி தலைதூக்கிவிட்ட நிலையில், அண்மையில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த மேற்கு வங்கம் மாநிலத்திலும் பேருந்துகளுக்கு காவி, மெட்ரோ வண்டிகளுக்கு காவி என ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை காவி வடிவில் புகுத்தி வருகிறது பா.ஜ.க அரசு.
இந்த காவித் திணிப்பு அரசியலோடும், ஆட்சி நிர்வாகத்தோடும் நின்றுவிடாமல், அதையும் கடந்து விளையாட்டிலும், குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆட்டங்களுக்கான உடையிலும்கூட காவி என்னும் அளவிற்கு சென்றுவிட்டது.
இப்படி, எங்கும் காவி - எதிலும் காவி என்பதான சித்தாந்தத்தை கொண்டிருக்கும் பா.ஜ.க, தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்க இன்றளவும் திக்குமுக்காடி வருகிறது. அதனால், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடிமைகளைத் திரட்டி, தனது காவியாட்டத்தை மேலோட்டமாக மேற்கொண்டு வருகிறது பா.ஜ.க.
இந்த காவியாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் அடாவடித்தனத்தை முன்னெடுத்து வருகிறது. திருவள்ளுவர் என்பவர் பொதுமையானவர், திருக்குறள் உலகத்திற்கே பொதுமையானது.

திருக்குறள் ’தமிழ்’ மொழியில் எழுதப்பட்டிருப்பதால், அதற்கு தமிழ் இனம் உரிமைக் கொண்டாடுகிறதே தவிர, எந்த ஒரு மதமும் திருக்குறளையோ, திருவள்ளுவரையோ உரிமைக் கொண்டாடுவது எவ்வகையிலும் சரியாக இருக்காது.
ஆகவே, தமிழ்த் தேசிய இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் பா.ஜ.க.வின் காவித் திணிப்பை தொடர்ந்து கண்டித்து, அப்புறப்படுத்தி வருகின்றன.
இப்படியான சூழலில், நேற்று (அக்.11) பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி, மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி, காவி உடையணிந்த திருவள்ளுவர் சிலையை பார்வைக்கு வைத்து சர்ச்சையை உண்டாக்கியது பா.ஜ.க.
ஆனால், இன்றைக்கு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய் அவர்களோ, சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையம் வரை சென்று வரவேற்றதோடு மட்டுமில்லாமல், அதே விமான நிலையம் வரை சென்று வழியனுப்பியும் வைத்துள்ளாரே தவிர, திருவள்ளுவருக்கு காவி பூசியதற்கு ஒரு சொல் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
மேடைக்கு, மேடை தி.மு.க… தி.மு.க… என மூச்சு முட்டும் அளவிற்கு பேசும் முதலமைச்சர் விஜய்க்கு, பா.ஜ.க என்னும் ஒற்றைச் சொல்லை உச்சரிக்க அத்தனை அச்சம் எதற்கு என்ற கேள்வி இதன்வழி எழுந்துள்ளது.
திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியதற்கு நாங்களும் கண்டனம் தெரிவித்துவிட்டோம் என கணக்கு காண்பிப்பதற்காக, த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட கண்டனக் குறிப்பில்கூட, பா.ஜ.க என்ற சொல் இடம்பெறவில்லை.
இதனைக் கண்டித்து, ”இதுதான், த.வெ.க.வின் கொள்கையா? தனது கூட்டணிக்கு ’மதச்சார்பற்ற’ கூட்டணி எனப் பெயர் வைப்பதோடு, தனது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் விஜய் எண்ணிவிட்டதால், இதனைக் கண்டிக்காமல் விட்டுவிட்டாரா?” என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.






