
கழக மறுசீரமைப்புக் குழு திட்டங்கள் முடிவுகள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கள ஆய்வு மற்றும் பெறப்பட்ட பல்வேறு கருத்துக்களுக்கு ஏற்ப கழகத்துக்கு புதுவடிவம் தருவதற்கான பரிந்துரைகளை வழங்கிட, அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவானது பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மாவட்டம்-பகுதி-நகரம்-ஒன்றியம்-பேரூர்-வட்டம்-கிளைகளை மாற்றி அமைப்பதற்கான இடைக்கால பரிந்துரைகளை என்னிடம் வழங்கியது.
பரிந்துரைகள் அனைத்தும் கழகத்தின் முன்னோடிகளோடு முழுமையாக கலந்தாலோசிக்கப்பட்டு, ஆகஸ்ட் 22ஆம் நாள் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் தலா இருவர் என தலைமைக்கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாவட்டக் கழகக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இடைப்பட்ட காலத்தில் திணிக்கப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கழகத்தினர் பலரும் களம் கண்டு கடுமையாக உழைத்தனர். களப்பணியில் சுணங்காமல் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளும், நன்றிகளும்!
இடைத்தேர்தல் காரணமாக கழக மறுசீரமைப்புப் பணியில் எற்பட்ட சிறு இடைவெளியைத் தொடர்ந்து மீண்டும் இப்பணியை வேகப்படுத்த வேண்டியுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட பகுதி-நகர-ஒன்றிய-பேரூர்-வட்ட-கிளை விவரங்கள் தலைமைக்கழகத்தின் ஒப்புதலோடு முரசொலியில் அறிவிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர் சேர்க்கை- உட்கட்சித்தேர்தல் என அடுத்தடுத்த பணிகள் காத்திருக்கின்றன.
எனவே, கழக மறுசீரமைப்புக்குழுவின் பரிந்துரைப்படி வரையறை செய்யப்பட்டுள்ள புதிய பகுதி-நகர-ஒன்றிய-பேரூர்-வட்ட-கிளைக் கழக விவரங்களை தலைமைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட படிவங்களில் நிரப்பி, மீண்டும் மாவட்டக்கழக கூட்டத்தில் புதிய கழக அமைப்புகளின் விவரங்களை முழுமையாக வாசித்துக் காட்டி அனைவரின் ஒப்புதலையும் பெற்று, வரும் 20.10.2026க்குள் தலைமைக்கழகத்தில் தலைமைக்கழக பிரதிநிதிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியை எந்தவித தாமதமுமின்றி விரைந்து முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டச் கழகச் செயலாளர்கள் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.






