
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், `உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் `திணை நிலவாசிகள்’ ஒருங்கிணைக்கும் தகைசால் தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு சிலை திறப்பு விழா மற்றும் `அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ நூல் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த விழாவில் கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தோழர் நல்லகண்ணு திருஉருவச்சிலையைத் திறந்து வைத்து, ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ எனும் நூலை வெளியிட்டு ஆற்றிய் உரை,
“இன்று, தோழர் நல்லகண்ணு அவர்களுக்காக, முதன்முதலாக எழுப்பப்பட்டுள்ள சிலையை உங்களுடன் சேர்ந்து திறந்துவைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்குத் தந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் சேர்ந்து, `திணை நிலவாசிகள்’ அமைப்பைச் சேர்ந்த அருமைச் சகோதரர் பகுவின் “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் இங்கே வெளியிட்டுள்ளோம்.
தோழர் நல்லகண்ணு அவர்களுக்குச் சிலை அமைத்திருப்பது மூலமாக, இந்தச் சமூகம் இன்றைக்கு உண்மையில் யாரையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இந்த அமைப்பினர் மிகத்தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ஏனெனில், இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
“போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர், அய்யா நல்லகண்ணு அவர்கள். அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் விலக்குப் போராட்டம். டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பாக, நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். கையெழுத்து இயக்கம் நடத்தி, 80 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றோம். மோட்டார் சைக்கிள் பேரணி உள்பட நீட் ஒழிப்புக்காகப் பல்வேறு போராட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 2021-ஆம் ஆண்டு, எங்கள் கழக அரசு அமைந்தவுடன், கழக அரசு சார்பாக நீட் பாதிப்பைக் கண்டறிய, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில், அப்போதைய முதலமைச்சர், நமது தலைவர் அவர்கள் ஒரு கமிட்டியும் அமைத்தார். அந்த கமிட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களைச் சந்தித்து, ஒரு பரிந்துரையை அரசிடம் கொடுத்தார்கள். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், நீட் விலக்கு வேண்டும் என்று ஒரு சட்ட முன்வடிவை எங்கள் கழகத் தலைவர், அப்போதைய முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்தார்கள்.

அதற்கு, ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. உடனே உச்ச நீதிமன்றம் வரை போய்ப் போராடிய இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். டெல்லியில் நீட் குளறுபடிக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. இனிமேல்தான் அந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்போகிறது என்பதுதான் என் எண்ணம். நீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாகத்தான், நான் அந்தப் போராட்டத்தைப் பார்க்கிறேன்.
அய்யா நல்லகண்ணு அவர்கள் இன்று இருந்திருந்தால், அவரும் இதைத்தான் நிச்சயம் சொல்லியிருப்பார். அய்யா நல்லகண்ணு அவர்கள் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட அய்யா நல்லகண்ணு அவர்களின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.
இங்கு, தோழர் பகு அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார், இந்த நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர் வருகிறார், தோழர் வீரபாண்டியன் அவர்களும் வருகிறார் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள், விசாரிப்புகள் என்று அவர் நாசூக்காகச் சொன்னார்.
ஆனால் வந்தவுடன் என்னிடம் வெளிப்படையாகவே சொன்னார், ’நிறைய பேர் போன் செய்து கேட்டார்கள். சார், நாளைய நிகழ்ச்சியில் குதிரை பேரம் நடத்துகிறீர்களா?’ என்று. உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தோழர் வீரபாண்டியன் அவர்கள் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். தலைவர், உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன். ஏனெனில், தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.
டாக்டர் கலைஞர் அவர்கள் அடிக்கடி பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். “நான் மட்டும் பெரியாரைச் சந்திக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் கம்யூனிஸ்ட் காரனாகத்தான் இருந்திருப்பேன்” என்று சொல்வார். அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மேல் கலைஞர் அவர்களுக்குத் தனிப்பாசம் உண்டு.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். வெறும் ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது பத்திரிகையாளர்கள் சென்று கலைஞரிடம் கேட்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் அவர் மனதில் இல்லை. அப்போது அவர், ’தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத ஒரு சட்டசபை அமைந்திருக்கிறது என்பதுதான் எனக்கு வருத்தம்’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அந்த அளவுக்கு, கம்யூனிஸ்ட்டுகள் மேல் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தனிப் பாசம் இருந்தது. குறிப்பாக, அய்யா நல்லகண்ணு, பெரியவர் சங்கரய்யா போன்றவர்கள் மீது கலைஞர் அவர்கள் வைத்திருந்த அன்பு மிகப்பெரியது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்டு, அதை நடைமுறைப்படுத்தியவர்தான் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்களின் வழியில், கம்யூனிஸ்ட்டுகள்மீது எங்கள் கழகத் தலைவர் அவர்களும் தனி மரியாதை வைத்திருந்தார்கள். அய்யா நல்லகண்ணு அவர்களை அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தவர், எங்கள் தலைவர் அவர்கள். குறிப்பாக, நல்லகண்ணு அய்யாவின் பிறந்தநாள் அன்று, என்ன வேலை இருந்தாலும் முதலில் அவர் வீட்டுக்குச் சென்று, அவரின் வாழ்த்தைப் பெறக்கூடியவர் எங்கள் தலைவர் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருதையும் வழங்கிப் பெருமைப்படுத்தியவர், எங்கள் தலைவர் அவர்கள். நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைந்தபோது, அவருக்கு முழு அரசு மரியாதையையும் கொடுத்தவர் எங்கள் தலைவர் அவர்கள். பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யா நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த எங்கள் கழகத் தலைவர் அவர்கள், உணர்ச்சிப்பெருக்குடன் வீரவணக்கம் செலுத்திய காட்சியை நிச்சயம் யாராலும் மறந்திருக்க முடியாது.
நானும் அய்யா நல்லகண்ணு அவர்களைப் பலமுறை சந்தித்துள்ளேன். 2021-ஆம் ஆண்டு, நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும், முதலில் சென்று வாழ்த்துப் பெற்றது அய்யா நல்லகண்ணு அவர்களிடத்தில்தான். அவரை யார் சந்திக்கச் சென்றாலும் பரிசாக, அவர் புத்தகங்கள் கொடுப்பார். நான் அவரைச் சந்திக்கச் செல்லும்போது, புத்தகங்கள் கொடுத்தேன். அவரும் என்னுடன் புத்தகங்களைப் பரிமாறிக்கொண்டார். நிறைய அரசியல் பேசுவார். பல அறிவுரைகளையும் சொல்லியிருக்கிறார்.
அதேபோல இங்கே, தோழர் பகுவின் ’அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்’ புத்தகத்தை வெளியிட்டுள்ளோம்.
ஒரு புத்தகத்தைக் கொண்டுவருவது சாதாரண விஷயம் அல்ல. தி.மு.க. இளைஞர் அணி சார்பாக நாங்கள் ஒரு பதிப்பகம் நடத்திவருகிறோம். நான்தான் அதற்குப் பதிப்பாளர். அந்த வகையில் ஒரு பதிப்பாளராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். தோழர் பகு, இந்தப் புத்தகத்திற்காக நிறைய உழைத்துள்ளார். திணை நில வாசிகளுக்கும் கழக இளைஞர் அணிக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
கழக இளைஞர் அணி நடத்தும் ஒவ்வொரு விழாவிலும் திணை நில வாசிகளின் பங்களிப்பு இருக்கும். அது சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பெரிய பெரிய மாநாடுகளாக இருந்தாலும் சரி, அதில் நடக்கும் முதல் நிகழ்ச்சியே திணை நில வாசிகளின் கலை நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். தோழர் பகு, ஒரு சிறந்த எழுத்தாளர், நாடக இயக்குநர், பயிற்சியாளர் மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) மக்களின் உரிமைக்கான குரலாக இருப்பவர். எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம், தமிழ்நாடு முழுக்கப் பயணம்செய்து, குழந்தைகள், பெரியவர்கள், மலைவாழ் மக்கள் என நிறைய பேருக்கு நாடகக்கலை சம்பந்தமான பயிற்சிகளைத் தொடர்ந்து சிறப்பாகக் கொடுத்து வருகிறார்.
அந்த அனுபவங்களை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தோழர் பகு அவர்கள் விரிவாகச் சொல்லியுள்ளார். இந்தப் புத்தகம், பல ஆயிரம் பிரதிகள் விற்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அய்யா நல்லகண்ணு அவர்களின் புகழ் ஓங்கட்டும்! உதவும் கைகள் அறக்கட்டளை, தோழர் பகு உள்ளிட்ட திணை நிலவாசிகள் அமைப்பைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.






