
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் தாக்கம் எப்போதுமே அதிகம்தான். அரசியல் கருவியாக திரைப்படங்கள் விளங்கியதும்; விளங்கி வருவதும் மறுக்க முடியாதவைதான்.
பிறப்பின் அடிப்படையிலான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, மதத்தின் பெயரிலான ஒடுக்குமுறை என நீண்டுகொண்டிருக்கும் சமூக சிக்கல்களை நாடறிய செய்ததில், திரைப்படங்கள் பெருமளவில் உதவியதும் உண்மைதான்.
ஆனால், அதற்காக திரை மோகத்தால் மக்களின் உரிமைப் போராட்டம் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியுமா? என்றால், உறுதியாக இல்லை.
தமிழ்நாட்டில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அதில் தோராயமாக 1.3 கோடி பேர் மாணவர்களாக இருக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 21 விழுக்காட்டினர், அதாவது 1.2 கோடி பேர், இளைஞர்கள். இந்த எண்ணிக்கை, காலப்போக்கில் கூடிக்கொண்டு செல்லுமே தவிர, குறைவது அரிதுதான்.
இப்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய பாதி பேர், மாணவர்களாகவும், இளைஞர்களாகவும் இருக்கும் வேளையில், அவர்களின் அரசியல் பார்வை என்பது, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாய் அமைந்துள்ளது.

ஆனால், அந்த இளைஞர் பட்டாளத்தை வழிநடத்துகிற கூட்டம் சரியாக இல்லை என்றால், இளைஞர்களின் வலு, சமூகத்திற்கு உதவாததாய் தூக்கி எறியப்படும்.
அப்படி, சமூகத்திற்கு தொடர்பில்லாத, சமூக சிந்தனையற்ற, சமூக நலன் சாராத ஒரு கூட்டத்திற்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால், அது மக்கள் சிக்கலை புறந்தள்ளி, திரை மோகத்தில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கும் என்பது இன்றைய தமிழ்நாட்டில் வெளிப்படையாக அறியப்பட்டு வருகிறது.
டெல்லியிலும், தமிழ்நாட்டிலும், மும்பையிலும் சாலையில் இறங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மக்களுக்கான கல்வி உரிமையை நிலைநிறுத்தும் வகையில், நீட் தேர்வு நீக்கம், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் காவல்துறையும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் அரசுகளின் காவல்துறையும் முட்டுக்கட்டையிட்டு வருகிறது.
“உரிமைக்கு குரலும் கொடுக்க மாட்டோம், உரிமைப் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கவும் மாட்டோம். எப்போதும் வாய் மூடிக் கிடப்போம்” என்பதுபோல மேம்போக்காக இருந்து வருகிறார் அமைதி நாயகர் விஜய்.

அவரின் காதில் விழும்வரை, கண்ணில் படும்வரை நாடுதோறும் மாணவர்களின் அறப் போராட்டம், புரட்சியாய் வெடித்து வரும் வேளையில்கூட, அதனைக் கண்டுகொள்ளாமல் இரவோடு இரவாக தன் திரைப்படத்தை, அரசு அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டு சென்று பார்த்து ரசிக்கிறார்.
காலையில் அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டு கண்ணீர் விடுகின்றனர். ஆனால், தலை உடைக்கப்பட்ட மாணவர்களைக் கண்டோ, அத்துமீறலுக்கு உள்ளான பெண்கள் பிள்ளைகளைக் கணோ, அந்த ஆட்சியாளர்களுக்கு ஆறுதல் எண்ணம்கூட வந்ததாக இல்லை.
இப்படி, ஒருபுறம், “உரிமைக்கு குரல் கொடுப்போம், மக்களோடு மக்களாக இருப்போம்” என ஆட்சியைப் பிடித்த த.வெ.க ஆட்சியாளர்கள், “ஜனநாயகனைக் காண்போம்; கண்ணீர் விடுவோம்!” என பிதற்றலில் சுற்றி வருகின்றனர்.
மறுபுறம், காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி கண்ணீர் விட்டு, களம் மாறாது மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இரண்டுமே இளைஞர் சமூகம் சார்ந்ததுதான். ஆனால், எது தற்போதைய தலையாய தேவை என்பதை புரிந்துகொண்டவர்கள் களப் போராட்டத்திலும், அறியாமையால் திரை மோகத்தில் திளைத்தவர்கள் திரையரங்குகளிலும் காணப்படுகின்றனர்.
“தன் பின்னால் கோடி பேர் இருக்கின்றனர்” என மார்தட்டிக்கொள்வதில் இல்லை பெருமை;
இளைஞர்களுக்கு தேவை அறிந்து செயல்பட அறிவுறுத்தி, இளைஞர் வலுவை முன்னேற்றத்திற்கும், அதிகார அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுப்பதற்கும் பயன்படுத்துவதில்தான் பெருமை உள்ளது.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
மனம் என்பது பல வழிகளில் செல்ல நம்மைத் தூண்டும். ஆனால், அதில் தேவையற்றதை அகற்றி, தேவையானதை அடையாளம் கண்டு, அதன் வழி செயல்படுவதுதான் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.
இளைஞர் சமுதாயத்தின் கல்வி உரிமையைக் காக்கும் காலத்தில், காக்கா பிடித்து கொண்டிராமல், களம் கண்டு உரிமையைப் பேணுவோம். அதிகார அத்துமீறலுக்கு இடம் இல்லாத சமூகத்தை நிறுவுவோம்.






