அரசியல்

“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!

“ரீல்ஸ் முதலமைச்சரே இந்த அராஜக நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். இந்த அடக்குமுறைகளுக்கு அவர்கள் அஞ்சி விட மாட்டார்கள். இதற்கெல்லாம் அஞ்சி ஒளிந்துவிட மாட்டார்கள், கரூரில் காணாமல் போன உங்களைப் போல...”

“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டளவில் GEN Z DMK கூட்டங்களை ஒருங்கிணைப்பவர்களில் ஒருவரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பானந்தம் எனும் கழக இளைஞரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருப்பதற்கு, தி.மு.க இளைஞர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இளைஞர் அணி சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு,

“பொய்ச்செய்திகள், போலிச்செய்திகள், அவதூறுகள், கட்டுக்கதைகள், வன்மங்கள், வசைகள் என தமிழ்நாட்டு அரசியலில் இதற்கு முன் யாரும் செய்திராத அருவருப்புப் பிரச்சாரத்தை செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள், நாற்பதே நாட்களில் தங்கள் நாடகம் அம்பலமாகி, இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக GEN Z தலைமுறை மத்தியில் குட்டு உடைந்து தாங்கள் அம்பலமாகிறோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் பதற்றத்தில் தடுமாறுகின்றனர்.

அந்த தடுமாற்றங்களுக்கு காரணம் GEN Z DMK. சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, நெல்லை, நாமக்கல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சேலம், பெரம்பலூர் என தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு GEN Z DMK கூட்டங்களை நடத்தி, தங்களின் அரசியல் புரிதலை, கொள்கைத்தெளிவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

நாற்பது நாள் ஆட்சியின் அவலங்களைத் தோலுரித்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மீது இன்றைய ஆட்சியாளர்கள் ஒட்டிய ஸ்டிக்கர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!

ஒவ்வொரு நாளும் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலை- கொள்ளைகள் என தறிகெட்டுத் தவிக்கும் சட்டம் - ஒழுங்கு நிலைமையும், விவசாயிகள் போராட்டம், மின்வெட்டுப் பிரச்சனை என நிர்வாகத் திறனில்லாமல் விழி பிதுங்கி நிற்கும் அரசு நிர்வாகத்தின் அவலங்களையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

‘விசிலடிக்கத் தெரிந்தால் போதும், பேனருக்கு பால் அபிஷேகம் செய்யத் தெரிந்தால் போதும் என்று பழக்கப்படுத்தி வைத்திருந்தோமே, அந்த GEN Z தலைமுறையில் இருந்தே அறிவார்ந்த இளைஞர்கள் வெளி வந்துவிட்டார்களே? நமக்கு எதிராகத் திரும்பிவிட்டார்களே’ என்று பதறிப்போய் இருக்கிறது தவெக ஆட்சி.

அதன்காரணமாகத்தான் GEN Z DMK கூட்டங்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அன்பானந்தம் என்னும் கழக இளைஞரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய முயற்சித்திருக்கிறது ஆளுங்கட்சியின் காவல்துறை.

ஏற்கெனவே GEN Z DMK கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கனிஷ்கர் என்ற இளைஞரை, த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் வைத்து கடுமையாகத் தாக்கினர். அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கூட தரப்படவில்லை, தாக்கிய ரவுடிகளும் இந்த நொடி வரை கைது செய்யப்படவில்லை.

கொளத்தூர் தொகுதியில் நடைபெறவிருந்த GEN Z DMK முதல் கூட்டத்தையும் நடத்த விடாமல், காவல்துறையை ஏவி முடக்க முயன்று, கடைசியில் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது அக்கூட்டம். அந்த எழுச்சியின் உந்துதல்தான் தமிழ்நாடு முழுவதும் GEN Z DMK கூட்டங்கள் காட்டுத்தீ போல பரவக் காரணமாக இருந்தது.

அவதூறுகளால் ஆட்சியமைத்தவர்களுக்கு அவர்களின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது என்கிற பதற்றம்தான் இத்தகைய கைது முயற்சிகளும், காட்டுமிராண்டித் தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் என்பது தெள்ளத்தெளிவாகக் காட்டிக்கொடுக்கிறது.

ரீல்ஸ் முதலமைச்சரே இந்த அராஜக நடவடிக்கைகளை விட்டு விடுங்கள். இந்த அடக்குமுறைகளுக்கு அவர்கள் அஞ்சி விட மாட்டார்கள். இதற்கெல்லாம் அஞ்சி ஒளிந்துவிட மாட்டார்கள், கரூரில் காணாமல் போன உங்களைப் போல...”

banner

Related Stories

Related Stories