அரசியல்

“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!

சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி விசாரிக்க CPI, CPI(M) வலியுறுத்தல்.

“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் குறித்து CPI, CPI(M) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள, CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சேலம் மாநகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்பெண்களை பாலியல் வணிகத்தில் உள்ளாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் மணிகண்டன் பெண்களை மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளியுள்ளதால் இதன் பின்புலமாக மேலும் பலர் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, அவர்கள் குறித்த தகவல்களை கசியவிடாமல் பாதுகாக்கவும், இன்னும் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!

குற்றம் சாட்டப்பட்ட நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அது உண்மையாக இருப்பின் அவரை கட்சியிலிருந்து நீக்குவதுடன் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி விசாரணை நேர்மையாக நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய செய்தி நெஞ்சத்தை பதற வைக்கிறது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன் நேற்று முன்தினம் (ஜூன் 12) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விபரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருவது பெரும் வேதனையளிக்கிறது.

புதிய ஆட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்புப் படை” அமைத்துள்ளது. இதன் பணியை முழுவீச்சில் விரிவு படுத்த வேண்டும்.

சேலம் பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்களில் மணிகண்டன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என விசாரணை எல்லையை சுருக்கி விடாமல், அவருக்கு பின்பலமாக இருந்து செயல்பட்ட நபர்கள் யார், யார் என்பது உட்பட குற்றச் செயலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகும்.

நீண்ட காலமாக வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், அது காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சிபி சிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories