
பொதுவாகவே திமுக அரசு குறித்து அவதூறு பரப்புவதில் பாஜக - அதிமுக இடையே போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் இதில் விஜயின் தவெக-வும் இணைந்துள்ளது. எனினும் திமுகவினர் கருத்தை கருத்தியல் ரீதியாகவே எதிர்த்து வருகின்றனர். இருப்பினும் பிற கட்சிகள் திமுகவினரின் சொந்த குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விதமாகவே பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும் திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் அதனை புறந்தள்ளி தங்கள் கொள்கைகளில் முன்னேறி செல்கின்றனர். இந்த சூழலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் அளித்த பேட்டியில், "நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும்" எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. விஜயை விமர்சிக்கும் விதமாக நடிகை திரிஷாவையும் சேர்த்து கொச்சைப்படுத்தி விமர்சித்திருந்தார் நயினார்.

பொதுவெளியில் அதுவும் ஒரு தேசிய கட்சியை சேர்ந்த மாநிலத் தலைவர் பெண்ணை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்தது. குறிப்பாக திமுக எம்.பி.-க்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு உள்ளிட்டோர் தங்கள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
=> திமுக கனிமொழி எம்.பி. :
ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
=> திமுக தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. :
இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்.
=> கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. :
அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் விமர்சனம் செய்வது அநாகரிகம். அதிலும், அரசியலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் இழித்துப் பேசுவது பெண்மையை களங்கப்படுத்தும் செயல் திரு.நயினார் நாகேந்திரனை பாஜகவில் உள்ள பெண் தலைவர்களே கண்டிக்காமல் மவுனம் காப்பது அநீதி!

இப்படி பொதுவெளியில் ஒரு பெண்ணை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், "இது ஒரு பேசிய விஷயமே இல்லை.." என்று தெனாவட்டாக பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் பேசியிருந்தார். பெண்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசிய ஒரு தலைவரை அக்கட்சியின் பெண் தலைவரே கண்டிக்காமல் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியது மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தன்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து திரிஷா வெளியிட்ட பதிவு வருமாறு :
"மாநில அரசியலில் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, எதிர்காலத்தில் அப்படி இணையும் எண்ணமும் அவருக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடந்த காலங்களைப் போலவே அரசியலில் எப்போதும் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறேன்.
எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது என்பது பொதுவான நியதி. உயர் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் எனது பெயரை இழுக்க வேண்டாம்" என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷாவின் இந்த பதிவுக்கு ஆதரவும், நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பும் எழுந்து வருகிறது.






