அரசியல்

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

“தி.மு.க. என்ற ஆலமரத்தின் வேர்கள் நீங்கள்! அறிவாலயத்தின் அஸ்திவாரமே நீங்கள்தான்! வெல்லப் போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்!” என முதலமைச்சர் உரை.

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11-02-2026) திருவிடந்தையில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – சென்னை, விழுப்புரம் மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம்:

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் வெற்றியை களத்தில் நின்று ஈட்டி வர இருக்கும் ஈட்டி முனைகளே! உங்கள் அனைவரின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பார்த்து, எனக்கும் ‘எனர்ஜி பூஸ்ட்’ கிடைத்த மாதிரி இருக்கிறது.

சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல BLA-2, BLC, BDA வாக்குச்சாவடிக் குழுவினருக்கான, 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு, உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!

சென்னை மண்டலம் - விழுப்புரம் மண்டலங்கள் என்ற இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த பாக முகவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் ZONE-இல் 49 தொகுதிகள் அடங்கி இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு நீங்கள்!

பாக முகவர்கள் பயிற்சி நிகழ்ச்சியையே மாநாட்டைப் போன்று ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய மாவட்டக் கழகத்தின் செயலாளர் அருமைச் சகோதரர் செயல்வீரர் அன்பரசன் அவர்களை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

சகோதரர் அன்பரசன் அவர்களைப் பொறுத்தவரையில், கழகத்தில் கொடுக்கப்படும் பொறுப்பாக இருந்தாலும் சரி, ஆட்சி நிர்வாகத்தில் கொடுக்கப்படும் பொறுப்பாக இருந்தாலும் சரி, அதில் தன்னை நிரூபிக்கும் வகையில், சிறப்பாகச் செயல்படக் கூடியவர்! அதேபோன்றுதான் இந்த மாநாட்டையும் சிறப்பாக நடத்தி தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்!

அதேபோன்று, இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த சென்னை மண்டலப் பொறுப்பாளர் - கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் - தலைவர் கலைஞர் அவர்களால் ‘தகத்தகாய சூரியன்’ என்று போற்றப்பட்ட ஆ.இராசா அவர்களுக்கும் – ‘வேங்கையின் மைந்தன்’ என்று அழைக்கப்படும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!

அதேபோன்று, இந்த இரண்டு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டக் கழகத்தின் செயலாளர்களுக்கும், தோளோடு தோள் நின்று பணியாற்றி இருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

* சென்னையில் மொத்தம் 21 தொகுதிகள்,

* திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தொகுதிகள்,

* காஞ்சிபுரத்தில் 10 தொகுதிகள்,

*  கடலூர் கிழக்கில் 5 தொகுதிகள்,

* விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகள் என்று, மொத்தம் 49 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியிருக்கிறோம்!

சென்னையும் - வட தமிழ்நாடும் எப்போதுமே தி.மு.க.வின் கோட்டை என்று மீண்டும் நான் நிரூபித்துக் காட்ட வேண்டும்! எப்போதும் போன்று, உங்களிடம் இருந்துதான் நம்முடைய வெற்றியே தொடங்கப் போகிறது! அதனால்தான், இந்தக் கூட்டத்தையும் இந்த மண்டலத்தில் இருந்து நான் தொடங்குகிறேன்!

தேர்தல் பணி என்று வந்துவிட்டால், கழக உடன்பிறப்புகளை அடித்துக் கொள்ள ஆளே இல்லை! இதை நான் மட்டுமல்ல, கழகத்தின் எதிரிகளே பல நேரங்களில் – பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்! அதே வேகம், அதே ஆற்றல், அதே சுறுசுறுப்பு, அதே கவனத்துடன், இந்த முறையும் உழைக்க நீங்கள் தயாரா?

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பூத்திலும் 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம், ஒவ்வொரு பூத்திலும் சராசரியாக 10 வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களை நாம் நியமித்திருக்கிறோம்! மைக்ரோ மேனேஜ்மெண்ட்-ஆக இருந்தாலும் சரி, மேக்ரோ மேனேஜ்மெண்ட்-ஆக இருந்தாலும் சரி, தேர்தல் களத்தில் தி.மு.க.தான் ஹீரோ!

இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது! தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்களின் எண்ணிக்கை 75 ஆயிரம்! ஒவ்வொரு பூத்திற்கும் நாம் செட் பண்ணியிருக்கும் ‘மினிமம் டார்கெட்’ எவ்வளவு தெரியுமா? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை நாம் அச்சீவ் செய்தாலே, 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிடலாம்.

நான் முன்பே சொல்லியிருந்தேன். இந்தத் தேர்தலில் நாம் கட்டாயம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் வாங்கியாக வேண்டும் என்று சொல்லிருந்தேன். இதை சாத்தியப்படுத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு! இதை எப்படி செய்வது? ரொம்ப சிம்ப்பிள்! நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 40-50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! இதை சக்சஸ்-ஃபுல்லாக செய்தாலே, வெற்றி உறுதி!

ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலமாக, 1 கோடியே 14  லட்சம் குடும்பங்கள் நம் கழகத்துடன் இணைந்திருக்கிறார்கள். இதில், ஒரு வாக்குகூட மிஸ் ஆகாமல், உதயசூரியனுக்கும் - நம்முடைய கூட்டணிக் கட்சி சின்னங்களுக்கும் விழ வேண்டும்!

ஓரணியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், எஸ்.ஐ.ஆர். பட்டியல் திருத்தம் மூலமாகவும் ஏற்கனவே 2, 3 முறை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டையும் நாம் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறோம்.

அடுத்ததாக, 'ஸ்டாலின் மகளிர் படை'யில் இருக்கும் மகளிரணியினர் வீடு வீடாகப் பிரசாரத்தைத் தொடங்கப் போகிறார்கள்.

ஏன் இதையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நம்முடைய பிரசாரமே அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு வாக்கையும் கவனத்தில் வைத்துதான் உருவாக்கியிருக்கிறோம்.

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

மற்ற அனைவரையும் விட, முக்கியமாக நீங்கள்தான் இதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நானோ – அமைச்சர்களோ – மாவட்ட – மண்டல - தொகுதிப் பொறுப்பாளர்களோ – சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களோ என்னதான் உழைத்தாலும் - உத்திகளை வகுத்தாலும், களத்தில் அதை வெற்றியாக உறுதி செய்யப் போவது நீங்கள்தான்! ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்ற உழைக்க இருக்கும் நீங்கள்தான் முன்கள வீரர்கள்! உங்கள் உழைப்பில்தான் நாம் ஏழாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறோம்!

எத்தனை டெக்னாலஜி வந்தாலும், எத்தனை புதிய ஊடகங்கள் வந்தாலும், ரிமோட்டில் எத்தனை பேர் நமக்காக வேலை செய்தாலும், தேர்தல் பிரசாரத்தின் பேசிக்ஸ்-தான் மிக முக்கியம்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களைத் தேர்தலுக்குள், குறைந்தபட்சம் 5 முறையாவது சந்தித்தாக வேண்டும்.

நான் ஏற்கனவே விருதுநகர் கூட்டத்தில் சொன்ன ஒரு விஷயத்தை, இந்தக் கூட்டத்திலும் திரும்ப அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். பரம்பரை பரம்பரையாகத் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! தேர்தல் என்று வந்துவிட்டால், மக்கள்தான் எஜமானர்கள்! அதனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் - திட்டங்களையும், அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வருவதையும், ஒவ்வொருவரிடமும் விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் pro-incumbency-தான் நிலவுகிறது! ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது! இதை அப்படியே நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி, வெற்றியை அறுவடை செய்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் கூடி இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளைச் சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தால், தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-லும் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்! அதற்கு, ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன் உங்கள் பணி முடியப் போவதில்லை. அத்தோடு, நம்முடைய கடமையும் முடியப்போவதில்லை. உங்களுக்கு என்று ‘அசைன்’ செய்திருக்கும் 100 வாக்காளர்களை நீங்கள் தொடர்ந்து அணுக வேண்டும். தேர்தல் அன்றைக்கு அவர்கள் அனைவரும் பூத்திற்கு வந்து நமக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்! அதுமட்டுமல்ல, வாக்குப்பதிவு முடிந்து, மெஷினில் சீல் வைத்து, எடுத்துக் கொண்டுச் செல்லும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!

தி.மு.க. என்ற ஆலமரத்தின் வேர்கள் நீங்கள்! அறிவாலயத்தின் அஸ்திவாரமே நீங்கள்தான்! உங்களை நம்பித்தான் மொத்தக் கழகமும் இருக்கிறது. என்னுடைய மொத்த நம்பிக்கையும் நீங்கள்தான்.

வீடு வீடாகச் சென்று இயல்பாக – சகஜமாக - உரிமையோடு பிரசாரம் செய்யுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொன்னீர்கள் என்றால், அவர்களே உணர்ந்து நம்மை வரவேற்பார்கள்! நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து பேசுவது போன்று, ஃப்ரண்ட்லியாகப் பேசுங்கள். கலகலப்பாகப் பேசுங்கள். நம்முடைய கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று அவர்கள் மனதில் பதிய வையுங்கள். குறிப்பாக இளைஞர்களிடம், அவர்களுக்காக நாம் செய்து கொண்டு வரும் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள். அவர்களின் வேலைவாய்ப்புக்காக நாம் கொண்டு வரும் தொழிற்சாலைகள் பற்றிப் பொறுமையாகச் சொல்லுங்கள்.

இதற்காக உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை, உங்களுக்கு வழங்கியிருக்கிறோம். அதில், நம்முடைய ஐந்தாண்டு சாதனைகளை விளக்கிச் சட்டப்பேரவையில் நான் பேசிய உரை இருக்கிறது. நீங்கள் எதைப் படிக்கிறீர்களோ - இல்லையோ, ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்தக் குட்டிப் புத்தகத்தைக் கட்டாயம் படித்துவிடுங்கள். இது என்னுடைய வேண்டுகோள் அல்ல; கழகத் தலைவராக உங்களுக்கு நான் இடும் உத்தரவு!

பிரசாரத்திற்குச் செல்லும்போதும் கையோடு இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுச் செல்லுங்கள். மக்களிடம் எடுத்துச் சொல்லும் முன், நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று முதலில் நமக்குத் தெரிய வேண்டும்!

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

கடந்த 5 ஆண்டு காலத்தில், சென்னைக்கு எவ்வளவோ செய்திருக்கிறோம்!

கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை,

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்,

திரு. வி.க. நகர், பெரியார் நகர், மகாகவி பாரதியார் நகர் எனப் பல பேருந்து நிலையங்கள்,

கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா,

போரூர் எம்.எஸ். சுவாமிநாதன் ஈர நிலப் பூங்கா உள்ளிட்ட ஏராளமான பூங்காக்கள்,

விரைந்து தொடங்க இருக்கும் பூந்தமல்லி - போரூர் - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்,

6 ஆயிரம் கோடி ரூபாயில் வட சென்னை வளர்ச்சித் திட்டம்,

முதல்வர் படைப்பகங்கள்,

பல்வேறு ஏரிகள் சீரமைப்பு,

வள்ளுவர் கோட்டம், விக்டோரியா ஹால் புதுப்பிப்பு,

ஜெ. அன்பழகன் மேம்பாலம்,

இதுபோக, சைதாப்பேட்டை தொடங்கி தேனாம்பேட்டை வரை மிகப்பெரிய பாலம் உருவாகி வருகிறது,

கிண்டி - வேளச்சேரி மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம்,

மத்திய கைலாஷ் மேம்பாலம் விரைவில், ஏன் வருகிற 15-ஆம் தேதி திறக்கப் போகிறோம்,

கிண்டியில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறோம்,

மேலும், பிராட்வே பல்முனை போக்குவரத்து மையம்,

27 மாடி சென்ட்ரல் டவர் கட்டடம்,

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்,

கிண்டி சுற்றுச்சூழல் பூங்கா,

கலைஞர் கன்வென்ஷன் செண்டர்,

உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் என்று, அடுத்தடுத்த திட்டங்களும் பிராக்ரஸ்-இல் இருக்கிறது.

இவ்வாறு, ஒவ்வொருவரும் தங்கள் மாவட்டத்திற்கு – தொகுதிக்கு - நகரத்திற்கு நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கும் திட்டங்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும்.

தொழில்துறையை எடுத்துக் கொண்டால், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 35 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம். நாளைக்குக் கூட, இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு, நூற்றுக்கணக்கான நிறுவனங்களைத் திறந்து வைத்து, பல நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டி, முதல்முறையாகச் செயலாக்க மாநாடு நடத்தப் போகிறோம்!

அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டு காலம் படுபாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை, 11.19 பர்செண்ட் இரட்டை இலக்க வளர்ச்சியாக உயர்த்தி இருக்கிறோம்! இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று கல்வியில் மாபெரும் புரட்சியைச் செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு மிக நெருக்கமான திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம் என்று, பல திட்டங்களைச் சொல்லலாம்!

மேலும், பெண்களுக்கான பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம்.

சிறுபான்மையின மக்களுக்குத் தொடர்ந்து நலத்திட்டங்கள் அறிவிக்கிறோம்.

விவசாயிகளின் நன்மைக்காக, 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தந்திருக்கிறோம்.

நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்தி 500 ரூபாய் நிர்ணயம் செய்திருக்கிறோம்.

எண்ணற்ற தடுப்பணைகள்.

வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் என்று, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

நாம் கவர் செய்யாத தரப்பே கிடையாது! நாம் சாதனை செய்யாத செக்டாரே கிடையாது. அனைத்தையும் சொல்வதற்கு நேரம் இல்லாவிட்டாலும், நீங்கள் யாரைப் பாக்கிறீர்களோ, அவர்கள் தொடர்பான திட்டங்களை – சாதனைகளை, டக்கு டக்கு என்று சொல்வது போன்று விரல் நுனியில் அனைத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும்!

இந்த 5 ஆண்டு காலத்தில் நாம் நிறைவேற்றி இருக்கும் திட்டங்கள்தான், அடுத்த 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை வழி நடத்தப்போகும் 'Blue Print'. மறந்துவிடாதீர்கள். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் செய்து காட்டும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மீதமுள்ள கோரிக்கைகள், வாக்குறுதிகளையும் அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசில் நாம்தான் செய்து தரப்போகிறோம் என்று சொல்லுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு இணையாக உயரும் நிலை வரும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துங்கள்!

“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

நாம் ஆட்சிக்கு வர வேண்டியது எவ்வளவு முக்கியம் என்று, இவ்வளவு நேரம் சொன்னேன்! நம்முடைய திட்டங்களைச் சொன்னேன்! அதேபோன்று, ஆட்சிக்கு யார் வரக் கூடாது என்பதையும் மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலில் தி.மு.க.வைத் தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வநிச்சயமாக டெல்லி பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிய வையுங்கள்!

நம்முடைய கூட்டணியைத் தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும், இதுவரை நாம் செய்து கொண்டு வரும் நலத்திட்டங்கள் நின்றுவிடும்! தமிழ்நாட்டின் தொகுதி அளவையே குறைத்துவிடுவார்கள். இதுவரை நாம் சாதித்துக் காட்டியிருக்கும் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல்தான் தமிழ்நாட்டில் நடக்கும்!

நடக்க இருக்கும் தேர்தல், 2 கூட்டணிகளுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல! இது, தமிழ்நாடு வெர்சஸ் NDA! பாமர மக்களுக்கும் புரிவது மாதிரி இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வெல்லப் போவது, தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப் போவதுதான் இந்தத் தேர்தல்! அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க.வை ஆதரித்தாக வேண்டிய செயல் தேவையை விளக்க வேண்டும். 

ஒன்றிய பா.ஜ.க. அரசு - திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட், பேரிடர் நிவாரணம், கல்வி நிதி என்று தொடர்ந்து தமிழ்நாட்டிற்குச் செய்யும் வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்வி எழுப்பாத அடிமை அ.தி.மு.க.வின் துரோகத்தையும் மக்கள் முன் தோலுரிக்க வேண்டும்.

வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று துடிக்கும் விஷ விதைகளைத் தமிழ்நாட்டிற்குள் விடவே கூடாது!

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! பா.ஜ.க.வின் டப்பா எஞ்சின் முன், தமிழ்நாட்டின் திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது! இந்த உறுதியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்ல வேண்டியது உங்களின் வேலை! களப்பணி மட்டும்தான், இனி உங்களின் முழுப் பணி. உங்களின் ஒவ்வொரு நிமிட உழைப்பும், ஒரு வாக்கு!

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதி யாருக்கு, வேட்பாளர் யார், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். அதை என்னிடம் விட்டுவிடுங்கள். எங்கு - யார் நின்றாலும் 234 தொகுதிகளிலும் தலைவர்தான் – இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள்!

ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடைய முடியாது. அதனால், தோழமைக் கட்சிகளுடன் ஒற்றுமை உணர்வுடன் நாம் பணியாற்ற வேண்டும். இதைச் செய்தாலே, 2024 போன்று முழு வெற்றி நம்முடைய வசமாகிவிடும்!

இங்கும் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்... நாம் தேர்தல் வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டோம்... என்னை தினமும் நீங்கள் செய்திகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்... தினமும் எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை கூட்டங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை ஆய்வுகள் - ஓய்வே இல்லாமல் நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த இயக்கத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொள்ளும்போது, “என் சக்தியையும் மீறி நான் உழைப்பேன்” என்று சொன்னேன்.

சொன்னபடியே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்! நான் மட்டுமா உழைக்கிறேன்... இங்கு மேடையில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களானாலும் சரி, நிர்வாகிகளானாலும் சரி, பூத் அளவில் இருக்கும் நீங்களும் சரி, ஓய்வில்லாமல்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்! இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் இவ்வாறு வேலை செய்யாது. இவ்வாறு நாம் உழைக்கும் காரணத்தினால்தான், தமிழ்நாடும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது! திராவிட முன்னேற்றக் கழகமும் நம்பர் ஒன்-ஆக இருக்கிறது!

தொடர்ந்து வெல்ல, உழைப்போம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக!

banner

Related Stories

Related Stories