அரசியல்

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !

இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு இன்றைக்கும் என்றைக்கும் தி.மு.க. ஆபத்தான கட்சிதான்!

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், தாய் மொழிக்காக தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம், திருவொற்றியூர், பெரியார் நகரில் நடைபெற்றது. இதில் கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு எழுச்சிமிக்க உரையாற்றினார்.

அப்போது அவர் மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு இன்றைக்கும் என்றைக்கும் தி.மு.க.தான் ஆபத்தான கட்சி. நம் தமிழ்ப் பண்பாட்டை, ஒற்றுமையை, நல்லிணக்கத்தை அழிக்க நினைக்கின்ற பா.ஜ.க-வுக்கு என்றைக்குமே தி.மு.க ஆபத்தான ஒரு கட்சிதான். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று குறிப்பிட்டார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிக்க உரையின் விவரம் வருமாறு:

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களையெல்லாம் சந்தித்து உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 

இன்று காலை கழகத் தலைவர் அவர்களும், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அணிகளின் அனைத்து  நிர்வாகிகளும் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து மற்றும் நடராசனின் நினைவிடங்களில் காலையில் வீரவணக்கத்தை செலுத்துவிட்டு, இப்போது திருவொற்றியூரில் நடக்கின்ற இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன்.  

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !

மொழி காக்க, உயிர் தியாகம் :

இன்று திருவொற்றியூரில் மட்டுமல்ல, தி.மு.கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய கழகத் தலைவர், முதலமைச்சர்  அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் எழுச்சி உரையாற்றுகிறார்கள். உலக வரலாற்றிலேயே தாய்மொழியைக் காக்க நூற்றுக்கணக்கானவர்கள் உயிரைத் தியாகம் செய்த வரலாறு, தமிழ்நாட்டு மக்களுக்கும், நம் தமிழ் மண்ணுக்கும் மட்டும்தான் உண்டு. அந்தத் தியாகிகளையும், அவர்கள் செய்த தியாகத்தையும் போற்றும் வகையில்,  அவர்களின் தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க, இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை ஆண்டுதோறும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்களில், இளைஞர் அணிக்குக் கூடுதல் பெருமை கிடைத்துள்ளது.  சென்ற 2024-ஆம் ஆண்டு கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் பேச்சுப்போட்டி நடத்தி, கழக இளைஞர் அணி சார்பில், 200-க்கும் அதிகமான இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்து தலைமையிடம் ஒப்படைத்தோம். அந்த இளம் பேச்சாளர்களும் இன்று மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பேசுகிறார்கள். இங்குக்கூட தம்பி டெக்சின் ரெமோரியா மிகச் சிறப்பாகப் பேசினார். இந்தத் தம்பி, தங்கைகள் நம்மால் அடையாளம் காணப்பட்டு மெருகேற்றப்பட்டவர்கள். 

இன்று அவர்களுடன் சேர்ந்து நானும் இந்த மேடையை பகிர்ந்து கொள்கிறேன்.  மொழிப்போர் பற்றி சிறப்பாக பேசுகிறார்கள். ஆகவே, அந்தப் பெருமையோடுதான் இக்கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தலைவர் அவர்களுக்கும், சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ள மாவட்டச் செயலாளர் அண்ணன் சுதர்சனம் அவர்களுக்கும், மாணவர் அணிக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமான காலகட்டம்

இன்று இந்தக் கூட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் காலங்களில் இந்தி திணிப்பு வந்தது.  அப்போது, நம் தலைவர்கள் எல்லாம் போராட்டக் களத்தில் நின்றார்கள்.  கலைஞரின் வயது அன்று 14.  அந்த வயதில் சிறுவனாகக் கையில் தமிழ்க்கொடி ஏந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்திக்கு எதிரான போராட்டக் களத்திற்கு வந்தார். இன்று தலைவர் அவர்களின் தலைமையில், நாம் மீண்டும் இந்திக்கு எதிரான களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

அன்று நாம் இந்தித் திணிப்பு வேண்டாமென்று சொன்னபோது, வட நாட்டிலிருந்து நம்மை சிலர் விமர்சித்தார்கள். நம்மை இந்திக்கு எதிரான இயக்கம் என்று கூறினார்கள். ஆனால், இன்றைய நிலை என்னவென்றால், இந்தி பேசாத மாநிலங்கள் எல்லாம் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில், நம் முதலமைச்சர் அவர்களைப் பாராட்டுகிறார்கள்.  கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் எனப் பல மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பின்பற்றி, நம் முதலமைச்சரை பாராட்டுகிறார்கள்.  

உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை இங்கு சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.  சமீபத்தில் காஷ்மீரில் ஒரு சம்பவம் நடந்தது. காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.  அவரின் தாய்மொழி காஷ்மீரி.  பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர் காஷ்மீரியில் பதில் சொல்கிறார்கள்.  அங்குள்ள ஒரு பத்திரிகையாளர் அம்மையாரைப் பார்த்து, ஏன் தாய்மொழியில் பேசுகிறீர்கள், ஹிந்தியில் பேச மாட்டீர்களா?’ என்று கேட்கிறார்.  உடனே அவர், நான் என்னுடைய தாய்மொழியான காஷ்மீரி மொழியில்தான் பேசுவேன்.  என்னை இவ்வளவு தைரியமாக கேள்வி கேட்கிறீர்களே, நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.  உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு சென்று, முதலமைச்சராக இருக்கின்ற என் சகோதரர் தி.மு.க-வின் தலைவரைப் இப்படி உங்களால் கேள்வி கேட்க முடியுமா?" எனக் கூறினார். 

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !

இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டு :

மொழி உரிமை என்று வரும்போது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான எடுத்துக்காட்டாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது.  அதனால்தான் ஒன்றிய பாசிச பா.ஜ.க-வினருக்கு நம்மைக் கண்டாலே கோபம் வருகிறது. மும்மொழிக் கொள்கை என்று கூறி, இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார்கள். மற்ற மாநிலங்கள் எல்லாம் அதனை ஏற்றுக்கொண்டன. ஆனால், நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் அதை ஆராய்ந்து பார்த்தார். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, மீண்டும் தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள்; குறுக்கு வழியில் சமஸ்கிருதத்தை நுழைக்கப் பார்க்கிறார்கள்; குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வரப் பார்க்கிறார்கள் என்று கூறி, அதனை மறுத்தார்.

ஒன்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டன, ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது? தமிழ்நாடு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய வரிப் பகிர்வுத் தொகையான 2,500 கோடியைத் தர முடியாது’’ என்று கூறினார்.

உறுதியாகச் சொன்னார் :

அதற்கு நம்முடைய முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? புதிய கல்விக் கொள்கையின் மூலம் நீ இந்தியைத் திணிக்கிறாய், குலக்கல்வித் திட்டத்தையும் சமஸ்கிருதத்தையும் நுழைக்கப் பார்க்கிறாய். 2,500 கோடி அல்ல, நீ 10,000 கோடி கொடுத்தாலும் என் தமிழ் மக்கள் மீது புதிய கல்விக் கொள்கையைத் திணிக்க விடமாட்டேன், ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று உறுதியாகச் சொன்ன ஒரே முதலமைச்சர் நம் தலைவர். இன்று மற்ற மாநில முதலமைச்சர்கள், ஒன்றிய அரசு ஒரு முடிவை எடுத்தால், அதற்குத் தமிழ்நாடு என்ன எதிர்வினை ஆற்றுகிறது, தமிழ்நாட்டு மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

இதையே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், நம்முடைய தலைவர் முதலமைச்சராக இல்லாமல், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

2,500 கோடியா ஜி? மிக்க நன்றி ஜி. நீங்கள் இங்கே வர வேண்டாம், நானே டெல்லிக்கு வருகிறேன். முகத்தை மூடிக்கொண்டு, நான்கு கார் மாறி வருகிறேன். நீங்கள் எங்கே சொன்னாலும் கையெழுத்திடுகிறேன், குட்டிக்கரணம் கூடப் போடுகிறேன்’’ என்று சொல்லியிருப்பார் அல்லவா? நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்று அடிபணிந்திருப்பார்கள்.

தீ பரவட்டும்’ :

இன்று பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவரின் தாய்மொழி காணாமல் போய்விட்டது. உதாரணமாக, ஹரியானாவில் ஹரியான்வி, பீகாரில் பீஹாரி, சத்தீஸ்கரில் சத்தீஸ்கரி, உத்தரப் பிரதேசத்தில் போஜ்புரி போன்ற மொழிகள் இந்தி ஆதிக்கத்தினால் அழிந்து வருகின்றன. இப்படிப் பல தாய்மொழிகளையே விழுங்கிய மொழிதான் இந்தி. அதனால்தான் நம் முதலமைச்சர், கலைஞர் வழியில் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று உறுதியாக இருக்கிறார்.

ஏனென்றால், இது தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு; பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வளர்த்தெடுத்த நெருப்பு. நம் தலைவர் இன்று வரை காத்து வரும் அந்த நெருப்பு, கடைசித் தமிழன் இருக்கும் வரை பரவிக்கொண்டுதான் இருக்கும். அதனால்தான் “தீ பரவட்டும்’ என்று சொன்னால், ஒரு கூட்டத்துக்கு பயம் வருகிறது.

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !

ஒருபோதும் நம்ப மாட்டார்கள் :

தேர்தல் நெருங்கிவிட்டது, இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் வரவுள்ளது. இனி, பா.ஜ.க. தலைவர்கள் வரிசையாக தமிழ்நாட்டுக்கு வர ஆரம்பிப்பார்கள். தேர்தல் நேரத்தில்தான் அவர்களுக்குத் தமிழ்நாட்டுக்கு வழி தெரியும், பாசம் பொங்கும். திருக்குறள் பேசுவார்கள், பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். ஆனால், அவை “வெறும் நாடகம்’ என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்; அவர்களை ஏமாற்ற முடியாது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசும்போது, ஒடிசா கோயில் சாவியை ஒரு தமிழர் திருடிக்கொண்டு போய்விட்டார்’ என்று கூறி தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்தினார். பீகார் தேர்தலில் அமித்ஷா பேசும்போது, தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களைத் தமிழ் மக்கள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள்’ என்று அவதூறு பரப்பினார். எனவே, நீங்கள் திருவள்ளுவரிடம் தமிழ் கற்றுக்கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் இந்த பாசிசக் கூட்டத்தை ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

உண்மையிலேயே ஒன்றிய அரசுக்குத் தமிழ் மொழி மீது அக்கறை இருந்தால், மொழி வளர்ச்சிக்கான நிதியைச் சரியாக ஒதுக்கியிருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், எட்டு கோடி பேர் பேசும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 150 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், யாருமே பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2,500 கோடி ரூபாய்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய எந்த நிதியையும் அவர்கள் முறையாக ஒதுக்குவதில்லை. குடிநீர் திட்டங்களுக்கான 3,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 10,000 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் புயல், மழை நிவாரணத்திற்காக 45,000 கோடி ரூபாய் கேட்டோம்; ஆனால் கிடைத்தது வெறும் 2,000 கோடி மட்டுமே. ஒன்றிய பட்ஜெட்டில் “தமிழ்நாடு’ என்ற பெயரே இடம்பெறுவதில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள், இன்று வரை ஒரு செங்கல் கூட நகரவில்லை. இப்படித் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேலையைத்தான் பா.ஜ.க அரசு செய்கிறது. அதனால்தான் முதலமைச்சர் இதனை ஓரவஞ்சனை அரசு என்கிறார்.

பிரதமர் மோடி அவர்கள் டபுள் இன்ஜின் சர்க்கார்’ என்கிறார். அதற்கு நம் தலைவர், அது டப்பா இன்ஜின்’ என்று பதிலடி கொடுத்தார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விடத் தமிழ்நாடு இன்று 11.19% வளர்ச்சியுடன் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.

ஊழலுக்கு இவைதான் சாட்சி :

பிரதமர் மோடி அவர்கள் நம் ஆட்சியை  சி.எம்.சி.-“CMC’ (Corruption, Mafia, Crime) என்று விமர்சிக்கிறார். ஆனால் உண்மையில் ஊழல் (Corruption) வழக்கில் தண்டனை பெற்றுச் சிறை சென்றவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது அவர்தான். இரட்டை இலைச் சின்னத்திற்காகப் பணபேரம் பேசிச் சிறை சென்ற மாஃபியாக்களும் (Mafia), மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்குகளில் சிக்கியவர்களும் (Crime) இன்று அவர் பக்கத்தில்தான் அமர்ந்துள்ளனர்.

குஜராத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே 21 கோடி ரூபாய் மதிப்பிலான தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. 11 பாலங்கள் இடிந்துள்ளன. மோர்பி பாலம் விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர். ஊழல் எங்கே நடக்கிறது என்பதற்கு இவைதான் சாட்சி.

கொரோனா காலத்தில் விளக்கேற்றச் சொன்னதும், தட்டு முட்டச் சொன்னதும்தான் மோடி அவர்கள் செய்த சாதனை. ஆனால், நம் முதலமைச்சர் நேரடியாக, கொரோனா வார்டிற்குச் சென்று ஆய்வு செய்து மக்களுக்குத் தைரியம் ஊட்டினார். பி.எம்.கேர்ஸ் (PM CARES) நிதியில் வசூலிக்கப்பட்ட 30,000 கோடி ரூபாய் என்னவானது என்று கேட்டால், அது “தனியார் நிதி’ என்று கூறித் தப்பிக்கிறார்கள்.

ஊழலுக்குப் பல்கலைக்கழகம் கட்டினால், அதற்கு வேந்தராகப் பிரதமர் மோடி அவர்கள் இருப்பார் என்று நம் முதலமைச்சர் சொல்வது எவ்வளவு உண்மை! இப்படிப்பட்ட பா.ஜ.க. அரசு, தி.மு.க-வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் அற்றது. அதுமட்டுமல்ல, இன்று பா.ஜ.க ஆட்சியில் இல்லாத, பிற கட்சிகள், அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில், ஆளுநரை வைத்து குறுக்கு வழியில், எப்படியாவது இடையூறு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில், முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு நம்முடைய சட்டசபையில் என்ன நடந்தது என்று நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள். 

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை :

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் வந்து, அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய அந்த உரையைப் படிப்பதுதான் மரபு. ஆனால், இவர் வந்து என்ன சொல்கிறார்? “தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது, தேசிய கீதம் பாட வேண்டும்’’ என்கிறார்.

ஆளுநர்  ஆர்.என்.ரவி அவர்களே எங்களுக்குத் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றுதான், தேசிய கீதமும் ஒன்றுதான். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு, கடந்த மூன்று வருடமாக ஆளுநர் அவர்கள் வாக்கிங் போவதற்குத்தான் சட்டசபைக்கு வருவார். இந்த முறை ஜாக்கிங் செய்துவிட்டு சென்று விட்டார்.  எடுத்தேன் பாரு ஓட்டம்! என வரும்போதே போவதற்கு அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் வந்தார். 

அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தைரியமாக எழுந்து சொன்னார், “இனிமேல் சட்ட நடவடிக்கை எடுப்போம், சட்டமன்றத்தில் இனிமேல் ஆளுநர் உரையே தேவையில்லை’’ என்கிற சட்ட நடவடிக்கையை இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் செய்யத் துணியாத ஒரு காரியம். “சட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்று தைரியமாகச் சொன்ன முதலமைச்சர். இதற்குப் பெயர்தான் சுயமரியாதை.  ஆனால் இதற்கும் பார்த்தீர்கள் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநருக்கு ஆதரவு தருகிறார். அதனால்தான் நாங்கள் அடிக்கடி சொல்கிறோம், அ.தி.மு.க என்றால், இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது, அது அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறிப் பல வருடம் ஆகிவிட்டது.

அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுப் பாருங்கள், “இந்தித் திணிப்பைப் பற்றி ஏதாவது கருத்து சொல்லுங்களேன்’’ என்று கேட்டுப் பாருங்கள். என்ன சொல்வார்? “ஏன் இந்தியை திணித்தால் என்ன? அதனால் எங்கள் கூட்டணிக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.’’ என்பார்.

நீங்கள் அரசியலில் நிறைய முரட்டுப் பக்தர்கள், முரட்டுத் தொண்டர்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். முரட்டு அடிமையைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரே முரட்டு அடிமை, நமக்குத் தெரிந்த முரட்டு அடிமை அமித்ஷாவின் முரட்டு அடிமை  எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான். அதுமட்டுமல்ல, நேற்று முன்தினம் பிரதமருடைய கூட்டத்தில் பேசும்போது, என் பெயரைச் சொல்லிப் பேசுகிறார். “உதயநிதி அவர்கள் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார், என்ன தகுதி இருக்கிறது?" என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று முன்தினம் பேசினார். என் தகுதி இருக்கட்டும், அதற்கு வருவோம்.

அடிமைகளும் பாசிஸ்டுகளும் :

முதலில் உங்கள் தகுதி என்னவென்று உங்கள் கூட இருக்கிறார்களே, இப்போது நான்கு நாளாகக் கூட்டுச் சேர்ந்து சுற்றுகிறீர்களே, இவர்களெல்லாம் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? நான் என்னவென்று மட்டும் சொல்கிறேன், யார் சொன்னார்கள் என்று நீங்கள் கண்டுபிடியுங்கள். 

”துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும்."

அதுமட்டுமல்ல, இன்னொன்றும் சொல்லியிருக்கிறார். ”அவரோடு கூட்டணி வைப்பதற்குத் தூக்குப் போட்டுத் தொங்கிவிடலாம்’’ என்று சொன்னவர் யார்?

(இதற்கு கூட்டத்தினர் தினகரன் என்று தெரிவித்தார்கள்.)

இன்னொருத்தர் இருக்கிறார் சொல்கிறேன் நீங்கள் யார் என்று கண்டுபிடியுங்கள். “எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட இவருக்குத் தகுதி கிடையாது. எடப்பாடி ஒரு டயர் நக்கி." இதைச் சொன்னது யார்?’’

(இதற்கு கூட்டத்தினர் அன்புமணி என்று தெரிவித்தார்கள்.) 

எடப்பாடிபழனிசாமி அவர்களே, சத்தியமாக இந்தத் தகுதியெல்லாம் எனக்குக் கிடையாது. உங்கள் அளவுக்கு நான் தகுதி வாய்ந்தவன் கிடையாது. இதைச் சொன்னது நான் கிடையாது, உங்களோடு கூட்டு வைத்திருக்கும் உங்கள் கூடச் சேர்ந்து சுற்றுகிற உங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள்தான்.

இப்படிப்பட்ட அடிமைகளும் பாசிஸ்டுகளும் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இப்போது ஒன்றாக வந்தார்கள் என்றால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள்ளே மும்மொழிக் கொள்கையைத் திணிப்பார்கள், நிதி உரிமையை அதிகமாகப் பறிப்பார்கள். ஆகவே இதையெல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அதைவிட ஒவ்வொரு கழக உடன்பிறப்புகளுக்கும் நமக்கும் இருக்கிறது.

கருப்பு-சிவப்பு வேட்டி கட்டிய கலைஞரின் கடைசி உடன்பிறப்புகள் நம் அத்தனை பேருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இந்தித் திணிப்பு அல்ல, எந்தத் திணிப்பையும் தமிழ்நாட்டுக்குள்ளே நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்த நேரத்தில் ஒரேயொரு விஷயத்தைச் சொல்லி என் உரையை முடித்துக்கொள்கிறேன். 

“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !

ஆங்கிலப் பத்திரிகை :

1960-களில் டெல்லியிலிருந்து வந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை, அதில் ஒரு தலையங்கம் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க வேகமாக வளர்ந்து வருவது மிக மிக ஆபத்தானது என்று டெல்லியிலிருந்து வருகிற ஒரு ஆங்கிலப் பத்திரிகை எழுதுகிறது.

அதைப் படித்துவிட்டு நம்முடைய கழகத் தலைவர்கள் மிகுந்த கோபமடைந்தார்கள். அண்ணாவிடம் சொன்னார்கள். அதற்கு அண்ணா பதில் சொன்னார், ஆமாம் உண்மைதான். தி.மு.க வளர்வது ஆபத்துதான், நிச்சயம் ஆபத்துதான். ஆனால், அது யாருக்கு ஆபத்து என்பது மிக மிக முக்கியம், அதைப் பாருங்கள். இந்தியைத் திணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம் தி.மு.க ஒரு ஆபத்துதான். தமிழ்நாட்டைச் சுரண்டலாம் என்று நினைக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்குமே தி.மு.க ஆபத்துதான். மாநில உரிமைகளைப் பறிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு தி.மு.க-வால் நிச்சயம் ஆபத்துதான்" என்று அன்றைக்கு அண்ணா சொன்னார். இன்றைக்கும் அண்ணா சொன்னது தமிழ்நாட்டுக்குப் பொருந்தும்.

ஏனென்றால் மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு இன்றைக்கும் என்றைக்கும் தி.மு.க-தான் ஆபத்தான கட்சிதான். நம் தமிழ்ப் பண்பாட்டை, ஒற்றுமையை, நல்லிணக்கத்தை அழிக்க நினைக்கின்ற பா.ஜ.க-வுக்கு என்றைக்குமே தி.மு.க ஆபத்தான ஒரு கட்சிதான்.

இதில் எந்த மாற்றமும் இல்லை என்பதைச் சொல்லி பாசிஸ்டுகள் அவர்களோடு சேர்ந்திருக்கக்கூடிய அடிமைகளை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

200-க்கும் அதிகமான தொகுதிகள் :

தலைவர் அவர்கள் நமக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார்கள் ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’. 200 இலக்கு.

ஆனால் கழக உடன்பிறப்புகள் அடுத்த மூன்று மாத காலம், 80 நாள் களத்தில் இறங்கி நம் பிரச்சாரத்தைக் கவனமாகச் செய்தோம் என்றால் 200 அல்ல, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நம் தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயம் வெற்றி பெறும்.

திராவிட மாடல் அரசின் ஐந்து ஆண்டு சாதனைகளை விஞ்சுகிற அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயமாக அமையும்.  தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து அடுத்த 80 நாட்கள் நாம் களப்பணியாற்றுவோம்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் சட்டசபையில் சொன்னது போல நாம்தான் மீண்டும் வருவோம். நாம்தான் மீண்டும் மீண்டும் வருவோம். நாம்தான் தேர்தல் களத்தில் வெல்வோம். நாம்தான் மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று சொல்லி நம்முடைய மொழிப்போர் தியாகிகளுக்கு என்னுடைய வீரவணக்கத்தைச் செலுத்தி, இந்தச் சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்டக் கழக செயலாளர்களுக்கும், வந்திருந்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் மீண்டும் என் நன்றியைச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். 

banner

Related Stories

Related Stories