
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.12.2025) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை.
“பாளையங்கோட்டைச் சிறையினிலே - பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தவர் யாரு? அந்த கலைஞரின் புகழினைப் பாடு!” என்று 1965-ஆம் ஆண்டு நடந்த மொழிப்போரில் ஈடுபட்ட தலைவர் கலைஞரின் தீரத்தைச் சொல்ல காரணமான, பாளையங்கோட்டையில் இருக்கும் நெல்லைச் சீமைக்கு நான் வந்திருக்கிறேன்!
அன்றைக்கு, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். நாடே போற்றும் ஆட்சியை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து அவர் வழங்கினார்! அதுதான், திராவிட மாடலின் நவீன தமிழ்நாட்டின் தொடக்கமாக அமைந்தது!
இந்திய விடுதலைப் போராட்டத்திலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலும் பொன்னால் பொறிக்கத்தக்க தியாகங்களை – தியாகிகளைத் தந்த மண், இந்த திருநெல்வேலி மண்! அப்படிப்பட்ட இந்த நெல்லை மக்களுக்கு, ஒரு மகிழ்ச்சியான செய்தியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த நெல்லையின் அடையாளமாக விளங்குகிறது நெல்லையப்பர் கோயில். ஏழாம் நூற்றாண்டில், நின்றுசீர் நெடுமாறப் பாண்டியரால் கட்டப்பட்ட இந்த கோயிலை 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகளை செய்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேர் 1991-ல் தீ விபத்தில் எரிந்து போனது.
கடந்த பிப்ரவரி மாதம், நான் இதே நெல்லைக்கு வந்தபோது மீண்டும் அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று அறிவித்தேன். மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இப்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில், அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து அந்த வெள்ளித் தேர் ஓடும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்போது நான் மகிழ்ச்சியில் மட்டுமல்ல, பெருமையாகவும் நிற்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், நேற்று, பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பெருமிதத்தில் கம்பீரமாக உங்கள் முன்பு நான் நின்று கொண்டிருக்கிறேன்! “பொருநை - தமிழரின் பெருமை!” “இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனிமேல், தமிழ் நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும்! என்ற நம்முடைய வாதத்திற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக நாம் நிறுவி இருக்கிறோம்!
நாம் ஏன் கீழடி – பொருநை என்று நம்முடைய வரலாற்று தரவுகளை, தொடர்ந்து உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம்? தமிழர்களான நம்முடைய பண்பாடு தனித்துவமானது, முற்போக்கானது!
இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாகவும், உச்சமாகவும் இருந்தது, நம்முடைய தமிழ்நிலம்தான்! அதற்கு பல இலக்கியச் சான்றுகள் இருக்கிறது! ஆனால், இலக்கியம் மட்டுமே ஒருபோதும் வரலாற்று சான்றாகாது! எனவே, அதை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கவும், தொல்லியல் சான்றுகளை சேகரிக்கவும் நாம் மேற்கொள்ளும் காலப் பயணம்தான் அகழாய்வுகள்!

இந்த நிலையில்தான், கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு, ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்களுடைய எண்ணம் என்ன? தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது; மீறி நடந்தாலும், அந்த ஆய்வு முடிவுகள் வெளியே வந்துவிடக் கூடாது!
இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட, தமிழ் மீதும் – தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுபவர்களை எதிர்த்துதான் நாம் இன்றைக்கு உறுதியுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தைத் தேடி அலைபவர்களுக்கு கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதற்காக நாம் சோர்ந்துவிட முடியுமா? நம்முடைய கடமையில் இருந்து நாம் பின்வாங்கிவிட முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது!
ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்! நாமும் தொடர்ந்து அடுக்கடுக்கான சான்றுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்! சான்றுகளை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுவிட்டால் மட்டும் போதுமா? அறிவுத்தளத்தில் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் போதுமா? அதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு வைத்து இன்றைக்கு அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் அருங்காட்சியகங்களை அமைத்துக் கொண்டு வருகிறோம்!
13 ஏக்கர் நிலப்பரப்பில், 54 ஆயிரத்து 296 சதுர அடி பரப்பளவில், பொருநை அருங்காட்சி அரங்கத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழினத்தின் தலைமை இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, ஒரு தமிழனாகவும் நான் இன்றைக்கு பெருமைப்படுகிறேன். நான் இங்கே கேட்க விரும்புவது, உறுதியோடு உங்களை எல்லாம் நான் கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்று, இந்த அருங்காட்சியகங்களை பார்க்க வேண்டும்! பார்ப்பீர்களா? பார்த்தே தீரவேண்டும்.
இந்த நேரத்தில், மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அறிவிப்பு வந்தது. அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? இன்னும் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை. ஆனால், நாம் ஆட்சிக்குப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளை மேற்கொண்டு இப்போது உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம்.
அதனால், இந்த நேரத்தில் பிரதமர் மோடி அவர்களையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களையும் தமிழ்நாட்டில் கட்டியிருக்கக்கூடிய கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பார்க்கவேண்டும். இந்த கூட்டத்தின் மூலமாக, இந்த விழாவின் மூலமாக நான் அன்போடு அவர்களை அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால்தான் தமிழினுடைய நாகரிகம் எந்த அளவுக்கு தொன்மை கொண்டிருக்கிறது என்பது தெரியும்.
இதை மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கக்கூடிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், கட்டி எழுப்பியுள்ள அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கும், அரசு அலுவலர் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் – தமிழ் ஆர்வலர்! தொல்லியல் ஆய்வாளர்! இயற்கையின் காதலர்! என்று பன்முகம் கொண்டவர் அவர்! இப்படி, தமிழ் மீதும், தொல்லியல் துறையிலும், தனிப்பட்ட ஆர்வம் கொண்ட ஒருவர் இந்த துறைக்கு அமைச்சராக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

அதேபோல், தொல்லியல் துறை செயலாளராக இருக்கக்கூடிய நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் அவர்களும் தொல்லியல் ஆய்வாளர்தான். தமிழ்நாட்டின் தனிப்பெருமையை உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் உதயச்சந்திரன் அவர்கள்.
இப்படிப்பட்ட இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே கீழடி அருங்காட்சியத்தை உருவாக்கி, பார்வையாளர்களிடம் அது மிகவும் ஹிட்டாகியிருக்கிறது! இப்போது, பொருநை அருங்காட்சியகத்தையும் உருவாக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.
நம்முடைய திராவிட மாடல் அரசு என்பது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். அதற்கான பெருமைமிகு சாட்சிதான், கீழடியும், இங்கு அமைந்திருக்கும் பொருநை அருங்காட்சியகமும்! வெளியில் நம்மை எதிர்க்கக்கூடியவர்கள், விமர்சனம் செய்யக் கூடியவர்கள், “தமிழ் என்றாலே தி.மு.க-தான்; வேறு யாராலும் இதையெல்லாம் யோசிக்கக் கூட முடியாது” என்று மனதிற்குள் நிச்சயம் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்!
அதுமட்டுமா! இன்றைய தினம் 235 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 33 முடிவுற்ற பணிகளை நெல்லை மாவட்ட மக்களுக்காக நான் திறந்து வைத்திருக்கிறேன்! அதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நெல்லை பன்னோக்கு மருத்துவமனையில், இதயம், நரம்பு, சீறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க தேவையான அனைத்து நவீன கட்டமைப்புகளையும் கொண்ட மருத்துவமனை கட்டடம் முக்கியமாக இருக்கிறது!
தமிழ்ப் பெருமைக்கு பொருநை மியூசியம்! மக்கள் உயிர்காக்க மருத்துவமனை! “அப்போது நெல்லை மக்களுக்கு அறிவுப் பசிக்கு என்ன?” என்று கேட்கிறீர்களா!
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்
திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம் எனும் வரிசையில்,
நம்முடைய நெல்லையில கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயரில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருக்கிறேன்.
நெல்லையின் அடையாளமாக நெல்லையப்பர் கோயில், திருவள்ளுவர் இரட்டைப் பாலம், தாமிரபரணி - இந்த வரிசையில் இனி, பொருநை அருங்காட்சியகமும், மாபெரும் அறிவுத் திருக்கோயிலாக அமையப் போகின்ற காயேதே மில்லத் நூலகமும் இருக்கும்!

நெல்லைக்கு மட்டுமல்ல, அருகாமையில் இருக்கக்கூடிய தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இதனால் பெரிய அளவில் பயனடைவார்கள்!
மொத்தம் 356 கோடியே 59 இலட்சம் ரூபாய் மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 45 ஆயிரத்து 477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கக்கூடிய முப்பெரும் விழாவாக, இந்த அரசு விழாவை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் - நம்முடைய சீனியர் அமைச்சர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கே.என்.நேரு அவர்களையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!.
அனுபவமிக்க சிறந்த செயல்வீரர் - உங்கள் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கிடைத்திருக்கிறார்! அவர் கையில் பெரிய துறை இருக்கிறது! அதனால், பெரும்பாலான திட்டங்களை, அவரே உங்களுக்கு கொண்டு வந்துவிடுவார். சீனியர் அமைச்சர் என்கின்ற காரணத்தால், மற்ற அமைச்சர்களிடம் கனிவாக பேசி, தேவையான திட்டங்களை கொண்டு வந்துவிடுவார்.
இங்கே நாம் நடைமுறைப்படுத்தி வருகின்ற திட்டங்களைப் பார்த்தாலே நேருவின் Effect நன்றாக தெரியும்! விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக்கூடிய அவருக்கும், அதேபோல், மாவட்ட ஆட்சியர் சுகுமார் அவர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் துணையாக இருக்கக்கூடிய அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
16 ஆண்டுகளுக்கு முன்பே, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்ல, 369 கோடி ரூபாய் ஒதுக்கி தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு வெள்ள உபரி நீர்த் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
2021-ல் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதற்காக தனியாக அலுவலர்களை நியமித்து விரைந்து முடிக்க நான் உத்தரவிட்டேன்! தமிழ்நாட்டின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமாக, வெற்றிகரமாக இது முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது!
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், 14 ஆயிரத்து 85 ஹெக்டேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 955 ஹெக்டேரும் என்று மொத்தம், 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. அதேபோல், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கின்ற வறண்ட பகுதிகளில், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது, வேளாண்மைப் பணிகள் பெருகியிருக்கிறது! இப்படி நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்து இன்றைக்கு மக்களுக்கு அற்பணித்திருக்கிறோம்.!

அதுமட்டுமல்ல, நம்முடைய முத்திரைத் திட்டங்களாக இருக்கக்கூடிய அந்தத் திட்டங்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த நெல்லையில் அதன் மூலமாக பயனடைந்திருக்கக்கூடிய அந்தத் திட்டங்களைப் பற்றி நான் தலைப்புச் செய்தியாக சொல்லப் போகிறேன்.
“பெற்ற மகனே கைவிட்டாலும் கூட, என் மகன் ஸ்டாலின் இருக்கிறான்” என்று தாய்மார்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், இதுவரைக்கும் 2 இலட்சத்து 56 ஆயிரம் நபர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குகின்ற தாயுமானவர் திட்டத்தில், 48 ஆயிரத்து 434 நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில், இதே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 44 ஆயிரத்து 176 நபர்கள் மெடிக்கல் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள்.
விடியல் பயணத்தில், தினந்தோறும் 1 இலட்சத்து 83 ஆயிரம் சகோதரிகள் பேருந்தில் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுமைப் பெண் திட்டத்தில் 29 ஆயிரத்து 244 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் சென்று சேருகிறது.
அதேபோல், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 19 ஆயிரத்து 426 மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
விபத்து நடந்தால் உயிர்காக்கும் சிகிச்சை செலவை, அரசே ஏற்றுக் கொள்கின்ற இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், 7 ஆயிரத்து 556 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1 இலட்சத்து 40 ஆயிரம் நபர்கள் இதுவரை பயனடைந்திருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு 91 ஆயிரத்து 227 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம்.
இதெல்லாம் மாநில அளவிலான முத்திரைத் திட்டங்கள்.
நெல்லைக்கென்று ஸ்பெஷலாக நிறைவேற்றியப் பணிகள், இப்போது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகளை சொல்லவா?

மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - அம்பாசமுத்திரத்தில் புறவழிச்சாலை - 93 திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை செய்திருக்கிறோம்! இதுமட்டுமல்லாமல்,
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுக்கான திருப்பணிகள் திட்டத்தின்கீழ் 33 திருக்கோயில்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. 605 கோடி ரூபாய் மதிப்பில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள், 423 கோடி ரூபாய் மதிப்பில் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள்,
மணிமுத்தாறு அணைப்பகுதியில் சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிர்ப் பூங்கா உள்ளிட்ட வசதிகளோடு சுற்றுச்சூழல் சுற்றுலாத் தல மேம்பாடு,
கூட்டப்புளி, கூடுதாழையில் தூண்டில் வளைவு,
இராதாபுரம் வட்டம், விஜயாபதியில் புதிய விளையாட்டரங்கம்,
தாழையூத்து முதல் கொங்கந்தான்பாறை விலக்கு வரை மேற்குப் புறவழிச்சாலை இத்தனை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்ல, காவல்கிணறு – இராதாபுரம் சாலையில் இரயில்வே மேம்பாலம், குலவணிகர்புரம் பகுதியில், Y வடிவ மேம்பாலம், இராதாபுரம் வட்டம் ஆலந்துரையாற்றின் குறுக்கே உள்ள கஞ்சிப்பாறை அணைக்கட்ட மேம்படுத்தி, அதன் மேல்மட்ட மற்றும் கீழ்மட்டக் கால்வாய்களை ஹனுமாநதி வரை அகலப்படுத்தும் பணி ஆகிய பணிகள் துவங்கப் போகிறது!
மேலும், ஆயிரத்து 875 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் கோரையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம்,
550 கோடி ரூபாய் மதிப்பில், சேரன்மகாதேவி வட்டம், தெற்கு வீரவநல்லூர் கிராமத்தில் வள்ளிமலை ஓடை குறுக்கே நீர்த்தேக்கம்,
477 கோடி ரூபாய் மதிப்பில், திசையன்விளை வட்டத்தில் இருக்கும் குட்டம் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட, நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல் மற்றும் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் நீர்வள ஆணைய ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாங்குநேரியன் கால்வாயை அகலப்படுத்திப் புறவழிக் கால்வாய் அமைத்து, நாங்குநேரி பெரியகுளத்திற்கு கீழ் உள்ள 46 குளங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

மிகவும் பெரிய பட்ஜெட்டில் செய்கின்ற மெகா திட்டங்களை மட்டும்தான் இப்போது நான் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. முழுவதுமாக சொல்ல நேரம் இல்லை! இத்தனை சொன்னாலும், உங்கள் ஊருக்கு வந்துவிட்டு, புதிதாக அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால் நன்றாக இருக்குமா? அப்படியே சென்றால், நேரு சும்மா விடுவாரா? அதுமட்டுமல்லாமல், இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை விடமாட்டார்கள்.
அதனால், நெல்லை மாவட்டத்திற்கான முத்தான மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாநகர், காந்திநகரில் அமைந்திருக்கக்கூடிய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில்,
16 கோடி ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – சேரன்மாதேவி வட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் 4 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 5 கோடி ரூபாய் செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி மக்களுக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து செய்து வழங்குகின்ற மக்களாட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு அப்படியே நேர்மாறாக, மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய கிராமப்புறங்களின் உயிர்நாடியாக இருந்து, பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தை இப்போது, பா.ஜ.க. அரசு திட்டமிட்டு முடக்கியிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தியடிகள் பெயரையே நீக்கி, பெரும்பாலான இந்திய மக்களுக்கு புரியாத இந்திப் பெயரை வைத்திருக்கிறார்கள். மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பா.ஜ.க.வுக்கு பிடிக்காது.
அதனாலேயே, அதையெல்லாம் வாழ்நாளெல்லாம் வலியுறுத்திய காந்தியையும் அவர்களுக்கு பிடிக்காது! உலகம் முழுவதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கின்ற தேசத்தந்தை காந்தியின் பெயரை இன்றைக்கு நீக்கியிருக்கிறார்கள். காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே காலி செய்துவிட்டார்கள் – அழித்துவிட்டார்கள் - அழிக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளாக இந்தத் திட்டத்தை பல்வேறு கோணங்களில் கெடுத்தார்கள் - பலவகைகளில் நாசப்படுத்துகிறார்கள். ஆட்களைக் குறைத்தார்கள் - வேலை நாட்களைக் குறைத்தார்கள் - சரியாக சம்பளம் தரவில்லை - சரியாக அங்கிருந்து முறையாக வரக்கூடிய நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியைகூட, மாநில அரசான நாம்தான் அந்த நிதியை சமாளித்து வழங்கினோம்.
இப்படி சிறிது, சிறிதாக நாசம் செய்த அந்த திட்டத்திற்கு, இப்போது மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார்கள்! இனிமேல், மாநில அரசு 40 விழுக்காடு நிதி தர வேண்டுமாம். ஏற்கனவே, நிதி நெருக்கடியை உருவாக்கி, நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்து, நம்மை முடக்கப் பார்ப்பவர்கள், இப்போது கூடுதல் சுமையை நம்முடைய தலையில் கட்டுகிறார்கள்!
அறுவடைக் காலங்களில், 60 நாட்கள் வேலை எதுவும் வழங்கப்படாது என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். இதனால், வேளாண் பணி செய்தவர்கள் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கிறார்கள். மொத்தத்தில், ஏழைகளுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்திலும் இதைப் பற்றி முறையாக விவாதிக்காமல் அக்கிரமம் செய்து, நிறுத்திவிட்டார்கள். இதன் விளைவுகள் இதை யாரும் நினைத்து பார்க்க முடியாதளவுக்கு மோசமாக இருக்கிறது. அதனால்தான், அரசியல் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள் - உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்கள் - நோபல் பரிசு பெற்ற வல்லுநர்கள் என்று பலரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முடிவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். “இது ஒரு வரலாற்றுத் தவறு” என்று எச்சரிக்கை மணிகளை ஒலித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், வருகின்ற 24-ஆம் தேதி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசிற்கு எதிராக நாம் ஒரு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டும் அறிவித்திருக்கிறோம்.
ஆனால், இதைப் பற்றி மூச்சுக்கூட விடாமல் இருக்கிறார் யார்? போலி விவசாயி பழனிசாமி. உண்மையான விவசாயியாம். நான் தான் விவசாயி, நான் தான் விவசாயி என்று சொல்கிறார். நானும் கேடி தான், நானும் திருடன் தான் என்று சொல்வது போல், நானும் விவசாயி தான், நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை.
ஏற்கனவே, விவசாயிகளின் உரிமையை பறிக்க, அவர்களையெல்லாம் நடுத்தெருவில் நிறுத்தி, பெரிய போராட்டத்தையே நடத்தினார்கள். எதற்கு? அப்போது மூன்று வேளாண் சட்டத்தை பா.ஜ.க. கொண்டு வந்தது. அதற்கு, பா.ஜ.க. காரர்களே, மூக்கு மீது விரல் வைப்பதுபோல் முட்டு கொடுத்தார், யார்? பழனிசாமி! என்ன சொன்னார்? நியாயப்படுத்தினார். போராடுபவர்களை எல்லாம் புரோக்கர் என்று சொன்னார்.
அதுமட்டுமா? சிறுபான்மையினருக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்த சட்டத்தை பா.ஜ.க. கொண்டு வந்தபோது, நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால், இதனால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டவர் யார் பழனிசாமி!

இந்த துரோக List-இல் latest, கூடுதலாக, நூறுநாள் வேலைத் திட்டமும் சேர்ந்திருக்கிறது! பா.ஜ.க. அரசு பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கின்றபோது கூட, அதை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணைபோகும் இந்த செயலை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்! எனவேதான், மக்கள் சக்தியின் துணையோடு இந்த சட்டத்தையும் திரும்ப பெற வைப்போம்! இது எங்களுடைய இலட்சியம்.
ஜி.எஸ்.டி, அடாவடி ஆளுநர், மெட்ரோ நிராகரிப்பு என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எத்தனை நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், போராடி, வாதாடி, திட்டமிட்டு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக நாம் உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவிலேயே நம்பர்-ஒன் மாநிலம் என்று நாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் அறிக்கைகளிலேயே அறிவித்திருக்கிறார்கள். நம்மை எதிர்ப்பவர்கள் கூட மறுக்க முடியாத அளவிற்கு வெற்றி என்பதுதான் திராவிட மாடலின் கெத்து! அடுத்து அமையப் போவதும் நம்முடைய ஆட்சிதான்! உறுதியாக சொல்கிறேன். திராவிட மாடல் 2.0-ல் இன்னும் பல மகத்தான திட்டங்கள் வரப் போகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இதுவரை 1 கோடியே 13 இலட்சம் சகோதரிகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தோம். இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 16 இலட்சம் பேருக்கு அதிகமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். நம்முடைய இந்த திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற ஒரு மாநிலத்தில் வழங்கிவிட்டு, கொடுத்ததை திரும்ப கேட்கிறார்களாம்! ஆனால், நாம் கூடுதலாக வழங்கிக் கொண்டு வருகிறோம். திரும்ப கேட்கவில்லை. கூடுதலாக வழங்குகிறோம். இதுதான் தி.மு.க.! இதுதான் திராவிட மாடல் ஆட்சி! இதுதான் தமிழ்நாடு!
உங்களுடைய அசைக்க முடியாத ஆதரவுடன் இது என்றும் தொடரும்! எத்தனை தடைகள் வந்தாலும் திராவிட மாடலால் தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு வளரும்!








