
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.17) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக ஒன்றிய பா.ஜ.க அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய 100 நாள் வேலை திட்ட (VB G RAM G) மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
அவ்விவாதத்தில் பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,“நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்களிலும் இந்தியும், சமஸ்கிருதமும்தான் உள்ளது. இந்திய மொழிகளுக்கு ஒன்றிய அரசு மதிப்பளிக்கிறது என்றால் வேறு எந்த மொழியிலாவது, குறிப்பாக தென் இந்திய மொழிகளில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவின் பெயரையாவது குறிப்பிட முடியுமா?
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய 100 நாள் வேலை உறுதித் திட்டம் என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம், வஞ்சிக்கப்படும் பாரதம். விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள புதிய 100 நாள் வேலை உறுதித் திட்ட (VB G RAM G) மசோதாவை தி.மு.க சார்பில் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) என்பது மக்களுக்கு வேலையளிக்கும் திட்டமாக இருந்தது. ஆனால், தற்போது அதற்கு மாற்றாக முன்மொழியப்பட்டிருக்கும் மசோதா (VB G RAM G) , அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவிக்கும் மசோதாவாகதான் இருக்கிறது.
100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இதுவரை கிராமப்புறங்களில் உள்ள முதியவர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இவர்களுக்கெல்லாம் எதிரான மசோதாவைதான் தற்போது ஒன்றிய அரசு முன்மொழிந்திருக்கிறது.
நூறு நாள் வேலை உறுதித் திட்டதின் கீழ் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு, எத்தனை வேலைவாய்ப்புகள் வழங்கலாம் என்று ஒன்றிய அரசு தீர்மானிக்கும் என VB G RAM G மசோதா தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் அக்கறையும் இல்லாத ஒன்றிய பா.ஜ.க.வினருக்கு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பு தேவையை எப்படி புரிந்துகொள்ள முடியும்?
ஒன்றிய பா.ஜ.க.வினருக்கு வ.உ.சி என்றாலே யாரென்று தெரியாது. இந்த நாட்டின் விடுதலைக்காக போராடி செக்கிழுத்தச் செம்மல் யாரென்று உங்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் நியாபகம் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் ஒன்றிய பா.ஜ.க.வினருக்கு வரும்.

தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வருவீர்கள். “நான் தமிழனாக பிறக்கவில்லையே” என்று சொல்வீர்கள். ஆனால், பீகார் தேர்தலின்போது, “தமிழர்கள் பீகாரிகளுக்கு எதிரானவர்கள்” என்றும், ஒடிசா தேர்தலின்போது, “தமிழர்கள் ஒடிசாவில் அதிகாரத்தை பறிக்க நினைக்கிறார்கள்” என்றும் தமிழர்களுக்கு எதிராக பேசக்கூடியவர்கள்தான் ஒன்றிய பா.ஜ.க.வினர்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. செஸ்-இலிருந்து வரும் நிதியில் அதிக பங்குகளையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொள்கிறது. பிரதமரின் பெயரில் இருக்கக்கூடிய வீடு கட்டும் திட்டத்திற்கே மாநில அரசுதான் 61% நிதியை வழங்கி வருகிறது. இப்படி, பல ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுதான் அதிகப்படியான நிதியளித்து வருகிறது.
விவசாயத்தில் விதைக்கும் நேரம் மற்றும் நாற்றுநடும் நேரத்தை தவிர பிற நாட்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத சூழல் உள்ளது. இவ்வேளையில் புதிய மசோதாவின்படி, 60 நாட்கள் வேலை இல்லை என்றால், விவசாயிகளின் நிலை என்னவாகும் என சிந்தித்து பார்த்தீர்களா? உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்.
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாது; வானம் ஏறி வைகுண்டம் போவது எப்படி?” என்பதுபோல, இதுவரை 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 100 நாட்களே வேலைவாய்ப்பு அளிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசு, “125 நாட்கள் வேலைவாய்ப்பளிக்கப்படும்” என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏழை-எளிய விவசாய தொழிலாளர்களுக்கு ‘மகாத்மா காந்தி நூறு நாள்’ வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அட்சய பாத்திரத்தை வழங்கியது. தற்போது ஒன்றிய பாஜக அரசு அதனை பிடுங்கிக் கொண்டு விவசாயிகளிடம் பிச்சைப் பாத்திரத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.






