சென்னை காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மதுரை ஆதீனம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மதுரையில் இருந்து தனது காரில் சென்னை நோக்கி வந்து இருந்தார்.
வரும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகே ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில், எந்த காயமுமின்றி அவர் தப்பிய நிலையில்,சைவ சித்தாந்த மாநாட்டில் கார் விபத்து மூலம் தன்னை கொல்ல சதி நடந்ததாக பேசிய மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் கூறியிருந்தார். எனினும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி ஆதாரத்தையும் வெளியிட்டதில் ஆதினம் பொய் சொன்னது அம்பலமானது.

இந்த நிலையில், மத மோதலை தூண்டும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக காவல்துறையின் விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என கூறினார்.
இதனையடுத்து நீதிபதி, ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என தெளிவுப்படுத்தினார். விசாரணைக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்பாக ஆதீனத்திற்கு காவல்துறை தகவல் தெரிவிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆதீனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.






