அரசியல்

‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !

‘அன்புக்கரங்கள்' திட்டம் :  கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கருணையின் முதல்வர்

முரசொலி தலையங்கம் (17-09-2025)

‘அன்புக்கரங்கள்' திட்டத்தின் மூலமாக கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!

ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘தாயுமானவர்' திட்டத்தை தொடங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 'அன்புக்கரங்கள்' என்ற திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர். பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு பெற்றோராக இருக்கும் கருணை உள்ளத்தோடு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார். பெற்றோர் இருவரையும் இழந்து 12- ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.

‘அன்புக்கரங்கள்' திட்டம் :  கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !

‘அன்புக்கரங்கள்’ திட்டத்தைச் செயல்படுத்த கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 6 ஆயிரத்து 32 குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியினை மாதம் தோறும் பெற உள்ளனர்.

“திராவிட மாடல் என்றால் ' எல்லோருக்கும் எல்லாம்' என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல!” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அரிதான அந்தச் செயலைத் தான் முதலமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள்.

“சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடும் கையாக என்னுடைய கை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்! அப்படிதான், இருந்து கொண்டிருக்கிறேன். பெற்றோர் வேலைக்குச் செல்கிறார்கள் என்று, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோம்.பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக்கரங்கள் திட்டம்” என்று முதலமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் இத்திட்டத்தின் முழுமையான கருணை முகம் தெரிகிறது.

பெற்றோர் இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத் திறனாளியாக (Physically, Mentally challenged) இருப்பவரின் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருப்பின் அவரது குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருவோரின் குழந்தைகள் உதவி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரச்சினையை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்து இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் அறியலாம்.

‘அன்புக்கரங்கள்' திட்டம் :  கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !

கொரோனா காலத்திலேயே பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 332 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5.00 லட்சம் வீதம் வைப்புத் தொகை வழங்கியவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்தக் குழந்தைகள் 13 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டம் அது. தாய் அல்லது தந்தையை இழந்த 13 வயதுக்குட்பட்ட 13 ஆயிரத்து 682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கியவரும் முதலமைச்சர்தான்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3,000 வழங்கினார் முதலமைச்சர். இவை அனைத்தும் அவரது கருணை உள்ளத்தின் காட்சிகள் ஆகும்.

திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. 'மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை -2021' என்ற அறிக்கையை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

'நமக்கு யாருமில்லை என்று நினைக்காதீர்கள், நான் இருக்கிறேன்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்ன சொல் மிகமிக முக்கியமானது.

குடும்பமானது குழந்தைகளுக்கானதாக இருக்கிறது. பெற்றோரின் அரவணைப்புதான் குழந்தைகளை வளர்த்தெடுக்கும். அத்தகைய பெற்றோர் இல்லாமல் போவது அந்த குழந்தைகளுக்கு அனைத்து வகையிலும் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும். குழந்தைகள் மத்தியில் ஒருவிதமான பயம் தொற்றி வருவதாக அண்மைக் காலத்து ஆய்வுகள் சொல்கின்றன. அந்த பயத்தைப் பெற்றோர்கள்தான் போக்க வேண்டும். பெற்றோர்கள் இல்லாத இடத்தில் அரசாங்கம் அந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறார்கள்.

பெற்றோரின் பாதுகாப்பு, அன்பு, பாசம், பெற்றுத் தருதல், கொடுத்தல், வழிநடத்துதல் ஆகிய அனைத்தும்தான் குழந்தைகளை உருவாக்குகிறது. பெற்றோர் இல்லாத இடத்தில் அரசாங்கம் அதனை வழங்குவதுதான் அன்புக் கரங்கள் திட்டம் ஆகும்.

இதுவரை யாரும் செய்யாதது. இதுவரை யாரும் சிந்திக்காதது. இதுவரை யாருக்கும் தோன்றாதது. இன்றைய முதலமைச்சர் சிந்திக்கிறார், செய்திருக்கிறார் என்பதால்தான் அவரை கருணையின் முதல்வர் என்கிறோம்.

banner

Related Stories

Related Stories