துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாங்காடு நகரக் கழகச் செயலாளரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான ஜபருல்லா அவர்களின் மகள் சனோபர் பசீலா - அப்துல் மாலிக் சல்மான் இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைக்கு மாங்காடு நகரக் கழகச் செயலாளர் – நகர்மன்றத் துணைத்தலைவர் அண்ணன் ஜபருல்லா அவர்களின் அன்பு மகள் சனோபர் பசீலா அவர்களுக்கும், மணமகன் அப்துல் மாலிக் சல்மான் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று உங்களின் சார்பாக, அனைவரின் சார்பாக மணமக்களை வாழ்த்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த வாய்ப்பை அளித்த மாவட்ட கழக செயலாளர் அண்ணன் அன்பரசன் அவர்களுக்கும், இந்த நேரத்தில் என்னுடைய அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைக்கு இந்த திருமண விழா, கழகத்தின் விழாவாக, இன்னும் உரிமையோடு சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய குடும்ப விழாவாக அனைவரின் வாழ்த்துகளோடு சிறப்பாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்திருந்தால், நிச்சயமாக இந்த திருமண விழாவுக்கு வருகை தந்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி இருப்பார்கள்.
உங்களுக்குத் தெரியும் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, ஒரு வார சுற்றுப்பயணமாக, அரசு பயணமாக, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
இன்றைக்கு முதலமைச்சருடைய கட்டளைக்கிணங்க, அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்ற அந்த வாய்ப்பை நான் பெற்று இருக்கிறேன். அண்ணன் ஜபருல்லா அவர்களைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகத்தில் தவிர்க்க முடியாத செயல் வீரர், கள வீரர்.
அண்ணன் அன்பரசன் அவர்களின் வழிகாட்டுதலோடு, இன்றைக்கு இந்த மாங்காடு பகுதியை கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாக உருவாக்கி வைத்திருக்கிறார்.
அண்ணன் ஜபருல்லா அவர்களைப் பொறுத்தவரைக்கும், கலைஞர் அவர்களின் தூய்மையான ஒரு உடன்பிறப்பு. கழகத்தலைவர், நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அன்புத்தம்பி. கிட்டத்தட்ட 45 ஆண்டு காலமாக கழகத்துக்காக உழைத்து வருகின்றார். 1989-ஆண்டில் நம்முடைய தலைவர் அவர்கள் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது, அண்ணன் ஜபருல்லா அவர்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்து, தலைவர் அவர்களின் வெற்றிக்காக உழைத்தவர். அரும்பாடு பட்டவர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.
இந்த திருமணத்தைப் பொறுத்தவரை எனக்கெல்லாம், எங்களுக்குகெல்லாம் என்ன பெருமைன்னா, எப்படி உங்களுடைய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் அன்பரசன் அவர்கள் எப்படி இளைஞரணியில இருந்து படிப்படியாக உழைத்து, முன்வந்தாரோ, அதேபோல அண்ணன் ஜபருல்லா அவர்களும் இளைஞரணியில் நம்முடைய தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இன்றைக்கு இந்த பொறுப்பில் இருக்கின்றார்.
1992 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் அவர்களால் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் அண்ணன் ஜபருல்லா அவர்கள்.
1996 முதல் நான்கு முறை மாங்காடு நகர்மன்றத் துணைத்தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கழகம் சார்பாக தலைவர் அவர்கள் எந்த போராட்டம், எந்த ஆர்பாட்டத்தை அறிவித்தாலும், அதில் பங்கேற்று முதல் ஆளாக சிறை சென்றவர் தான் அண்ணன் ஜபருல்லா அவர்கள்.
அண்ணனுடைய திருமணத்தை 1999 ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் அவர்கள் நம்முடைய தலைவர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்கள். இன்றைக்கு அவருடைய மகள் திருமணத்தை நடத்தி வைக்கின்ற வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்றார்.
திருமண பத்திரிக்கையிலே பார்க்கும்போது, மணமக்களுடைய பெயர்களை முதலில் பார்த்தேன். மணமக்கள் இருவருமே நன்கு படித்தவர்கள். இரண்டு பேருமே மாஸ்டர் டிகிரி படித்திருக்கின்றார்கள்.
எழுபத்தி ஐந்து, நூறு வருடங்களுக்கு முன்பெல்லாம் திருமண பத்திரிகையில் பெயர்களுக்கு பின்னால் பட்டங்கள் இருக்காது, அவர்களுடைய சாதி ஒட்டு பெயர்தான் இருக்கும்.ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், சாதி பெயரை விட படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்தான் அதிகம் இருக்கின்றது. இது தமிழ்நாட்டினுடைய பெருமை. இந்த மாற்றம்தான் நம்முடைய திராவிட இயக்கத்தின் சாதனை. திராவிட இயக்கத்தினுடைய லட்சியங்களை நனவாக்கும் வகையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு திராவிட மாடல் அரசை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.
இன்றைக்கு பெண்கள் முன்னேறத்திற்காக பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு இந்த திருமண விழாவிற்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள்.
2021-இல், நம்முடைய தலைவர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக அமர்ந்த பிறகு, போட்ட முதல் கையேழுத்தே மகளிருக்கான ‘விடியல் பேருந்து பயண திட்டத்திற்கான அந்த கையெழுத்துதான்.
இந்த திட்டத்தின் மூலம் இந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 800 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு மகளிரும் மாதம் 1,000 ரூபாய் சேமித்து இருக்கின்றார்கள்.
அடுத்து முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றார்கள்.
இந்த திட்டத்தை, சமீபத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, பெற்றோர்கள், ஆசிரியர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த திட்டத்தை விரிவுபடுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் அவர்கள், இந்த கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, இது மிக, மிக சிறப்பான ஒரு திட்டம். இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை பாலோ செய்ய வேண்டும். நான் எங்களுடைய பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் இந்த திட்டத்தை அறிமுகப் படுத்தப் போகின்றேன் என்று பெருமையுடன் சொன்னார்.
இப்படி மற்ற முதலமைச்சர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய முதலமைச்சர். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய மாநிலம்தான் நம்முடைய மாநிலம் தமிழ்நாடு.
அடுத்து நம் வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். பள்ளிக் கூடத்திற்கு போனால் பத்தாது. உயர் கல்விக்கு போகணும்னு, அரசு பள்ளியில் படித்து, எந்த கல்லூரிக்கு போனாலும் புதுமைப்பெண் திட்டம். மாதம் 1,000 ரூபாய் அந்த பெண்ணுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழ்ப்புதல்வன் திட்டம் மாதம் 1,000 ரூபாய் அந்த மாணவனுடைய வங்கிக் கணக்கில் வைக்கப்படுகின்றது. இந்த திட்டங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளார்கள்.
அதனால தான், தமிழ்நாட்டில் இன்னைக்கு பள்ளி முடித்து விட்டு, இந்தியாவிலேயே அதிகமான சதவீதம், பள்ளிப்படிப்பை முடித்த 75 சதவீதம் மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் சேருகின்றார்கள். இது எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமான ஒரு திட்டம். உங்கெளுக்கெல்லாம் தெரிந்த திட்டம்தான். அதுதான் கலைஞர் மகளிர் உரிமை தொகைத்திட்டம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்த செப்டம்பர் மாசத்தோட 2 வருடங்கள் நிறைவு பெறுகின்றது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய்னு 2 வருடத்தில நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 24,000 ரூபாய் கொடுத்திருக்கின்றார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்ல கூட நிறைய பேர் மனு கொடுத்து இருக்கின்றார்கள். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த மனுக்கள் மீது நிச்சயம் நல்ல முடிவை எடுத்து, இன்னும் கூடுதலான மகளிருக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை உங்கள் முன் கூறிக் கொள்கின்றேன்.
இது போன்ற ஏராளமான திட்டங்களின் காரமணமாகத்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலாமாக, வளர்ச்சியடைகின்ற மாநிலமாக, அதுவும் சதாரண வளர்ச்சி கிடையாது, 11.19 சதவீத
வளர்ச்சியோட இந்தியாவுலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இதெல்லாம் பிடிக்காத சிலர்தான், தமிழ்நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களை திட்டி வருகின்றார்கள். மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டிற்குள் திணிக்க பார்க்கின்றார்கள். தேசிய கல்விக் கொள்கையை திணிக்க பார்க்கின்றார்கள். குலக்கல்வி திட்டத்தை திணிக்க பார்க்கின்றார்கள். டிலிமிட்டேசனை தமிழ்நாட்டிற்குள் புகுத்தி, எம்.பிக்கள் எண்ணிக்கையை குறைத்து நம்முடைய மாநில உரிமைகளை பறிக்க பார்க்கின்றார்கள்.
இத்தனை இடையூறுகளுக்கு நடுவே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவ்வளவு நல்ல திட்டங்களை கொடுத்து வருகின்றார். இங்கே நிறைய சிறுபான்மையின மக்கள் வந்து இருக்கீன்றீர்கள். உங்களுக்குத் தெரியும், திமுகவுக்கும் சிறுபான்மையின மக்களுக்குமான பந்தம், இன்னைக்கு, நேற்றைக்கு வந்தது கிடையாது, தமிழ்நாட்டுல பிறைகொடி உள்ள ஒவ்வொரு வீட்டுலயும் கருப்பு – சிவப்பு கொடி நிச்சயம் பறந்து கொண்டு இருக்கும். அதனாலதான் கழகம் என்றைக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக தொடந்து இருந்துகொண்டு வருகின்றது.
இதில் எனக்கு என்ன பெருமைன்னா, நான் பொதுவாழ்க்கைக்கு வந்து முதல் முதலாக கைதானது, சிறுபான்மைனருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்த காரணத்தால தான், முதல் முதலாக கைது செய்யப்பட்டேன். அதை நினைக்கும் போது இப்போதும் எனக்கு பெருமையாக இருக்கின்றது.
நம்முடைய தலைவர் அவர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றார்கள். இந்த சாதனைகளையெல்லாம் அடுத்த ஆறு மாதத்திற்கு மக்களிடம் கொண்டுபோய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
தலைவர் அவர்கள் நமக்கு ஒரு டார்கெட் கொடுத்து இருக்கிறார். குறைந்தது 200 தொகுதிளில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அணி வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். அடுத்த ஆறு மாதம் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து, அரசினுடைய சாதனைகளை, முதலமைச்சருடைய சாதனைகளை கொண்டு சென்றால் 200 அல்ல, 200 க்கும் அதிகமான தொகுதிகளில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும்.
நம்முடைய கழக அரசு ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவேண்டு மென்றால், இந்த பிரச்சாரத்தை அடுத்த ஆறு மாதங்கள் நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள், ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, அதே நேரம் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று உங்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்"என்று கூறினார்.