தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6.9.2025 அன்று இலண்டன் மாநகரத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு – இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை :-
இலண்டன் மாநகரத்தில் நடைபெறக்கூடிய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய தொழில்துறை அமைச்சர் அருமை தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களே, அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் மதிப்பிற்குரிய கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்களே, வாரியத்தின் உறுப்பினர்கள் என்னுடைய அன்பிற்குரிய சகோதரர் ராம் அவர்களே, சகோதரர் புகழ் காந்தி அவர்களே, சகோதரர் முகமது ஃபைசல் அவர்களே, வெளிநாடுவாழ் தமிழர் இந்திய சங்கத்தைச் சார்ந்திருக்கக்கூடிய செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகளே, தமிழ்நாடு அரசின் சார்பில் வருகை தந்துள்ள உயர் அலுவலர்களே, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய என்னுடைய துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களே, இங்கிலாந்து மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலிருந்து வந்திருக்கக்கூடிய என்னுடைய பேரன்பிற்குரிய தமிழ் சொந்தங்களே, தமிழ் உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புது நிலவே! அன்பே! அமுதே! அழகே! உயிரே! இன்பமே! இனிய தென்றலே! பனியே! கனியே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், தமிழை "தமிழே" என்று அழைப்பது தான் நமக்கு இருக்கக்கூடிய சிறப்பு. அப்படிப்பட்ட தமிழின் அடையாளமாக இந்த அயலக மண்ணில் வாழக்கூடிய உங்களையெல்லாம் பார்க்கும்போது, பேசலாமா! அல்லது பேசாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கலாமா! அந்த எண்ணம் தான் என்னுடைய உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருக்கிறது!
இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோரையும் பார்க்கின்றபோது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது!
ஏனென்றால், இந்தப் பயணத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்தேன். அப்போது நான் நினைத்துப் பார்த்தேன்…
ஏராளமான தமிழர்களை இந்த ஐரோப்பிய பயணத்தில் சந்தித்தேன். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, தமிழ்நாட்டில் தங்களுடைய ஊர் பெயரைச் சொல்லி, இப்போது ஐரோப்பாவில் இந்த நாட்டில் இந்த பொசிஷனில் நான் இருக்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டார்கள்.
இதை முறையாக பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேறுவதோடு, பண்பாட்டிலும். பகுத்தறிவிலும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் முன்னேறிக் கொண்டு செல்லவேண்டும்.
மிக மிக எளிய பின்புலங்களில் இருந்து, படித்து முன்னேறி, இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் இங்கே சுயமரியாதையுடன், மதிப்புமிக்க இடத்தில் இருப்பதைப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.
அந்தப் பெருமையோடுதான், நெஞ்சம் குளிர, உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்க தந்தை பெரியார் படத்தை நான் திறந்து வைத்தேன்!
தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என்று நீங்கள் எல்லோரும் இந்த அயலக மண்ணில் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய இந்தப் பயணத்தின் நிறைவாக உங்களை எல்லாம் இங்கே நான் சந்திக்க வந்திருக்கிறேன்.
தமிழர்கள் எங்கே சென்றாலும் நம்முடைய மொழி, பண்பாட்டை விடமாட்டோம். அது மட்டுமல்ல, சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம். அதற்கு எடுத்துக்காட்டாக, இங்கே தமிழர்கள் இருப்பதை கடந்த சில நாட்களாக கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களைப் பார்க்கிறேன்.
சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல், இதனால்தான், தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றது. தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லுகின்ற தூதர்களாக இங்கே இருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்கின்றேன்.
உங்களை பார்க்கும்போதே, இங்கே இருக்கின்றவர்களுக்கு நம்முடைய தமிழ்நாட்டைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வரும். அந்த வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டின் Un-official Ambassadors!
நீங்கள் தமிழ்நாட்டில் இல்லையென்றாலும், உங்கள் ஒவ்வொருக்குள்ளேயும் தமிழ்நாடு இரண்டறக் கலந்திருக்கிறது. அதை உங்கள் உணர்வுகளில் பார்க்கின்றபோது உள்ளபடியே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது!
அதிலும் நீங்கள் நிறைய குழந்தைகளுக்கு இனிமையான, அழகான தமிழ்ப் பெயர்களை வைத்திருக்கிறீர்கள். அவர்களுக்குள்ளேயும் தமிழுணர்வை ஊட்டிக் கொண்டு வருகிறீர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும், ஒருபோதும் நிறைவேறாது என்ற எண்ணம் வலுப்பெறுகிறது!
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பேசுவதைவிட, உங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசவேண்டும்; உங்கள் வீடுகளுக்கு ஒரு அண்ணனாக வந்து தங்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அதற்கான போதிய நேரம் இல்லை என்பதால் தான், இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலமாக உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு, எனக்கு என்று சொல்வதைவிட, நமக்கு கிடைத்திருக்கிறது.
நம்முடைய தமிழ்க்குழந்தைகளுக்கு உயர்தரப் படிப்பை வழங்குங்கள். அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துகின்ற வாய்ப்புகளை உருவாக்கி நீங்கள் தாருங்கள். அடுத்த தலைமுறை தமிழர்கள், நம்மைவிட அதிக உயரத்தில் இருக்கவேண்டும். அதே சமயம் சக தமிழர்களையும் வளர்த்து விடவேண்டும்.
உங்களுடைய பரபரப்பான வாழ்க்கையை கடந்து, ஆண்டிற்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள். உங்களால் முடிந்ததை தமிழ்நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுங்கள். இங்கே இருக்கின்ற வேலைவாய்ப்புகளைப் பற்றி, தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்முடைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்கும் உலக கதவுகளை திறந்துவிடுங்கள்.
தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை வெளிக்காட்ட கீழடியைத் தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் என்று அமைத்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய குழந்தைகளுக்கு அதையெல்லாம் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள்.
பழம்பெருமையை மட்டும் எடுத்துச் சொல்லாமல், நாம் எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும் கடந்து இன்றைக்கு தலை நிமிர்ந்திருக்கிறோம் என்பதையும் சொல்லித் தாருங்கள்.
இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், எப்போதும் தமிழர்களுக்குள்ளே ஒற்றுமை நிலவவேண்டும். இந்த இனம் எப்போதும் முன்னேற்றப் பாதையில் மட்டும்தான் பயணிக்கவேண்டும்! அதற்காகத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான், நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை உங்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துறை சார்பில், செய்து கொண்டிருக்கின்ற முக்கியமான சில முன்னெடுப்புகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்,
கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனவரி 12-ஆம் நாளை, அயலகத் தமிழர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும், இந்த விழாவுக்கு 62 நாடுகளிலிருந்து தமிழர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்!
அயலகத் தமிழர் நலவாரியம்,
அயலகத் தமிழர்களுக்கான டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன்,
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி,
தமிழ்நாட்டிற்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷுரன்ஸ்
என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகின்றோம்.
இது எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், “வேர்களைத் தேடி” என்ற திட்டம்! புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளை, மாணவர்களை தங்களுடைய வேர்கள் இருக்கின்ற நம்முடைய தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய வரலாற்றை, பண்பாட்டை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி தமிழ்நாட்டிற்கு வந்த பலர், சில தலைமுறைகளாக விட்டுச் சென்ற சொந்தங்களை தேடிக் கண்டுபிடித்து உருகி இருக்கிறார்கள்.
நம்மைப் பொறுத்தவரைக்கும், வாழ்வதும், வளர்வதும், தமிழும் தமிழ் இனமுமாய் இருக்கவேண்டும்!
தலைவர் கலைஞர்தான் சொல்வார், “தமிழர்களாக ஒரு கூட்டத்திற்கு வந்து அமர்ந்து, எழுந்து செல்லும் போதும் தமிழர்களாக கலைந்து செல்லும் காலம் வந்தால் அதுதான் நான் எதிர்பார்க்கும் இலட்சிய வெற்றி!” என்று சொல்வார். அந்தளவுக்கு வேற்றுமைகள் நிறைந்திருந்த சமூகம் இன்றைக்கு, இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதுதான் நம்முடைய வெற்றி!
தமிழர்கள் உலகத்திற்கானவர்கள்! யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவர்கள் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர்கள் - இந்தப் பெருமையை, அடையாளத்தை நம்முடைய செயல்களால் நிலைநாட்டவேண்டும்!
சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள், நம்மை பிரிப்பதோடு, நம்முடைய இனத்தையே வளரவிடாது.
நம்மை எதுவெல்லாம் பிரிக்குமோ, அதையெல்லாம் நாம் மறக்கவேண்டும்! எதுவெல்லாம் நம்மை இணைக்குமோ, அதையெல்லாம் நாம் நினைக்கவேண்டும்! எனவே, தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது!
அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வாருங்கள், உங்களுக்காக உங்கள் சகோதரனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அங்கே இருப்பான். அந்த நம்பிக்கையோடு வாருங்கள்.
இங்கே நீங்கள் கொடுத்திருக்கின்ற வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் என்னுடைய அன்புதான், என்னுடைய நன்றி! என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன் – பெருமைப்படுகிறேன் – பூரிப்படைகிறேன் – புலங்காகித உணர்வோடு நின்று கொண்டிருக்கிறேன். நான் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு, எத்தனையோ மாநிலங்களுக்கு, எத்தனையோ நாடுகளுக்கு அரசின் சார்பில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில், மேயராக இருந்து பொறுப்பேற்று பல நாடுகளுக்கு சென்றிருக்கக்கூடிய அந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கிறேன்.
இப்போது தமிழர்களாக இருக்கக்கூடிய உங்களை எல்லாம் சந்திக்க வந்திருப்பதில்தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லையில்லா அன்போடும், மறக்க முடியாத நினைவுகளோடும் தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து, இந்த நட்பும், இந்த தொடர்பும், தொடர்ந்து இருக்கவேண்டும் – இருக்கிறது – இருக்கும் என்ற நம்பிக்கையோடு, இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து, விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!