இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டி இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்க வேண்டுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரித்து உரையாற்றினார்.
அதன் விவரம் :
நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டி அவர்களை தமிழ்நாட்டுக்கு வருக, வருக, வருக என வரவேற்கிறேன்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டி அவர்களே... அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றுகின்ற நீங்கள், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்! அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்!
உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!
தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய Profile-யை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971-ல் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர் - ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர் - ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி - கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக தன்னுடைய career-ல் முன்னேறி, மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்கு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட தன்னுடைய அறுபது ஆண்டுகால வாழ்வை, சட்டம் - நீதி ஆகியவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார். இவர் நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர்.
கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஏன் இன்றைக்கு தேவைப்படுகிறார் என்றால், பா.ஜ.க.வினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதியரசரான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார்! மாண்புமிகு சுதர்சன் ரெட்டி அவர்களை பொறுத்த வரைக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்!
அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியது! அவர் பேசியதை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், "இது திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோருடைய மண். போராட்ட குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை" என்று சொல்லி, "புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கின்ற தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது. நான் - எனது - என்னுடையது என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முகத் தன்மையையோ, கல்வியின் ஜனநாயகப் பரவலையோ இது உருவாக்காது" என்று தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ்நாட்டின் உணர்வுகளை உறுதியுடன் வெளிப்படுத்தினார். இப்படி, அரசியலமைப்புச் சட்டத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா?
ஆனால், முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரை மாண்புமிகு உள்துறை அமைச்சர் என்னவென்று விமர்சிக்கிறார்? நக்சல் என்று சொல்கிறார்! ஒரு உள்துறை அமைச்சர், தன்னுடைய பொறுப்பை மறந்து, ஒரு முன்னாள் நீதியரசர் பற்றி அபாண்டமாக பேசி இருக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை! அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது? அரசியல் எதிரிகளைப் பழிவாங்க, புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திவிட்டு இருக்கிறது. தன்னாட்சி அமைப்புகளை, பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிறார். ஆதரிப்பதுதான் நம்முடைய முன்னால் இருக்கின்ற கடமை!
ஆனால், பா.ஜ.க.வோ, தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு, தமிழர் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். இதையெல்லாம் ரொம்ப பழைய ட்ரிக்! தனிமனிதர்களைவிட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும். தனி மனிதர்கள் என்பவர்கள் வெறும் பிம்பங்கள்தான். அதனால், எந்தக் கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ, அதைத்தான் ஆதரிக்க வேண்டும்.
எனவே, சட்டநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய மாண்பமை சுதர்சன் ரெட்டி அவர்கள் இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்று வரவேண்டும் என்று வாழ்த்தி, விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!
-------