சட்ட மசோதாக்கள் மீது குறைந்தது ஒரு மாதம் முதல் அதிக பட்சமாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ஒன்றிய அரசு குடியரசு தலைவர் மூலம் இதற்கு விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இரண்டாவது நாள் விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
வாதத்தின் போது, அரசியல் சாசனம் இயற்றிய போது ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையில் நல்லிணக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொலைநோக்கு பார்வையை நாம் நிறைவேற்றி இருக்கிறோமா? என்று ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர், ஆளுநர்கள் மீது அதிக அளவில் தற்போது வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சில ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்றும், வழக்கு விசாரணையின் போது அதனை சந்தித்து அனுபவம் தங்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.