தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் தொடர்ந்து முரணாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர நாளை முன்னிட்டு விடுத்த தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய ஆளுநர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கம் அளித்து, வழங்கிய தீர்ப்பையும் மதிக்கவில்லை.
அண்மையில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களிலும் கலை, இலக்கியம் உள்ளிட்ட படைப்புத் துறையிலும் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்துள்ள கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
இந்த மசோதாவை கடைசி நாள் வரை, கிடப்பில் போட்டு வைத்து, இறுதியாக குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பிறவி மச்சத்தை மாற்ற முடியாது என்பது போல், ஆளுநர் அத்துமீறல் தொடரும் நிலையில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காது.