அரசியல்

தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க முன்வைத்த 5 கோரிக்கைகள்! - பட்டியலிட்ட என்.ஆர்.இளங்கோ எம்.பி!

“ஒன்றிய பா.ஜ.க.வினர் மிக மோசமாக தேர்தல் ஆணையத்தை தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் வாக்கு திருட்டு உள்ளிட்ட பெரிய மோசடியை செய்துள்ளார்கள்.”

தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க முன்வைத்த 5 கோரிக்கைகள்! - பட்டியலிட்ட என்.ஆர்.இளங்கோ எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படும் வகையில் குளறுபடி நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் வாக்கு திருட்டும், வாக்காளர் உரிமம் சார்ந்த முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அடுத்து வர இருக்கிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் இதுபோன்ற முறைகேடுகள் நிகழக்கூடாது என்பதற்காக, தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, “தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவினை தந்திருக்கிறோம். அந்த கோரிக்கைகளில் முதலாவதாக, 01.05.2025 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி, இறந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும்;

இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்தின் நிறைய கையேடு புத்தகங்கள் உள்ளன, அந்த கையேடுகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தினுடைய இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. அவற்றை தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளில் தர வேண்டும் என்ற கோரிக்கையையும்;

மூன்றாவதாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாக நிலை அலுவலர்களையும், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படக்கூடிய பாக நிலை முகவர்களையும் இணைந்து செயலாற்ற நடைமுறைகளை வகுத்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும்;

நான்காவதாக, வாக்குப்பதிவில் ஏற்பட்டு இருக்க கூடிய சில திருத்தங்கள் முறையற்றது, அந்த முறையற்ற சில திருத்தங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்;

ஐந்தாவதாக, எப்படி பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறதோ? அதைபோல் தமிழ்நாட்டிலும் நடக்க இருப்பதால், இங்கே ஆதார் எண்ணையும், குடும்ப அட்டையையும் ஒரு வாக்காளருடைய அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் கேட்டு இருந்தோம்.

தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க முன்வைத்த 5 கோரிக்கைகள்! - பட்டியலிட்ட என்.ஆர்.இளங்கோ எம்.பி!

இந்த ஐந்தாவதாக உள்ளதைத் தவிர, மற்ற நான்கையும் உடனே பரிசீலித்து ஆவணம் செய்வதாக தேர்தல் ஆணையம் சொன்னது. ஆனால் இதுவரையில் அந்த வழியில் எந்த ஒரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

எனவே, இவற்றையெல்லாம் வலியுறுத்தி இன்று நடந்த கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

பீகார் மாநிலத்தில் நடக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழந்து நிற்கிறார்கள். அதற்கு உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் தர மறுக்கிறது. இந்தியா கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்க கூடிய திமுக, இந்த தேர்தல் ஆணையத்தின் செயலை எதிர்க்கும். எதிர்த்து போராடும்.

எனினும் கூட தமிழ்நாட்டில் அப்படி ஒரு சிறப்பு திருத்தம் நடைபெற்றால், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் களத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, இங்கே அதுபோன்ற எந்த வாக்குகளையும் நீக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கடமை என்று நினைக்கிறோம். அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் EVM வாக்கு இயந்திரம் அறிமுகப்படுத்தியபோது, இதே பா.ஜ.க.தான் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் உடைய கைப்பாவையாகச் செயல்படுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.

இப்போது எப்படி மாறிவிட்டது. இவர்கள் மிக மோசமாக தேர்தல் ஆணையத்தை தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு, வாக்காளர் பட்டியலில் வாக்கு திருட்டு உள்ளிட்ட பெரிய மோசடியை செய்துள்ளார்கள்.

ராகுல் காந்தி சொன்னதை போல, கர்நாடக மாநிலத்தில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலம், ஒரிசா மாநிலம் உள்ளிட்ட எல்லா மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலை முறையற்ற வகையில் திருத்தங்கள் செய்து, வெற்றி பெற்றுகொண்டுள்ளார்கள்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories