துரோகத்தின் வாழும் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்டுகள் பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர் என CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உண்ட வீட்டில், கன்னக்கோல் போடும் எடிப்பாடியர் கம்யூனிஸ்டுகள் பற்றிப் பேச தகுதியற்றவர்
அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி ழனிசாமி கம்யூனிஸ்டுகள் குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறு பேசி வருகிறார். அவர், மெகா கூட்டணி அமைக்கப் போவதாக ஆரவாரமாக முழங்கினார். அவை எதுவும் நடைபெறவில்லை. அதனால் ஏற்பட்ட விரக்தியில் விழுந்துள்ளார். துரோகத்தின் வாழும் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி கே.பழனிசாமி, கம்யூனிஸ்டுகள் பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1999 ஜூலை 4 ஆம் தேதி சென்னை கடற்கரை சீரணி அரங்கில் முஸ்லீம் மக்கள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய, அப்போதைய பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, “இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்திரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் பாஜக ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளாது” என்று தமிழக மக்களுக்கு உறுதியளித்தார். அவர் வழங்கிய உறுதிமொழியை வாழும் காலம் வரை காப்பாற்றினார். எடப்பாடியார் குலசாமியாக வணங்கி வரும் ஜெ.ஜெயலலிதாவின் உணர்வுக்கும், உறுதி மொழிக்கும் துரோகம் செய்தததையும் இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் நாடு மறந்துவிடவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, ஒன்றிய அரசின் அதிகாரத்துடன் பாஜக-அதிமுக அரசை கைப்பற்ற எத்தனித்த போது, அதிலிருந்து தப்பிக்க கூவத்தூரில் கூடி, எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தவர்களுக்கு துரோகம் செய்து, அந்தக் கட்சியை சிதறு தேங்காயாக உடைத்து, நொறுக்கி தெருவில் எறிந்து விட்டு, கம்யூனிஸ்டுகள் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஏப்ரல் 11 ஆம் தேதி அறிவித்தார். மகாப் பெரிய (?!) கட்சியின் பொதுச் செயலாளர் கை கட்டி, வாய்பொத்தி நின்ற கேவலமான காட்சி மக்கள் மனதில் பதிந்து நிற்கிறது. கட்சித் தலைவர், எந்தக் காலத்திலும் உறவு கிடையாது என நிராகரித்த பாஜக கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட, ஆரம்ப நாளிலிருந்து அதிமுக தொண்டர்கள் எடப்பாடியாரின் துரோகத்துக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். அவர்களை அமைதிப்படுத்த முடியாத, எடிப்பாடி அமைதியிழந்து, ஆத்திரத்தில் மூளை கலங்கி போயுள்ளார். புத்தி தடுமாற்றத்தில் கம்யூனிஸ்டுகள் மீது பாய்ந்து வருகிறார்.
திமுகழகத்தின் தலைமையில் இயங்கி வரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த, பாஜகவுடன் சேர்ந்து பல முயற்சிகளை செய்து பார்த்து, அதில் படுதோல்வி கண்டு “இலவு காத்த கிளியாக” பேசி வருகிறார்.ஆளுநர் திரு ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை எதிர்த்து நடந்த முற்றுகை போராட்டம், தொடங்கி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வரும் முறைகேடுகள் வரை நூற்றுக்கணக்கான பெரும் போராட்டங்களில், பல்லாயிரம் பேர் கலந்து கொண்டபோது, அவர், தூக்கத்தில் இருந்தாரா? என்ற வினா எழுகிறது.
பாஜக ஒன்றிய அரசின் தொழிலாளர்கள் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடத்திய நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த மகத்தானப் போராட்டத்தில் பங்கேற்காமல் அஇஅதிமுகவும் அதன் தொழிற்சங்க பேரவையும் தொழிலாளி வர்க்கத்துக்கு இழைத்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது.
கம்யூனிஸ்டுகள் கட்டெறுப்பாகி விட்டதாக சிறுமைப் படுத்தி வரும் எடப்பாடியின் துரோகச் செயலை தோலுரித்து தோரணம் கட்டும் போது, அதன் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.வகுப்புவாத, மதவெறி, சாதி வெறி சக்திகளுக்கு தங்கத் தாம்பாளம் ஏந்தி நிற்கும் அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் வகித்து வரும் பொறுப்புக்கு தக்கபடி, பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது"என்று கூறியுள்ளார்.