அரசியல்

“மருத்துமனையிலும் மக்கள் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

“உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், அதிகாரிகளை அழைத்து அன்றாடம் மக்கள் நலப் பணியாற்றும் ஒரு முதலமைச்சரை, நமது தளபதி மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல் கண்டதில்லை.”

“மருத்துமனையிலும் மக்கள் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

எதிரிகள் விலை போகும் விபீடணர்களைக் கொண்டெல்லாம் என்ன வியூகம் வகுத்தாலும், அடுத்து வரும் தேர்தலில் 200–க்கும் அதிகமான இடங்களைப் பெற்று ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இப்படி ஒரு முதலமைச்சரை நாடு கண்டிருக்குமா? என்று வியக்கத்தக்க வகையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது கடமை உணர்வும், மக்கள் தொண்டும், எடுத்துக் கொண்ட பொறுப்பை எவ்வாறு செம்மையாகச் செய்வது என்ற நோக்கும் உலகத்தை வியக்கச் செய்கின்றன!

மருத்துவமனையில், தான் சிகிச்சை பெறுகின்ற நிலையிலும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வரவழைத்து, இடையறாமல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று சொல்லக் கூடிய அளவிற்கு தன்னுடைய அன்றாடப் பணியைக் கவனிப்பதைப் பார்க்கும் போது, ஒரு பக்கத்தில் எல்லையற்ற நிம்மதி!

தன்னுடைய உழைப்பால் இன்னும் தனித்தன்மை மிக்கவராகிறார்

உண்மையான திராவிட இயக்க வரலாற்றில், இப்படித்தான் ஒவ்வொரு முதலமைச்சரும் தங்களின் மக்கள் பணிகளில் சிறப்பாக முத்திரை பதித்திருக்கிறார்கள் என்றாலும், இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய நாயகனான நமது முதலமைச்சர் தமது உழைப்பால் மேலும் தனித்தன்மை மிக்கவராகிறார்.

அவருடைய உடல்நலம் சற்று தளர்ந்தது என்றாலும் கூட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கூட மக்களை என்றும் மறக்காத, மக்களோடு என்றைக்கும் தொடர்போடு இருக்கிற ஒருவர், மக்கள் தான் என்னுடைய எஜமானர்கள் என்ற உணர்வோடு, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு, மருத்துவ அறைகளையே தலைமைச் செயலகமாகவும், முதலமைச்சருடைய முகாம் அலுவலகமாகவும் ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், அவருடைய ஆட்சி, வெறும் காட்சியாக இல்லாமல், இனத்தின் மீட்சியாக அமைந்திருக்கிறது.

“மருத்துமனையிலும் மக்கள் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!

அதன் காரணமாகத்தான் கொள்கை எதிரிகள், விபீடணர்களையும், தங்களை விற்றுக் கொள்கிறவர்களையும் எளிதில் குறைந்த விலையில் வாங்கி வைத்துக் கொண்டு, தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழ் மண்; பகுத்தறிவு மண்; பெரியார் மண். இந்த மண்ணிலே இருக்கிறவர்கள் எந்த வித்தைகளுக்கும் எளிதில் ஏமாந்து விட மாட்டார்கள்.

இப்போது புதிய மாய மான்கள் கலைத்துறையிலும், கலாச்சாரத் துறையிலும் நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்லி, பக்தி, பக்தி, பக்தி என்று போதை மாத்திரைகளையும் அதில் கலந்து கொடுத்து, வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களை தங்கள் வயப்படுத்திவிடலாம் என்பதற்காக, பிரதமரிலிருந்து அவரது தளபதியான அமித்ஷாவிலிருந்து பல்வேறு நிலைகளில் முயல்கிறார்கள்.

இதற்குத் துணைபோகிறவர்கள் போகட்டும். எந்த வித்தைகளைச் செய்தாலும், எவ்வளவு மாயமான்களை அனுப்பினாலும், தமிழ்மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள். புரிந்துகொண்டவர்களே!

திராவிடக் கொள்கைப் பயிரின் பெருமை!

நம்முடைய முதலமைச்சர் போன்றவர்களுடைய உழைப்பை மக்கள் மதிக்கத் தவறமாட்டார்கள். அவதூறுகளும், தரக்குறைவான குற்றச்சாட்டுகளும் எடுபடாது. எதிர்ப்புகள் வர வர, அவற்றையே உரமாக்கிக் கொண்டு வளருவது தான் திராவிடக் கொள்கைப் பயிரின் பெருமை!

அவர்கள் தூற்றட்டும்; அந்தத் தூற்றுதல்கள் எல்லாம் நம்மை உறுதிப்படுத்தும், உண்மையானவர்கள், உறுதியானவர்கள், உலகை அறிந்தவர்கள், ஜனநாயகத்தைக் காக்கத் துணிந்தவர்கள், சமூகநீதிக்காகவே களத்திலே நிற்பவர்கள்! அத்தனைப் பேருடைய ஒருமித்த ஆதரவும் இந்த அரசுக்கும், இந்த முதலமைச்சருக்கும் என்றும் இருக்கும். ஆட்சியைக் காப்பாற்றுகின்ற சிப்பாய்களாக அவர்கள் இருப்பார்கள்.

நன்றியை மறக்காமல், செய்த காரியத்தைப் பாராட்டுவோம்!

மருத்துவமனையில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் வித்தியாசம் இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கடமை உணர்வோடு நாளும் செயல்படுகிறார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று வெளியில் வந்து மக்கள் பணியாற்ற, நாம் எல்லோரும் ஒத்துழைப்போம். நன்றியை மறக்காமல், செய்த காரியத்தைப் பாராட்டுவோம்!

மருந்துகளைவிட, மருத்துவர்களைவிட, மக்கள் தொடர்புதான் அவருக்கு விரைவில் குணமாகும் மிகப்பெரிய மருத்துவமாகும்.

எதிர்க் கட்சிகளுக்குத் தேர்தல் தான் ஒரே குறி. அதற்காகத் தான் கொள்கைகளை விற்று, வெற்றிகளைப் பெறலாம் என்று கருதுகிறார்கள். அது ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது; எடுபட விடமாட்டோம் என்பதை உறுதியுடன் கூறி, முதலமைச்சர் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளையும் நமது ஆட்சிதான்!

எத்தனைப் பட்டாளங்களைக் கூட்டிவந்தாலும், பொய்யுரையும், புனைவுரையும், கதைகளும், ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற பெயராலே உண்மைக்குத் திரையிடுவதும், மற்ற மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மிரட்டினாலும், ஒரு போதும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைத்துவிட முடியாது. நாளையும் நமது ஆட்சிதான்; 2026இலும் 200–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பார்கள். மீண்டும் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!

banner

Related Stories

Related Stories