மாநிலங்களவையில் 6 தமிழ்நாட்டு எம்.பி.-க்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து முதலமைச்சர் தெரிவித்த நெகிழ்ச்சி கருத்துக்கள் விவரம் :
நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர்.
1978-இல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முதன்முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அண்ணன் வைகோ அவர்களின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81-ஆவது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.
அண்ணன் வைகோ அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை பணியாற்றிய காலத்தில், ‘நாடாளுமன்றப் புலி’ என்கிற அளவிற்கு அவர் குரல் அங்கு ஒலித்தது மட்டுமின்றி, கழக மேடைகளிலும் சிங்கமென அவருடைய கர்ஜனை கேட்கும். அவரை அழைத்து பல கூட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
அவருடைய பேச்சில், அரசியல் வரலாற்றைக் கேட்டிருக்கிறேன். நேற்று (ஜூலை 24) மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் அண்ணன் வைகோ அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், கலைஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறன் அவர்களையும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், எனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தேன். திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்களின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.