அரசியல்

இந்தியாவை இயக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்...பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்த தமிழ்நாடு : முரசொலி !

மும்மொழிக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் பின்வாங்கி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இந்தியாவை இயக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்...பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்த தமிழ்நாடு : முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (25.7.2025)

எதிர்ப்புக்குப் பிறகு பின் வாங்கல்!

மும்மொழிக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் பின்வாங்கி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மும்மொழிப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிலைப்பாடு மாறி இருக்கிறது. “மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளதால் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்து மாநிலத்தின் தேவைகள் மற்றும் பன்முகத் தன்மையைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவுகள் எடுக்கலாம். மும்மொழிக் கொள்கையை நெகிழ்வான முறையில் பயன்படுத்தலாம். எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. இது குறித்து கல்வியாளர்களுடன் ஒன்றிய அரசு தொடர்ந்து ஆலோசனைகள் செய்து வருகிறது” என்றும் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி சொல்லி இருக்கிறார்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மற்ற மாநில மொழிக்காரர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு திடீர் பல்டி அடித்திருப்பதையே இது காட்டுகிறது.

இந்தியாவை இயக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்...பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்த தமிழ்நாடு : முரசொலி !

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறது தமிழ்நாடு. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், மிகக்கடுமையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார். 18.10.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை. தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்கப்படக் கூடாது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அவர்கள், இந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சி எடுத்தது பா.ஜ.க. அரசு. அதனையும் முதலமைச்சர் அவர்கள் ஏற்கவில்லை. “தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்வித் துறைக்குத் தர வேண்டிய ரூ.2000 கோடியைத் தருவோம்” என்று நிபந்தனை விதித்தார்கள். ‘ரூ.2000 கோடி அல்ல, 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்’ என்று போர்ப் பிரகடனம் செய்தார். இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தமிழ்நாடு அரசின் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் மற்ற மொழிக்காரர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. இந்தியால் எத்தனை மொழிகள் அழிந்துள்ளன என்று முதலமைச்சர் சொல்லிக் காட்டிய பட்டியல், வட மாநிலத்தவர்கள் கண்ணை லேசாகத் திறந்தது. ‘தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது உண்மைதான்’ என்று பலரும் சமூக வலைதளங்களில் எழுதத் தொடங்கினார்கள். இந்தியா முழுக்க பலருக்கும் மொழித் திணிப்பின் கொடுமையை இது உணர்த்தியது.

இந்த வரிசையில் மராட்டியத்தில் நடந்த போராட்டம் என்பது மிக முக்கியமானது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் சட்டத்தை அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக மராட்டிய மாநிலத்தின் முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்தும் (தமிழ்நாட்டைப் போலவே) போர்க்குரல் எழுப்பின.

இந்தியாவை இயக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்...பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்த தமிழ்நாடு : முரசொலி !

அரசியல் ரீதியாக இருபது ஆண்டுகளாக பிளவுபட்டு இருந்த பால்தாக்கரே குடும்பமே ஒன்று பட்டது. இந்தித் திணிப்புக்கு எதிராகவும், மராட்டிய மொழியை ஆதரித்தும் மகாராஷ்டிரா முழுக்க போராட்டம் நடந்த நிலையில் மும்மொழித் திணிப்பில் இருந்து பா.ஜ.க. கூட்டணி அரசு பின்வாங்கியது.

மும்மொழிக் கொள்கையை மாநில அரசே முடிவு செய்யலாம் என்று முடிவெடுத்துள்ள ஒன்றிய அரசு மேலும் சில முடிவுகளை எடுக்க வேண்டும். மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்வித் துறைக்குத் தர வேண்டிய பணத்தைத் தருவோம் என்ற முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைப் பெற்றுள்ளார். “சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?” என்பது இவர் கேட்ட கேள்வி. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு எந்த நிதியும் அனுப்பவில்லை என்று பதில் வந்துள்ளது. மொழித்திணிப்பு என்பது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு எத்தகைய அநீதியை இழைக்கிறது என்பதை இது காட்டுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது நடவடிக்கைகளை முற்றிலும் மாற்றியாக வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் கோவை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தனிப்பட்ட உரையாடலில், “தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லும் சில முன்னெடுப்புகள் தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் பரவுகிறது. அதுதான் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது” என்று சொல்லி இருக்கிறார். அத்தகைய நெருக்கடிதான், பா.ஜ.க. அரசை பின் வாங்க வைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இங்கிருந்தபடியே இந்தியாவை இயக்கி வருகிறார் என்பதை இது உணர்த்துகிறது.

banner

Related Stories

Related Stories